32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ராக்கெட்ரி: நம்பி விளைவு விமர்சனம்

Dinesh R சேலம் Published: 03/07/2022 6 நிமிட வாசிப்பு Updated: 14/12/2022 சினிமா
எழுத்து அளவு:

நம்பி நாராயணனுடைய வரலாற்றுப் படம் (Biopic) எடுக்கிறார்கள் எனும்போதே எனக்கு இயல்பாக ஆர்வம் எழுந்தது. 90களின் சமயத்தில்தான், இந்திய பத்திரிகைத் துறையில் இன்வெஸ்டிகேஷன் ஜர்னலிசம் மையம் கொண்டிருந்தது. இப்படியெல்லாம் நடப்புலகின் புதிரான சம்பவங்களை அம்பலப்படுத்துவது அல்லவா பத்திரிகை தர்மம் என்று மிகவும் உணர்ச்சி மேலீட்டோடு கவனித்து வந்த பல வழக்குகளில் ஒன்று நம்பி நாராயணன் வழக்கு.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தது, அவர் மேலான குற்றசாட்டுகள் நிரூபணம் ஆகாமல் சிபிஐ கோர்ட்டில் வழக்கு தள்ளுபடி ஆனதெல்லாம் நடந்ததும், பத்திரிகைகள் அவர் மேல் கவிந்த வெளிச்சத்தை விலக்கிக் கொண்டுவிட்டன.

பத்திரிகைகளால் அதிகம் கண்டுகொள்ளப்படாத அந்தக் காலகட்டத்திலும், நம்பி நாராயணன் தன் மீது அபாண்டமாகப் போடப்பட்ட தேசத்துரோக களங்கத்தைப் போக்கிக் கொள்ள தொடர்ந்து சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு வந்திருக்கிறார். உச்சநீதிமன்றம் அவருக்கு 50 இலட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் எனத் தீர்ப்பளிக்க, கேரள அரசு அவருக்கு 1 கோடியே 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குகிறோம் என அறிவிக்க, மத்திய அரசு நம்பிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கிக் கௌரவிக்க என்று அந்தப் பழைய தேசதுரோக கேஸில் பல புதியத் திருப்பங்கள்.

இப்போது புலனாய்வு பத்திரிகை அலை ஓய்ந்து, சோஷியல் மீடியா வழியே போலரைஸ்ட் (Polarized) கருத்து கண்ணாடி வழியே மட்டும் எல்லாச் செய்திகளையும் கவனிக்கும் பெரும் கூட்டம் மிகுந்து விட்டது. இந்த போலரைஸ்ட் மனநிலை மக்களுக்கான சராசரி சிக்கல் என்னவென்றால், நம்பி நாராயணனின் சட்டப் போராட்டத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்வதா அல்லது ‘நெருப்பில்லாமல் புகையுமா? சும்மாவா கேஸ் போட்டிருப்பான்’ என்று அடித்துவிடுவதா என்பதுதான்.

இப்போது, நம்பி, பல பேட்டிகள் கொடுத்து தன் தரப்பு வாதங்களை வலுவாகவே பொதுவில் முன் வைத்திருக்கிறார். அவருடைய கூற்றுகளை எல்லாம் தொகுத்துப் பார்த்தால் 90களில் இருந்த பத்திரிகை சுதந்திரமோ அல்லது இதழியல் அறமோ பெரிதும் கேள்விக்குறியாகத்தான் படுகிறது. ஆனால் அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றம் அப்படிப்பட்டது. மாலத்தீவிலிருந்து டூரிஸ்ட் வீசாவில் வந்து கேரளாவில் குடியமர திட்டமிட்ட மரியம் ரஷீதா என்ற பெண் வழியே பாகிஸ்தானுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்று காசு பார்த்தார் என்கிற குற்றச்சாட்டு. ராக்கெட் டெக்னாலஜி, பெண்கள், அண்டை நாட்டு ஒற்றன் என்று பல அடுக்குகளில் அவர் சிக்க வைக்கப்பட்டிருந்தார். அவருடைய இஸ்ரோ நண்பர்களே அவரை நெருங்கப் பயந்தனர். போதாக்குறைக்கு, அப்போதுதான், இஸ்ரோவிலிருந்து விருப்ப ஓய்வு பெற அவர் விண்ணப்பம் வேறு அளித்திருந்தார்.

