Shadow

இதுவரை வந்திராத கதை – சாயா படம்

Saayaa Movie

“இதுவரை தமிழ்ப்படங்களில் சொல்லப்படாத வித்தியாசமான கதை” என்பதில் மிக உறுதியாக உள்ளார் சாயா படத்தின் இயக்குநர் வி.எஸ்.பழனிவேல். ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் மின்காந்த அலைகள் இருக்கும்; அதை ஆரா என்பார்கள்; ஆராவின் ஒளியைக் கொண்டே, உடலிலுள்ள நோயினை அறிய முடியுமெனப் படத்தைப் பற்றிக் கூறும் பொழுது இயம்பினார் இயக்குநர். இந்தப் படத்தின் நாயகன், மனிதர்களைச் சுற்றி இருக்கும் ஆராவைக் காணக் கூடிய சக்தி பெற்றவர் என படத்தின் ட்ரெயிலரில் இருந்து யூகிக்க முடிகிறது. நாயகன் இறந்தவர்களுக்கே உயிர் கொடுப்பது போல் முன்னோட்டத்தில் காட்சிகள் வருகிறது.

மேலும், ”ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனது உடலைப் பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘சாயா’ படம் பதிலளிக்கும்” என்றார் இயக்குநர்.

இந்தப் படம் அமானுஷ்யமான பேய்ப் படமென நினைத்துக் கொள்ள வேண்டாம். தனியார் பள்ளி நிறுவனத்தின் மோசடிகளை எடுத்து இயம்புவதோடு, கல்வியின் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் மிக முக்கியமான சமூகப்படம் என்கின்றனர் படக்குழுவினர்.