அமேசான் நடத்தும் Pen To Publish போட்டிக்காக ஹேமா ஜே அவர்களால் எழுதப்பட்ட நாவல் “பூக்கள் விற்பனைக்கல்ல”. குடும்ப நாவல் வகையைச் சேர்ந்த கதை.
பொதுவாகக் குடும்ப நாவல்களை எழுதுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. பெரும்பாலும் பெண் வாசகிகள் அதிகமாக இருக்கும் இந்த வகை பிரிவில், காதலையே பல்வேறு விதமாய்க் கொடுத்தாலும் அதை ரசித்துப் படிக்க விரும்பும் வாசகி / வாசகர்களுக்கு என்ன விதமான புதுமையான முயற்சிகளைத் தந்து விட முடியும் என்ற எழுத்தாளர்களின் உளவியல் திறமை சார்ந்த ஒன்று அது.
காதலைத் திகட்டத் திகட்டக் கொடுத்தும், இன்னும் பத்தாமல் போதலை போதலை என்று துடிக்கும் இரண்டு துறை இருக்கிறதென்றால், அது ஒன்று சினிமா, இன்னொன்று இந்தக் குடும்ப நாவல்கள் என்று சொல்லலாம்.
தமிழ் சினிமாவைப் போன்றே இந்தக் குடும்ப நாவல் பிரிவிலும் அதை, அதன் டெம்ப்ளேட்டிலிருந்து வெளியே எடுத்து வந்து விட வேண்டும் என்று பல எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக முயன்று கொண்டிருக்கிறார்கள். ஹேமா ஜேயின் இந்த நாவல் அப்படியான மிகச் சிறந்த முயற்சிகளில் ஒன்றாகச் சொல்லலாம்.
எம்ப்ரியாலஜிஸ்டாகப் பணிபுரியும் நாயகியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த நாவல் இந்திய இல்லங்களின் மிக முக்கியப் பிரச்சினையான குழந்தையின்மை, அது தரும் உளவியல் பிரச்சினைகள், மன அழுத்தங்கள், Surrogacy, Fertility மருத்துவமனைகள் மற்றும் அது சார்ந்த அனைத்து மருத்துவ அம்சங்களையும் இயல்பாய்ப் பேசிச் செல்கிறது.
காதலையும், உறவுச் சிக்கல்களையும் தாண்டி ஒரு குடும்ப நாவலில் இத்தனை டீட்டெய்லிங் கொடுத்து விட முடியுமா என்று நாவலாசிரியர் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். இந்த டீட்டெய்லிங் கூடக் கொஞ்சம் மெனக்கெட்டு கூகிள் செய்து, நாலு பேரோட பேசித் திரட்டிவிட்டாலும், அதை கதையின் போக்கில் எங்கேயும், எந்த இடத்திலும் கொஞ்சம் கூட உறுத்தாதவாறு கொடுத்ததற்காகவே ஒரு பெரும் பாராட்டைக் கொடுக்கலாம்.
டீட்டெய்லிங் – ரொம்பச் சுலபமாக ஒரு விமர்சகனால் ஒரு வார்த்தையில் முடித்து விட முடிகிறது இல்லையா? ஆனால் இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கும் டீட்டெய்லிங் அந்த வார்த்தைக்குள் அடங்குமா என்று தெரிய வில்லை. ஒரு குறிப்பிட்ட துறை சார் நாவலை எழுதும் போது, இவ்வளவு டெக்னிக்கல் டெர்மினாலஜீஸ் தேவையா? நம் ரீடர்ஸ் இதை விரும்புவாங்களா? இவ்வளவு நிபுணத்துவத்தைக் காட்டினால் அவர்கள் சோர்ந்து விட மாட்டார்களா? நம் ரீடர்ஸ் விரும்பும் வாடிக்கையான கச்சாப் பொருட்கள் இதில் அவ்வளவாய் இருக்காதே என்ற எந்த விதத் தயக்கமும் இன்றி இறங்கி அடித்ததற்காக வாழ்த்துகள்.
அதிலும் குறிப்பாக மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மருத்துவர்களின் மேன்மையையும் அவர்களுடைய பணிச் சுமையையும், அவர்களுடைய வேலைகளுக்குப் பின்னால் இருக்கும் அகச்சிக்கல்களையும் பேசும் இந்த நாவல் வெளி வந்திருப்பது மிகவும் தேவையான ஒன்று.