90களில் ஒருவரிடமிருந்தும் நம்பிக்கு ஆதரவான குரல் எழவில்லை. பிறகு 2000-ஆம் ஆண்டில் பிரதமர் வாஜ்பேயிக்கு அறிவியல் துறை ஆலோசகராக பொறுப்பேற்ற அப்துல் கலாம் கூட நம்பிக்கு நேர்ந்த அநீதி பற்றி உயர்மட்டத்தில் குரல் எழுப்பவில்லை. நம்பியும் கலாமும், விக்ரம் சாராபாய் காலத்தில் இருந்தே இஸ்ரோவில் ஒரே குழுவில் பணியாற்றிய சகாக்கள். அந்த தேசத்துரோக வழக்கின் தன்மை அப்படி பெரும் சிக்கலில் அமைந்திருந்தது நம்பியின் துரதிர்ஷ்டம்.

அந்த மோசமான மன அழுத்த சூழலிலும் நம்பி தன்னுடைய சட்டப் போராட்டத்தை கைவிடவில்லை என்பதுதான் அவருடைய மனத்திண்மைக்கு சான்று. நம்பியின் சுயசரிதையும் படமாக எடுக்கப்படுகின்றது. அதுவும் இந்திய அளவில் பெரிய நட்சத்திர அந்தஸ்து உள்ள மாதவன் நடிக்கப் போகிறார் என்று தெரிந்த போது ஆர்வம் அதிகமாகியது உண்மைதான். ஆனால் தயாரிப்புச் சிக்கல், கொரோனா தொற்று சூழல் என அத்தனை இடர்பாடுகளினாலும் தாமதமாகி இப்போதுதான் வெளியானது.

பட வெளியீட்டு விழாவில், மாதவன், நம்பி நாராயணனின் விகாஸ் இஞ்சின் பிராஜெக்ட்டின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, ‘இஸ்ரோ நிகழ்த்திய சாதனையில் நம்முடைய பஞ்சாங்க காலகணக்குகள் முக்கிய பங்கு வகித்தன’ என்று பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி விட்டது. சோஷியல் மீடியாவில் பலரும் மாதவனுடைய பேச்சை வைரலாகப் பகிர்ந்து ட்ரோல் செய்து வந்தனர். கர்நாடக பாடகரும், மகசசே விருது பெற்றவருமான டி.எம்.கிருஷ்ணாவும் தன் பங்குக்கு மாதவனின் பேச்சை கிண்டல் செய்து போட்டிருந்தார்.

இதன் பின்விளைவாலோ என்னவோ, முதல்நாள் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரெவ்யூ போடும் யூட்யூபர்கள், “படம் என்னய்யா, ராக்கெட் பத்தியே பேசிக்கிட்டிருக்காங்க. நாங்கள்லாம் பாக்க வேணாமா. சுவாரசியமே இல்லியே” என்று சொல்லியிருந்தார்கள்.

நல்லவேளை, ஜான் நாஷைப் பற்றிய பயோபிக்கைப் பார்த்துவிட்டு “என்னமோ நோபல் பரிசுன்னாங்க. ஆனா ஒரேயடியா எக்கனாமிக்ஸ், மேத்ஸ்ன்னு பேசிட்டே இருக்காங்க. நாங்க பாக்கிறதுக்கு சுவாரசியமா எடுக்க வேணாமா?” எனக் கேட்டு சத்தாய்ப்பதற்கு முன் அந்தப் படமெல்லாம் தப்பித்து விட்டது.

இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை விளக்கியது போல, பட வெளியீட்டின் போது மாதவன் பேசியதில் அவருடைய பழமைவாத பெருமிதம் விஞ்சியிருந்ததேத் தவிர, அறிவியல் விளக்கமல்ல.

இத்தகைய அறிவியல் களத்தைக் கொண்ட படத்தை அவர் தன்னுடைய பழமைவாதப் பெருமிதம் கொண்டு குழப்பி வைத்திருப்பாரோ என்ற பயம் இருந்தது. ஆனால் நம்பியின் வாழ்க்கை வரலாற்றை இயன்ற அளவு கலப்படம் செய்யாமல் எடுத்திருக்கிறார் எனத்தான் சொல்ல வேண்டும். வெள்ளாள பிள்ளைமார் இனத்தைச் சேர்ந்த நம்பியின் வாழ்க்கையில் இருக்கக் கூடிய ஆன்மிகப் பற்றையும் அவருடைய அறிவியல் தீர்க்கத்தையும் சரிவிகிதத்தில் கொண்டு வந்திருந்தார்கள். ஆரம்பக் காட்சியில் ஐம்பது வயது நம்பியின் மனைவியாக சிம்ரன். அதுவும் பெண் மாப்பிள்ளை, பேத்தி என பெரிய குடும்பத்தின் பாட்டியாம். அவர் பிரமாதமாக ஆடியிருந்த ‘மனம் விரும்புதே’ பாடலில் சும்மா செட் பிராபர்ட்டியாக வந்து போகும் அப்போதைய இறுக்கமான சூர்யா, இப்போது மிகத் திறமையான ஸ்டார் நடிகராக மாறி, அப்படியே இளமையுடன் இந்தப் படத்திலும் இருக்க, சிம்ரனை மட்டும் அவசரமாகப் பாட்டியாக்கி விட்டார்கள் என்பது சற்று சோகமாகத்தான் இருந்தது.

