Shadow

சைக்கோ விமர்சனம்

psycho-movie-review

கண் பார்வையற்ற காதலனின் கண் எதிரே அவரது காதலி, சைக்கோ கொலைகாரனால் கடத்தப்படுகிறார். காதலியை மீட்க நாயகன் போராடி எழுவது தான் இப்படத்தின் கதை.

படத்தின் முதல் ஜீவன் இளையராஜா தான். அவரின் இசை இன்றி இப்படத்தோடு நிச்சயம் ஒன்ற முடியாது என்பது உறுதி. அடுத்து ரன்வீரின் அட்டகாசமான ஒளிப்பதிவு. இவை இரண்டும் தான் சைக்கோவின் கடவுள்கள். பெண்களின் தலையை வெட்டும் வித்தியாச சைக்கோ, கண்பார்வையற்ற ஹீரோ, வீல்சேரில் அமர்ந்தும் சிங்கமாக கர்ஜிக்கும் கதையின் நாயகி, ஒரே ஆடையில் ஒரே அறையில் தேங்கிக்கிடக்கும் கதாநாயகி, எந்தத் துக்கத்திலும் பாட்டுப் பாடும் காவல் அதிகாரி என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிஷ்கினின் தனித்துவ வார்ப்பு. ஆனால் யாருடைய கதாபாத்திரமும் வலிமையாக எழுதப்படவில்லை. அதனால் அவர்களுக்கு நேரும் சுக துக்கங்களில் நம்மால் பங்கெடுக்க முடியவில்லை. இது, சைக்கோவில் உள்ள ஆகப்பெரும் பிரச்சனை.

முன்பாதி மெதுவாகச் சென்றாலும் ஏதோ பெரிதாக இருக்கு என்ற எதிர்பார்ப்போடு தான் செல்கிறது. படத்தின் மேக்கிங் படத்தில் உள்ள எல்லா லாஜிக் ஓட்டைகளையும் ஒட்டடை அடித்துத் துடைத்து விடுகிறது. என்றாலும் கோயம்புத்தூரில் சி.சி டிவி கேமராவே இருக்காதா என்ற கேள்வியைத் தவிர்த்துவிட்டுப் படத்தில் மூழ்கவே முடியவில்லை?

சைக்கோ கொலைகாரனைப் பிடிக்கிறேன் பேர்வழி என சிங்கம்புலி சீறி எழும் காட்சிகள் எல்லாம் காலக்கொடுமையில் சேர்க்க வேண்டிய காட்சிகள்.

சிறுவயதில் அன்பு மறுக்கப்பட்டாலோ, சிறுவயதில் தனது நியாயத்தைச் சொல்லவிடாமல் தடுத்தாலோ, அவர்கள் மனம் பிறழ்வுக்கு உள்ளாகி மனித வெறுப்பு வந்துவிடும் என்பதை க்ளைமாக்ஸில் மிஷ்கின் நிறுவுகிறார். அதற்காக அத்தனை கொலைகளைச் செய்தவரை நியாயப்படுத்துவது எவ்வகை நியாயம் என்ற கேள்வியும் எழுகிறது.

உதயநிதி க்ளீஷே இல்லாமல் நடித்துள்ளது ஆறுதல். க்ளீன் ஷேவ் செய்து போலிஸ் அதிகாரியாக வரும் ராம் தரமான தேர்வு. நித்யாமேனன் மிஷ்கினைப் பிரதிபலிக்கிறார். குரல் தான் செட்டாக மறுக்கிறது. கண நேரத்திற்குள் மனதிற்குச் செட்டாகி விடுகிறார் அதிதீ ராவ்.

லாஜிக் குறைகள் தாண்டி, ஒலி – ஒளி நுட்பத்தைப் பயன்படுத்திய விதத்தில் மட்டும், நிச்சயம் இப்படம் மாற்று சினிமா நோக்கிய தமிழ் சினிமாவின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி.

– ஜெகன் சேட்