Shadow

ரயில் விமர்சனம்

எப்பொழுதும் போதையில் இருந்து, தனக்கு வரும் வேலை வாய்ப்புகளை இழக்கும் நாயகன், பஞ்சம் பிழைக்க தன் ஊருக்கு வந்து ஒழுக்கமாக வேலை பார்த்து வரும் வட இந்திய தொழிலாளிகளால் தான் தன்னை போன்றோருக்கு வேலை இல்லை என்று வஞ்சம் வளர்க்கிறான். அந்த வஞ்சத்தினால் விளைந்தது என்ன..? என்பது தான் ரயில் திரைப்படத்தின் கதை.

தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூரில் குடியும் கூத்துமாக வாழ்ந்து வரும் நாயகன் குங்குமராஜுக்கு வீடுகளுக்கு வயரிங் செய்யும் வேலை. ஆனால் அந்த வேலையை ஒழுங்காக செய்யாமல் தன் நண்பன் ரமேஷ் வைத்யாவுடன் கூட்டணி அமைத்து குடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். இதனால் அவருக்கு வர வேண்டிய வேலைகள் கூட வட இந்திய தொழிலாளர்களுக்குப் போய்விடுகிறது. சற்று வசதிபடைத்த மனைவி வீட்டிலிருந்து வந்த நகை, பணம் மற்றும் இரு சக்கர வாகனம் முதற்கொண்டு குடித்து அழித்துவிட்ட காரணத்தால் மனைவி வைரமாலாவுடனும் இணக்கமான உறவு இல்லை. ஒரே சண்டை சச்சரவாக வாழ்க்கை செல்கிறது. இந்த நிலையில் எதிர்வீட்டில் வசிக்கும் மும்பை நகரத்து வட இந்திய தொழிலாளி பர்வேஸ் மெஹ்ரு தன் வேலையை ஒழுங்காக செய்து கொண்டு, தன்னால் முடிந்த உதவிகளை வைரமாலாவிற்கு செய்து கொண்டு வருகிறான். ஒரு முறை கணவன் மனைவிக்கு இடையேயான சண்டையின் போது விலக்க முற்பட்ட பர்வேஸ், நாயகன் குங்குமராஜை தெரியாமல் தள்ளிவிட்டுவிடுகிறான். இது வன்மமாக நாயகன் மனதில் குடி கொள்கிறது. அந்த வன்மம் மேற்கொண்டு என்ன ஆனது என்பதை விளக்குகிறது திரைக்கதை.

மிக எளிமையான கதை. கதை துவங்கும் போதே படத்தின் பிரச்சனைக்கான தீர்வு இதுதான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துவிடுகிறது. அதை நோக்கிய திரைக்கதை பயணம் சுவாரஸ்யமானதாகவோ சுறுசுறுப்பானதாகவோ இல்லை என்பது குறை.

முதன்மை கதாபாத்திரமான குங்குமராஜ் கதாபாத்திரத்தின் தவறுகளான குடி மற்றும் பொறுப்பற்றத் தன்மையை அவர் உணர்ந்து திருந்தினார் என்பதற்கான காட்சிகளே திரைக்கதையில் இல்லை. அவரின் மனமாற்றத்திற்கு மனைவி கருவுற்றிருப்பது, வட இந்திய தொழிலாளியின் அப்பா நாயகனுக்கு ஆதரவாகப் பேசுவது, வட இந்திய தொழிலாளியின் குழந்தை நட்பாகப் பழகுவது, துபாயில் இருந்து வரும் நண்பனுடனான உரையாடல் என்று பல்வேறு விசயங்கள் முட்டுக் கொடுத்தாலும், அந்த மனமாற்றம் முதிர்ச்சியானதாகவோ ஆழமானதாகவோ இல்லை.

மேலும் திரைக்கதை ஒரு புள்ளிக்கு மேல் அதன் மையம் எது என்று தெரியாமல் தேடி திணறுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

இயல்பான வாழ்வில் நடக்கும் காட்சிகளாக இருந்தாலும் சுவாரஸ்யமானதாகவோ, ரசனையானதாகவோ காட்சிகள் அமைக்கப்படவில்லை என்பது ஒரு குறை. மேலும் குடி தொடர்பான காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்து அலுப்பூட்டுகின்றன. ஆனால் அந்த குடியினால் தான் நாயகனின் வாழ்க்கை சீரழிவை நோக்கிப் போகின்றது என்பதற்கான பார்வை தவறவிடப்பட்டிருக்கிறதா..? இல்லை தவிர்க்கப்பட்டு இருக்கிறதா..? என்ற கேள்வியும் எழுகிறது.

புலம்பெயர் தொழிலாளர்களின் கதையை பின்புலமாக எடுத்துக் கொண்டு அது குறித்தான அரசியலை படம் பேசாமல் தவறவிட்டிருக்கிறது என்றும் தோன்றுகிறது.

ரமேஷ் வைத்தியாவின் கதாபாத்திர சித்தரிப்பும் அவரின் நடிப்பும் ரசிக்கும் படி இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் வைரமாலாவின் நடிப்பு படத்திற்கும் காட்சிகளுக்கும் உயிர் கொடுக்கிறது. வட இந்திய தொழிலாளியாக நடித்திருக்கும் பர்வேஸ் மெஹ்ரூ சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மனைவி டிம்பிள் ஆக வரும் ஷமீரா-வின் நடிப்பும் சிறப்பு. மாமனாராக நடித்திருக்கும் செந்தில் கோச்சடையும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

தேனி ஈஸ்வர் அவர்களின் ஒளிப்பதிவு ஒரு அழகான காட்சி தொகுப்புகளை காண்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஜனனியின் இசை காட்சிகளுக்குத் தேவையான உணர்வுகளை செவ்வனே கடத்தியிருக்கிறது.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதி இயக்கியிருக்கிறார். சிறந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கும் அவர், அதை சிறந்த கதையாக திரைக்கதையாக மாற்றுவதில் சறுக்கியிருப்பதாகவே தோன்றுகிறது. டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் வேடியப்பன் தயாரித்திருக்கிறார். நல்ல கதைக்களம் கொண்ட கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதற்காக இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள்.

ரயில் – அழகான, ஆழம் குன்றிய மாட்டுவண்டி பயணம்.