Shadow

சத்யா விமர்சனம்

Satya 2017 Tamil movie review

1988 இல் வந்த கமல் படத்திற்கும், இப்படத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; படத்தின் நாயகன் பெயர் சத்யா என்பதைத் தவிர்த்து. தெலுங்குத் திரையுலகில், 2016இன் தொடக்கத்தில் வெளிவந்த ‘க்ஷணம்’ என்ற வெற்றிப்படத்தின் தமிழ் ரீமேக்கே இந்த “சத்யா” படம்.

ஆஸ்திரேலியாவில் பணி புரியும் சத்யாவிற்குத் தன் முன்னாள் காதலியான ஸ்வேதாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அவளைப் பார்க்கச் சென்னை செல்றான் சத்யா. தன் மகளைக் காணவில்லை என்றும், தேடித் தரும்படியும் சத்யாவைக் கேட்கிறாள் ஸ்வேதா. அப்படியொரு மகளே ஸ்வேதாவிற்கு இல்லையெனக் காவல்துறையினரும், ஸ்வேதாவின் கணவனும் திட்டவிட்டமாகச் சொல்லிவிட, அடுத்து என்னாகிறது என்பதுதான் படத்தின் த்ரில்லிங் கதை.

சதீஷைக் காமெடியனாக ஏற்றுக் கொள்வதிலேயே மனத்தடை விலகாத பட்சத்தில், அவரைச் சீரியசான பாத்திரத்தில் நடித்திருப்பதை உள்வாங்கிக் கொள்ள சிரமமாய் உள்ளது. ஆனால், தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழம்பித் தவிக்கும் சத்யாவைச் சரியான திசையில் திருப்பிவிடும் முக்கியமான பாத்திரத்தில் வந்துள்ளார். கவுன்ட்டர் கொடுக்க போதுமான காட்சியோ, சரியான வசனமோ கிடைக்காத பட்சத்தில் யோகி பாபுவும் சோடை போய்விடுகிறார். இருந்தும் அவரது ஒரு வசனத்திற்குத் திரையரங்கில் பலத்த சிரிப்புச் சத்தம் கேட்கிறது.

“எனக்கு நடிக்க வராது” – சிபி சத்யராஜ்.

“அதான் ஊருக்கே தெரியும்” என்ற யோகி பாபுவின் கவுன்ட்டர்க்குத்தான் திரையரங்கில் அந்தச் சிரிப்பொலி.

இத்தகைய சுய எள்ளல் வசனத்தை வைத்துக் கொள்ளக் கண்டிப்பாக ஒரு மனமுதிர்ச்சி வேண்டும். சிபி சத்யராஜ்க்கு அது வாய்த்திருப்பதோடு, இப்படத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை தான் அதற்குப் பிரதான காரணமெனத் தெரிகிறது. நல்ல கதையும், குழப்பமில்லாத் திரைக்கதையும் உள்ள படம் தரும் காண் அனுபவத்திற்கு இப்படம் ஒரு நல்ல உதாரணம்.

ஓர் அம்மாவாகக் கவலையுறும் போது கவரும் ரம்யா நம்பீசன், சிபியுடனான காதல் காட்சிகளில் பொருந்தாமல் போகிறார். காவல்துறை வேடத்தில் பட்டும் படாமலும் தெரிந்தாலும், வரலட்சுமி சரத்குமார் க்ளைமேக்ஸைத் தன் வசமாக்கியுள்ளார். ஆனந்த்ராஜ் முழுக் காமெடியனாக ஃபார்ம் ஆகிவிட்டதால், சீரியசான கேரக்டரில் வரும் அவரையும் காமெடி செய்ய விட்டுள்ளனர். கதை அதனைக் க்ராத பொழுது தவிர்த்திருக்கலாம். ஆஃப்ரிக்கர்கள், சதீஷ், யோகி பாபு, ஏன் சிபி உட்பட அனைத்துப் பாத்திரங்களிடமுமே ஓர் இயல்புத்தன்மை மிஸ்ஸிங். உதாரணத்திற்கு, ரம்யா நம்பீசனின் தந்தையாக வரும் நிழல்கள் ரவி முன், கதாநாயகியின் வடிவம் (ஸ்ட்ரக்ட்சர்) பற்றி வர்ணிக்கிறார் சிபி. அக்காட்சியைக் காமெடியாகவும் கொள்ள முடியவில்லை, காதலாகவும் கொள்ள முடியவில்லை.

சைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, சத்யாவை இயக்கியுள்ளார். படம் சுவாரசியமாக இருந்தாலும், ஆண்மைக் குறைபாட்டுக்கும் மலட்டுத்தன்மைக்கும் (impotent/infertility) வித்தியாசம் தெரியாமல், படத்தில் வசனமாகப் பயன்படுத்தியிருப்பது மிகப் பெரும் குறை. அதுவும் படத்தின் க்ளைமேக்ஸோடு சம்பந்தப்பட்டது இந்தப் பதம். சிபி சத்யராஜின் கேரியரில், சத்யா குறிப்பிடத்தக்கதொரு படமாய் அமையும் என்பது நிச்சயம்.