Search

ரிச்சி விமர்சனம்

ரிச்சி எனும் ரிச்சர்ட்டின் வாழ்க்கை எவ்வாறு எதனால் திசை மாறி, அவன் வாழ்க்கை என்னானது என்பதுதான் படத்தின் கதை. 2014இல் வெளியான ‘உள்ளிடரு கண்டன்தே’ என்ற கன்னடப் படத்தின் ரீமேக் ஆகும்.

ஓர் அசாத்திய பொறுமையைக் கோருகிறது படம். துண்டு துண்டாய், அத்தனை கதாபாத்திரங்களைக் கொண்டு, இயக்குநர் கதையை நேர்க்கோட்டிற்குக் க்ளைமேக்ஸில் கொண்டு வரும் முன் ஒரு வழியாகிவிடுகிறோம். படத்தில் கையாண்டுள்ள கதை சொல்லும் பாணிக்கு நாம் தயார் ஆகாதது ஒரு காரணம் என்றாலும், மெதுவாகத் தனித்தனி காட்சிகளாகக் கோர்வையற்று நகரும் திரைக்கதையே அதற்குப் பிரதான காரணம்.

தூத்துக்குடியைக் கதைக்களமாகக் கொண்டதால் கிறிஸ்துவப் பின்னணியில் கதை நகர்கிறது. கதை தொடங்கும் முன், அனிமேஷனில் சொல்லப்படும் மீனவன் கதையை உள்வாங்கிக் கொள்ள முடியாதளவு வேகமாகவும் அந்நியமாகவும் உள்ளது. அந்த முன் கதை, படத்தின் கதையைப் புரிந்து கொள்ள அவசியம். அது என்ன சிலை/கட்டை (சாண்டா மரியா) என்ற குழப்பம் பெரும்பாலான பார்வையாளர்களுக்குக் கடைசி வரை நீடிக்கிறது. கெளதம் ராமசந்திரன் அங்கேயே சறுக்கி விடுகிறார். அந்த அவசரத்திற்குப் பிறகு, படம் முழு நிதானத்தில் பயணிக்கிறது. இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக ஓடும் படம் தான் என்றாலும், அதிக நேரம் ஓடும் அலுப்பினைத் தந்து விடுகிறது.

ஐசக் அண்ணாச்சியாக நடித்திருக்கும் 79 வயதான விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி, தன் கம்பீரமான ஆகிருதியாலும் நடிப்பாலும் ஆச்சரியமூட்டியுள்ளார். போதகராக வரும் பிரகாஷ் ராஜ்க்குக் காட்சிகளும் குறைவும், பெரிதாக அவர் ஈர்க்கவுமில்லை. முதல் பாதியில் தலையைக் காட்டி விட்டு, கெளரவத் தோற்றம் போல் மறைகிறார் நிவின் பாலி. ஆனால், இரண்டாம் பாதியில் படத்தை அவர் தான் நகற்ற உதவியுள்ளார். அவரிடமுள்ள ஒரு வசீகரமும், மலையாள நெடி கலந்த தமிழும் ரசிக்க வைக்கிறது. ஆனால் அவரை, ஸ்லோ-மோஷனில் திடீர் திடீரென புலியாட்டம் ஆட வைத்து, நன்றாக ஒப்பேற்றியுள்ளார் கெளதம் ராமசந்திரன். கதை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத வேளையில், ஒப்பேத்தல் நடனம் கொஞ்சம் கடியைக் கூட்டுகிறது.

செல்வா எனும் பாத்திரத்தில் சதுரங்க வேட்டை நாயகன் நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ளார். இவரது அத்தியாயத்தில், நிவின் பாலி அளவுக்கு திரைக்கதை உறையாமல் சற்று வேகமாகவே செல்கிறது. எனினும், குவிமையம் மாறிக் கொண்டே இருப்பதால், எந்தப் பாத்திரத்தின் மீது மனம் லயிக்க மறுக்கிறது. மீனவராக நடித்திருக்கும் குமரவேல் பாத்திரமும் முழுமையாக இல்லை. அவரது தங்கை பிலோமினாவாக வரும் லக்ஷ்மிபிரியா, நட்டியால் காதலிக்கப்படுகிறார். மிகச் சொற்ப காட்சிகளில் தன்னிருப்பை தன் பார்வைகளாலும், முக பாவனைகளாலும் அழுத்தமாகப் பதிந்துள்ளார். ‘ஒரு சம்பவம் நடந்துடுச்சு’ எனும் பீடிகையைக் கடைசி வரை தக்க வைக்க உதவியிருக்கும் பத்திரிகையாளராக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். ராதாக்காவாக நடித்திருக்கும் துளசியும் மிக யதார்த்தமாக நடித்துள்ளார். ஆனாலும், ரொம்ப வருடம் கழித்து தன் மகனைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய பரவசத்தையும் அதிர்ச்சியையும், படத்தொகுப்பாளர் அதுல்விஜய் வெட்டி எறிந்திருப்பார் போல்!

ஓடிக் கொண்டேயிருக்கும் ரகுவாக ராஜ்பரத் நடித்துள்ளார். நிவின் பாலி அலட்டிக் கொள்ளாமல் மிகக் கேஷுவலாக வந்து போகிறார். ஆனால், ராஜ்பரத் தன் கண்களில் மருட்சியை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்த் திரையுலகம் அவரை இன்னும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இயக்குநர் கெளதம் ராமசந்திரன் இன்னும் கொஞ்ச மெனக்கெட்டு கதாபாத்திரங்களையும் திரைக்கதையையும் சுவாரசியப்படுத்தி இருக்கலாம். உதாரணம், கொல்கத்தா மாஃபியா குழுவிடம் இருந்து தப்பி வரும் ரகு, தூத்துக்குடி வந்து சாவகாசமாகத்தான் தன் பையைப் பிரித்துப் பார்த்து ஷாக்காகிறார். “ஏன் ரகு ஊரை விட்டு ஓடிப் போனான்?” என்று ரிச்சியிடம் அவரது அப்பா பிரகாஷ்ராஜோ, காவலர்களோ, ரகுவின் அம்மா ராதாக்காவோ கேட்பதில்லை. சிறு வயது ரிச்சி, தன்னைச் சுந்தரபாண்டியன் சசிகுமார் போல் ஃபீல் செய்து கொண்டு அமைதி காப்பது ஏன் என்று தெரியவில்லை.

நிவின் பாலி, ராஜ்பரத்திடம் சொல்லும் “தி கியூபன் கிட் (The Cuban Kid)” கதை நன்றாகவுள்ளது. ஆனால், அதை ஏன் அவர் ராஜ்பரத்திடம் சொல்கிறார் எனத் தெரியவில்லை. வசனமாகத் திணிக்கப்பட்டுள்ள அக்கதை, க்ளைமேக்ஸில் மிக அழகாகப் பொருந்திப் போகிறது. கேட்கும் பொழுது அக்கதை கொடுத்த தாக்கத்தைக் காட்சிகளாகப் பார்க்கும் பொழுது ஏற்படுத்த ரிச்சி படம் தவறிவிட்டது.