Search

ரீல் விமர்சனம்

reel-movie-review

மற்றவரை ஏமாற்றி ஏய்த்துப் பிழைக்கும் நாயகனுக்கும், குடும்பச் சூழல் காரணமாய் சோரம் போகும் நாயகிக்கும் காதல் மலர்கிறது. கூடவே எதிரிகளும் உருவாகிறார்கள். நாயகனும் நாயகியும் வாழ்க்கையில் ஒன்றிணைந்தார்களா என்பதுதான் படத்தின் கதை.

அரத பழசான கதை. அதனினும் தொன்மையான திரைக்கதை பாணி. மாறி வரும் கதை சொல்லல் முறையையோ, திரைப்பட வடிவத்தையோ, கொஞ்சம் கூடக் கணக்கில் எடுக்கவில்லை எழுத்தாளர் TN சூரஜ். கதையின் ஊடே கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யாமல், அறிமுகப் படமெனத் தனியாக நீள்கிறது. அதுவும் 80 களின் சினிமா எப்படித் தொடங்குமோ அப்படி!

பெண்களை அடைய நினைக்கும் வயதான பணக்கார வில்லன். அவருக்கு வேற எந்த ஷேடும் இல்லை. அறிமுகமாகும் நொடியில் இருந்து பெண்களை வெறிக்க வெறிக்கப் பார்ப்பதும், நாயகியை அடையவேண்டும் என தன் விருப்பத்தை அருவருப்பான முறையில் வெளிப்படுத்துவதுமான அவரது கதாபாத்திரம். கிரீஷ் எனும் அந்தப் பாத்திரத்தில், ஓய்வு பெற்ற இராணுவ கேப்டன் கருடா நடித்துள்ளார். திரையில், அறிமுகம் கருடு என அவர் பெயர் வருகிறது.

வழிப்பறி செய்யும் நாயகன் உதயராஜ் மனதில் ஒட்டவே மாட்டேங்கிறார். ஒருவேளை நாயகன் உத்தமமான வேலை செய்திருந்தால் ஒட்டியிருப்பாரோ என நினைத்து விடவேண்டாம். ஜஸ்ட் லைக் தட், எந்த சீரியஸ்னஸும் இல்லாமல் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினால் இப்படித்தான் ஒட்டாமல் விலகியே நிற்கும். வில்லன்கள் அடைய நினைக்கும் நாயகியாக அவந்திகா நடித்துள்ளார். கோவை நகரில் படம் நடக்கிறது. நாயகன் அவரை ஒரு ஹோட்டலில் பார்த்துக் காதலைச் சொல்கிறார். நாயகியோ, நாயகனை ஆளரவமே இல்லாத, சிட்டியை விட்டுத் தள்ளியிருக்கும் ஒற்றையடி மண்சாலையின் இடையில் வைத்து, காதலுக்கு “நோ” சொல்கிறார். நோ என்றால், ஃபோனிலேயே சொன்னாலும் நோ தானே! நாயகன் டிஷ்யூ பேப்பரில் எழுதித் தரும் நம்பருக்கு ஃபோன் செய்யாமலே விட்டாலும் நோ தானே? நோ சொல்ல நல்லா தேர்ந்தெடுக்கிறாங்க இடத்தை!! நாயகி நோ சொன்னதும், நாயகியின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார் நாயகன். ‘அது நோ இல்லை. எஸ் தான். குற்றவுணர்ச்சியில் பொய் சொல்லாத!’ என்கிறார். நாயகியும் சட்டெனக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார் (நேர்கொண்ட பார்வை படத்தோடு, இதை ரிலீஸ் ஆகியிருப்பது நல்ல நகைமுரண்). நாயகன் யாரு, என்ன தொழில் பண்றான் எனக் கேட்காமலும் தெரியாமலும், கல்யாணம் வரை செல்கிறார் நாயகி. ‘யார் சாமீ இவங்க எல்லாம்? எங்க இருக்காங்க?’ என ஆச்சரியம் ஏற்படுகிறது. படத்தில் அசந்தது அந்த ஒரு காட்சியில் மட்டுந்தான்.

பார்வையாளன் கொடுக்கும் பணத்துக்கும் நேரத்துக்கும் பதிலாக, படைப்பாளி குறைந்தபட்சம் ஒரு ஃப்ரேமிலாவது அவனை கனவு உலகிலோ, மாறி வரும் சூழுலுக்கேற்ப எதார்த்த உலகிலோ உலாவ வைக்கவேண்டியது மிக முக்கியம். இந்தப் படத்தின் இயக்குநர் முனுசாமி, அதைக் கருத்தில் கொள்ளாதது மிக மிகத் துரதிர்ஷ்டம்.