மாதவனுடைய குருநாதரான மணிரத்னம் அளவிற்கோ, அல்லது அவருடைய சகாவான சுதா கோங்குரா அளவிற்கோ வரலாற்றைத் திருகி வாசகர்களுக்கு என்டெர்டெய்ன்மென்ட் கொடுக்கிறேன் என குழப்பிக் கொள்ளவில்லை மாதவன். அதற்காகவே மாதவனுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

டி.எம்.கிருஷ்ணா கர்நாடக சங்கீத விற்பன்னர் என்றாலும், அவர் முற்போக்கு சிந்தனை கொண்டவர் என எல்லாரும் அறிந்ததுதான். அப்படியான ஒரு பாரம்பரிய கலையில் முற்போக்கு சிந்தனை கலக்கக் கூடாது என்று மூர்க்கமாக எதிர்ப்பவர்களுடன் போராடியே அவர் ஒரு எக்ஸ்ட்ரீம் போராளி ஆகிவிட்டார். ஒரு திரைப்படத்திற்கான உருவாக்கத்தில் இருக்கும் பலகட்ட சோதனைகளும், அதில் முதலீடாக இடப்படும் பெரும் பணமும், பலருடைய உழைப்பும் அவர் அறிந்திருக்காததல்ல. இத்தனைக்கும் இந்தப் படம் பல இடியாப்ப சிக்கல்களைக் கொண்ட ஒரு தேசத்துரோக வழக்கையும், அதனைப் பற்றிய பின்புல உண்மைகளை முழுமையாக முன்வைக்கும் முயற்சி. நியாயமாக அவரைப் போன்ற முற்போக்கு சிந்தை கொண்டவர்கள் இது போன்ற முயற்சிகளை வரவேற்க வேண்டும். மாறாக அவசரகதியில் ட்ரோல் செய்து அந்த முயற்சியைக் களங்கப்படுத்தியிருக்க வேண்டாம்.

ஆனால், பொறுமையான செயல்பாடுகள் எல்லாம் கணக்கில் கொள்ளாமல் அந்தந்த நேரத்திற்கு கிடைப்பதைக் கொண்டு யாரையாவது அடிக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு பெரும்பான்மையான மக்கள் வந்துவிட்ட இந்த சமூக ஊடகங்களில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

முதல்நாளே செய்து விட வேண்டும் என்று வெறியுடன் போடப்படும் மொக்கை விமர்சனங்கள், வைரல் ட்ரோல்கள் கடந்து இந்த ராக்கெட்ரி படம் சற்றேனும் மக்களை சென்றடையுமானால், இஸ்ரோ போன்றவற்றின் செயல்பாடுகள் பற்றி எளியோர் நிறைய அறிந்து கொள்ளலாம்.

நம்பி நாராயணன் தன்னுடைய இளமைக் காலத்தில் திரவ எரிவாயு ஏவூர்தி இயந்திர வடிவமைப்பில் செய்த ஆய்வுகளிலும் சோதனைகளிலும் ஈட்டிய வெற்றிக்கு இப்போது ஐம்பது ஆண்டு காலம் ஆகப் போகிறது. இந்த நீண்ட காலத்தில் பெரும்பகுதி அவர் மன உளைச்சலிலே கழித்திருக்கிறார் என்பதுதான் இந்தப் படம் நமக்குத் தரும் செய்தி.

இன்னமும் 100 ஆண்டுகள் கழித்தும் ‘நம்பி மேல் போட்ட வழக்கில் கொஞ்சம் கூடவா உண்மை இருக்காது’ என்று சர்ச்சை நடந்து கொண்டுதானிருக்கும் என்ற நம்பியின் ஆதங்கத்திற்கு நம்மிடையே பதிலில்லை.

ஆனால், எண்பது வயதுவரை தீர்க்கத்துடன் போரிட்டு, தன் மேல் சுமத்தப்பட்ட தீராக்களங்கத்தை ஓரளவுக்கேனும் துடைத்தெடுத்த நிம்மதியோடு சிந்தும் அவருடைய புன்முறுவல் நமக்கு எண்ணற்ற சேதிகளைச் சொல்கிறது.

ஸ்ரீதர் நாராயணன்

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.