Shadow

சலார் விமர்சனம்

கே.ஜி.எஃப் 1 & 2 திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் அடுத்த படம். பிரபாஸுடன் ஈணைகிறார் என்பதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறிப் போய் கிடந்தது. அந்த எதிர்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம்.

மிகப்பெரிய வெற்றிப் த படம் “சலார்”. பாகுபலி நாயகன் பிரபாஸும் பிரசாந்த் நீல் உடன் இணைந்ததால் படத்தின் மீதாபடங்களை கொடுக்கும் இயக்குநர்களுக்கு எப்போதும் வரும் சிக்கல் தான் பிரசாந்த் நீலுக்கும் வந்திருக்கிறது. கே.ஜி.எஃப் திரைப்படத்தை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்கின்ற அழுத்தத்திலேயே படம் எடுத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. சரி அழுத்தம்  இருக்கும் தான்.. அதற்காக கே.ஜி.எஃப் திரைப்படத்தை மீண்டும் அப்படியே எடுத்து வைத்தால் எப்படி..? கே.ஜி.எஃப் திரைப்படத்தில் என்னவெல்லாம் இருந்ததோ அது எல்லாம் “சலார்” திரைப்படத்திலும் அப்படி அப்படியே இருக்கிறது. புறக்கணிக்கப்பட்ட சிறுவன், அவனின் தாய், நாயகனின் பின்கதையை கூறும் ஒருவர் அதைக் கேட்கும் ஒருவர், பல அடுக்கு கட்டுப்பாடுகளுடன் கட்டமைக்கப்பட்ட ஒரு நகரம், நாட்டின் சட்ட திட்டங்கள் அந்த நகரத்தை பாதிக்காது, அந்த நகரின் அதிகார மையத்தை கைப்பற்ற காய் நகர்த்தும் பல்வேறு குழுக்கள் அடங்கிய குள்ளநரிகள்,  அந்த குள்ளநரிகள் கூட்டத்தின் ஒரு குழுவால் நகருக்குள் கொண்டு வரப்படும் நாயகன், அங்கு நாயகனைச் சுற்றி நடக்கும் அநியாயங்கள், ஒரு கட்டம் வரை நாயகன் அதையெல்லாம் பார்த்து அமைதி காப்பது, பின்னர் அமைதி உடைத்து வெகுண்டெழுவது, அந்த நகரின் மக்கள் எல்லாம் அவனை தெய்வமாகப் பார்ப்பது, சிறுவர்கள் அவனை கொண்டாடுவது, ஒரு கட்டத்தில் நாயகன் அந்த நகரையே கைப்பற்றுவது இப்படி எல்லாமே இருக்கிறது. என்ன ஊரின் பெயர் கான்சார் என்று மாற, நாயகனின் பெயர் தேவா என்று நாயகனோ பிரபாஸ் ஆக மாறி இருக்கிறார்.

இப்படி சலார், கே.ஜி.எஃப் இரண்டு படத்திற்குமான கதையில் ஒரே ஒரு வேற்றுமை, கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ஒருவனை கொல்வதற்காக நாயகன் ஊருக்குள் நுழைவான். இங்கு நண்பனைக் காப்பாற்றுவதற்காக ஊருக்குள் நுழைகிறான். வித்தியாசம் அவ்வளவே.  வேண்டுமென்றால் இன்னொரு வித்தியாசத்தையும் சொல்லலாம்.  இதே கதையம்சம் கொண்ட கே.ஜி.எஃப் நம்மை எமோஷ்னலாக கதையுடன் கனெக்ட் செய்தது. சுவாரஸ்யத்தைக் கொடுத்தது, பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளும் கூட நம்பகத்தன்மையுடன் இருந்தது. ஆனால் சலார் எமோஷ்னலாகவும் கனெக்ட் செய்யவில்லை; சுவாரஸ்யத்தையும் கொடுக்கவில்லை; நம்பகத்தன்மையும் இல்லை என்பதே இப்படத்தின் பெரும் குறை.

படத்தின் முதல்பாதியில் பெரும்பாதி  தேவா(பிரபாஸ்) அசகசாய சூரன் என்பதை நிறுவுவதிலேயே பெரிதும் கழிகிறது. கதையாக ஒரு இம்மியும் நகருவதில்லை. பிரபாஸின் பில்டப் காட்சிகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் அதில் நடித்திருக்கும் நடிகர்களின் நடிப்பும் படு செயற்கையாக இருந்து நம்மை சோதிக்கின்றன.  அது போன்ற ஆர்வக்கோளாறுதனத்துடன் கூடிய காட்சிகளைப் பார்க்கும் போது இதை பிரசாந்த் நீல் தான் இயக்கினாரா..? என்கின்ற சந்தேகம் வருகிறது.

அதிலும் குறிப்பாக விரல்களைக் கொண்டே இரும்புக் கம்பியை நசுக்கி அதில் கைத்தடம் பதிவதும், சீல் என்கின்ற முத்திரையைப் பார்த்து அனைவரும் நடுநடுங்குவதும், பிரபாