Search

புத்தம்புது காலை விடியாதா… விமர்சனம்

முதல் லாக்-டவுனை அடிப்படையாகக் கொண்டு, ‘புத்தம்புது காலை’ எனும் ஐந்து குறும்படங்கள் கொண்ட ஆன்தாலஜி திரைப்படம் வெளியானது. தற்போது, பொங்கல் 2022 இன் சிறப்பு வெளியீடாக, ‘நியூ நார்மல்’ ஆகிவிட்ட இரண்டாவது லாக்-டவுனை மையமாக வைத்து, ‘புத்தம்புது காலை விடியாதா..’ எனும் ஆன்தாலஜி திரைப்படம் வெளியாகியுள்ளது. காதல், சுற்றி இறுக்கும் தனிமை, உற்றாரின் இழப்புகள், அவர்களது நினைவுகள் தரும் தாக்கம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் படம்.

லாக்-டவுனையும் ‘மாரி’த்தனமாக விளையாட்டாக அணுகியுள்ளார் இயக்குநர் பாலாஜி மோகன். அவரது முககவச முத்தம் என்ற குறும்படம், லாக்டவுன் இல்லா நாட்களுக்கும் பொருந்தும். அதாவது, பசுமாட்டைத் (காதல் கதை) தென்னை மரத்தில் (லாக்-டவுன்) கட்டிவிட்டார்.

இயக்குநர் ஹலிதா ஷமீமின் ‘லோனர்ஸ்’ படத்தில், பிரேக்-அப் ஆன ட்ராமாவில் இருந்து மீளாத நல்லதங்காளும், தன் வலியை வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாமல் அடைப்பட்டிருக்கும் இன்ட்ரோவெர்ட்டான தீரனும், தங்கள் தனிமையில் இருந்து வெளியேற நினைக்கின்றனர். மெய்நிகர் (Virtual) உலகில் ஒருவருக்கு ஒருவர் அந்நியர்களாக அறிமுகமாகி அழகான நட்பாக அதைக் கொண்டு செல்கின்றனர். நல்லதங்காளாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ் தான், ஜெய் பீம் படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாரா என நம்பமுடியாத அளவுக்குச் சிறப்பான வேறுபாட்டினை நடிப்பில் கொண்டு வந்துள்ளார். நல்லதங்காள் வாழும் அடுக்குமாடிக் குடியிருப்பு, தீரன் தங்கியிருக்கும் கடலோர மாளிகை ஆகிய மையப் பாத்திரங்களின் வாழ்விடம் மனதோடு ஒட்டாமல் சற்று அந்நியமாகத் தெரிந்தாலும், அது மறைந்து கதாபாத்திரங்களின் மனநிலையோடு பொருந்திப் போக முடிகிறது. ஹலிதா ஷமீமின் எல்லாப் படைப்புகளிலுமே, கதாபாத்திர வார்ப்பில் அவர் செலுத்தும் கவனம், அவரது படைப்பைப் பத்தோடு ஒன்றாக்காமல் தனித்துத் தெரியச் செய்கிறது. கடலலைகளின் இரைச்சல் போல், நல்லாவும் தீரனும், தங்கள் கதைகளைப் பேச்சிலேயே வெளிப்படுத்துகின்றனர். குறும்படத்திற்கான காலவரையறையில் இது தவிர்க்க முடியாது என்ற போதிலும், மற்ற நான்கு படங்களையும் ஒப்பீடும்போது இதில் பேச்சுச்சத்தம் மிக அதிகம்.

இயக்குநர் மதுமிதாவின் ‘மெளனமே பார்வை’யில் வசனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இசைபட வாழும் ஜோஜு ஜார்ஜுக்கும், நதியாவுக்கும், ஒரு சண்டை வந்து, ஒருவொருக்கு ஒருவர் பேசாமல் உள்ளனர். தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என தன்னைத் அறைக்குள் தனிமைப்படுத்திக் கொள்கிறார் நதியா. அவரது ஒவ்வொரு இருமலும், கொரோனா மனிதனிடம் உருவாக்கியுள்ள அச்சத்தின் எதிரொலியாக ஒலிக்க, ஜோஜு ஜார்ஜின் ஈகோ ஆட்டம் காணுகிறது. அனுபவம் மிகு நடிகர்களான நதியாவும், ஜோஜு ஜார்ஜும் தங்கள் சிறு சிறு பாவனைகளாலும் சிரத்தையின்றிப் பார்வையாளர்களைக் கட்டிப் போடுகின்றனர்.

இயக்குநர் சூர்யா கிருஷ்ணாவின் ‘தி மாஸ்க்’, சமூகம் கேட்கவோ, பார்க்கவோ விரும்பாத ஒரு கருவைத் தொட்டுள்ளது. அர்ஜுன், பாலைக் (Paul) காதலிக்கிறார். அதை வீட்டில் சொல்ல முடியாமல், தன் இயல்பை மூடி மறைத்து, சமூகத்திற்காக வேறொரு அடையாளத்தைச் சுமக்கிறார். மாஸ்க் என்பது இங்கே அடையாளத்தை மறைத்தல் என்பதற்கான குறியீட்டுத் தலைப்பு. படத்தின் கருவும், மனிதர்கள் சுமக்கும் அடையாளத்தைப் பற்றியே! தன் மகனின் பார்வையில் கெளரவமாகத் தெரிய தனக்கொரு அடையாளம் வேண்டுமென தாதாவான வேலு விரும்புகின்றார். படம் ஒரு மூடில் (mood) பயணிக்காமல், சீரியசாக, பின் காமிக்கலாக (comical) என மாறிக் கொண்டேயிருப்பது ஒரு குறை.

இயக்குநர் ரிச்சர்ட் ஆண்டனியின் ‘நிழல் தரும் இதம்’, தாயின்றி தந்தையுடன் வளர்ந்த ஓர் இளம்பெண் தன் நினைவுகளோடு போராடுவதைப் பற்றிய கதை. நினைவுகளை உருவகப்படுத்துவது போல், நான்கு பேர் ஷோபியை எப்பொழுதும் ஓர் அலைக்கழிப்பு போல் பின் தொடர்கின்றனர். தலைப்பில் வரும் நிழல் என்ற சொல் கூட ‘நினைவு’களையே குறிக்கின்றது. அந்நினைவுகளின் உருவத்திற்கு ஒரு முகமூடி அணிவித்து நடமாடவிட்டதற்கு பதில், விஷுவலாய் மனதில் அறையும் வண்ணமயமான ஒப்பனைகளைக் கையாண்டிருக்கலாம். ஷோபியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். நினைவுகளோடு போராடுவதை முக பாவனைகளிலேயே காட்டும் பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். எரிக்காக நடித்திருக்கும் நிர்மல் பிள்ளை அட்டகாசமான கேமியோ செய்துள்ளார். அவரது புன்னகையும், தன் பால்ய கால தோழி அவளது காதலனுக்குத் தரும் முத்தத்தைப் பற்றிக் குழப்பமாகப் பேசுவதும் அழகாய் உள்ளது. கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டதும், தொந்தரவு தரும் நினைவுகள், இதமளிக்கத் தொடங்கி விடுகின்றன என்று சுபமாய் முடிகிறது படம்.

ஐந்து கதைகளுமே சுபமாய்த்தான் முடிகிறது. ‘விடியாதா?’ என்ற ஏக்கம் எந்தக் கதாபாத்திரத்திற்கும் இல்லை. ஐந்து படங்களிலுமே, கதாபாத்திரங்கள் தத்தமது சூழலை ஏற்று, அதோடு மகிழ்ச்சியாக வாழப் பழகிக் கொள்கின்றனர். ‘புத்தம் புது காலை விடிந்ததே’ என்ற தலைப்பு கூடப் பொருத்தமாக இருந்திருக்கும். இந்தப் படங்களில் காட்டப்படும் வாழ்விடத்தில் வாழும் மனிதர்களே, ‘விடியாதா’ என்று கேட்பார்களெனில், இந்த இயக்குநர்களின் தலை பால்கனியை விட்டு கீழே அவர்கள் காம்பெளண்டு தாண்டியுள்ள சாலையில், ஜீவனின்றி நடமாடும் எண்ணற்ற எளியவர்களைக் கண்டதே இல்லையோ என ஐயம் வரவைக்கின்றது.