ஒட்டு மொத்த கதையில் மிகவும் பிடித்த இரண்டு வரிகள், “ஃபேன்டஸி கதைகளில் வருவது போல தேவதைப் பெண் ஒருத்தி காற்றில் தோன்றி கையில் வைத்திருக்கும் மந்திரக்கோலை நீட்டியபடி இங்கு வரும் பெண்களுக்கு குழந்தை வரம் கொடுத்தால் எத்தனை நன்றாக இருக்கும்?” என்பதே! இந்த வரிகளுக்குப் பின் இருக்கும் சோகம் கலந்த அழகியலை ரொம்ப நேரம் ரசிக்க முடிந்தது.
‘ஆயாளும் ஞானும் தம்மில்’ என்ற ஒரு மலையாள ஃபீல் குட் திரைப்படம். ஒரு சீனியர் டாக்டருக்கும், அவரிடம் ஜூனியராக பொறுப்பில்லாத டாக்டர் இளைஞனுக்குமான பந்தத்தைப் பற்றிப் பேசும் கதை. அந்த விடலை இளைஞன் எப்படி மெல்ல மெல்ல இன்ஸ்பையர் ஆகி ஒரு சிறந்த மருத்துவனாக உருமாறுகிறான் என்பதை அழகாய்க் கொண்டு செல்லும் படம். ஹேமாவின் இந்த நாவல் அந்தப் படத்தை சில இடங்களில் நினைவுறுத்தியது. இறுதியாக அந்தப் படத்த்தைப் போலவே ஒரு அழகான ஃபீல் குட் நாவலாய் முடிந்திருக்கிறது.
கதையளவில் படத்திற்கும் நாவலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு நல்ல விஷயத்தை நினைத்தால் அதனுடன் ஏதேனும் ஒரு வகையில் கொஞ்சமேனும் தொடர்பு படுத்தும் இன்னொரு விஷயத்தை மனம் தானாக நினைக்க ஆரம்பித்து விடும். அப்படியான ஒப்பீடு மட்டுமே!
“உலகத்தை நீ வெறுமனே கறுப்பு வெள்ளையாகவே பார்க்கிறாய். கறுப்புக்கும் வெள்ளைக்கும் நடுவே நம் வாழ்க்கையில் பல வண்ணங்கள் இருக்கின்றன. அதைக் கொஞ்சம் உத்து கவனிக்கப் பழகு.” நாயகன் நாயகியிடம் சொல்லும் வசனம் இது.
கதையின் அடிநாதமும் கூட இதுதான். இந்த பேஸ் லைனை மையமாக வைத்து, மனிதர்களின் நுண் உணர்வுகளை, அதன் ஆழங்களை, அது பேசத் தயங்கும் சிக்கல்களை தன் எழுத்தில் வெளிக் கொணர்ந்திருக்கிறார்.
குடும்ப நாவல் குறித்து ஏதேனும் விமர்சனம் எழுத நினைக்கும் போது இது ஒரு சிக்கல். ஸ்பாய்லர் இல்லாமல், கதையைச் சொல்லாமல் வெளிச்சுற்றைச் சுற்றியே என்ன பேசி விமர்சனம் செய்து விட முடியும் என்பதே. அதனால் நீங்களே வாங்கிப் படியுங்கள். கண்டிப்பாய் ஏமாற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
https://www.amazon.in/gp/product/B07ZS7NX7N/ref=dbs_a_def_rwt_hsch_vapi_tkin_p1_i0
நாவலாசிரியர் இதுவரை பெரிதாய் மார்க்கெட்டிங் எதுவும் செய்ய முயல்வது போல் தெரிய வில்லை. தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்த வரை இது வரை எழுதப்பட்டவற்றில் கடைசி ஐந்து புத்தகங்களில் ஒன்றாக தேர்வு பெறுமளவிற்கு அனைத்துத் தகுதிகளையும் இந்த நாவல் கொண்டிருக்கிறது என்று சொல்வேன். அதற்கு மேல் நடுவர்கள் பாடு. My Best Wishes Hema Jay.