Shadow

சென்னை பழனி மார்ஸ் விமர்சனம்

cpm-movie-review

ஆரஞ்சு மிட்டாய் படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி வசனமெழுத, பிஜு விஸ்வந்தாத் இயக்கியுள்ள படம் ‘சென்னை பழனி மார்ஸ்’.

நாயகனின் தந்தை ஒரு விஞ்ஞானி. மார்ஸ்க்குப் போகவேண்டும் என்பது அவரது ஆசை. அவரால் முடியாததைச் சாதிக்க நினைக்கிறார் போதைப் பொருளுக்கு அடிமையாகும் அவரது மகனான. நாயகன் மார்ஸ் போனாரா இல்லையா என்பதுதான் படத்தின் க்ளைமேக்ஸ்.

இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை, மார்ஸ் (செவ்வாய் கோள்) பூமிக்கு அருகில் வருமாம். அப்பொழுது ஏதோ ஒரு மலையில் போய் நின்றால், செவ்வாய்க் கிரகத்துக்கு உறிஞ்சப்படுவார்கள் என ஆஸ்ட்ரோ-பிசிக்ஸ் விஞ்ஞானியான நாயகனின் தந்தை நம்புகிறார். புதிரான ஒரு கணக்கிற்கு விடை கண்டுபிடித்து, அது “பழனி மலை” எனக் கண்டுபிடிக்கிறான் நாயகன். ஒரு பிரமிட் போல் சின்ன கருவி + ஸ்பேஸ் சூட் (space suit) தான் தேவை. மலையின் மீது நின்றால் நேராக செவ்வாய் கிரகம் தான்.

படத்தோடு கொஞ்சம் கூட ஒட்டவே முடியாத அளவுக்கு, நாயகனின் போதைப் பொருள் பழக்கமும், அதனால் அவனுக்குள் ஏற்படும் மனக்குழப்பமும், பார்வையாளர்களை ‘என்னடா சொல்ல வர்றாங்க’ என கடைசி வரை நெளிய மட்டுமே வைக்கிறது. ஆரஞ்சு மிட்டாய் போல் ஒரு சோதனை முயற்சியாகக் கூடப் பாவிக்க முடியாமல் மிகவும் சோதிக்கிறது படம். கதாநாயகன் மற்றும் அவரது வழித்துணை நண்பரின் மண்டைக்குள் சதா சர்வ காலமும், விநோதமாய் ஏதாவது நடந்து கொண்டே உள்ளது. பிளாக் காமெடி ஜானரில் முயற்சி செய்திருப்பார்கள் போல! ஆனால், வசனங்களோ, காட்சியமைப்புகளோ துளி கூட அதற்கு உதவவில்லை.

சென்னையில் இருந்து பழனிக்கு ஷார்ட்-கட்டில் மண் ரோட்டிலேயே ஸ்பெலண்டர், டிவிஸ் 50, புல்லட் ஆகிய வாகனங்களில் செல்கின்றனர். அவர்களை விரட்டிப் பிடிக்க முயலும் இரண்டு காவல்துறை ஊழியர்கள். அவர்களுக்கு இடையே உள்ள கதையும் நகைச்சுவையாக இல்லாமல் கடியாகவே உள்ளது. வழியில் ஒரு போதைப்பொருள் குழுவையும், மைக்ரோ வேவ் ஓவனைத் தலையில் கவிழ்த்து தற்கொலைக்கு முயலும் ஐ.டி. ஊழியரையும் சந்திக்கின்றனர் நாயகனும், அவரது நண்பனும். கதையும், பிரதான கதாபாத்திரங்களும் ஒட்டாததால், எதுவுமே ஒட்டவில்லை.

நாயகனாக பிரவீண் ராஜாவும், அவரது சங்கீத ஆர்வமுள்ள நண்பராக ராஜேஷ் கிரி பிரசாத்தும் நடித்துள்ளனர். நாயகனை விட அவரது நண்பரின் சரீரமும் சாரீரமும் மனதில் பதியுமளவு கொஞ்சமேனும் தெளிவாக உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம். எனினும் இருவருமே முனுக்கென்றால் சிரிக்கத் தொடங்கி அச்சுறுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். ‘ஆஹா ஆரம்பிச்சுட்டாங்களா!’ என கொலக்காண்டு ஆகிறது.

இடைவேளைக்கு முன், பழனிப் பயணத்தின் போது, நாயகனும் அவரதும் நண்பரும் புல்லட்டில் செல்லும் பொழுது, சில்லவுட்டில் (silhouette), அந்தி சாயும் நேரத்து நீல நிற வானம் காட்டப்படுகிறது. மிகப் பிரமாதமாக உள்ளது. இயக்குநர் பிஜுவே, ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் செய்துள்ளார். முன் ஜென்மங்களில் நாம் விட்ட இடத்தில் இருந்து, மனிதர்கள் தங்கள் லட்சியத்தை அடையப் பயணிப்பார்கள் என்ற அரிய கருத்துடன் படம் முடிகிறது.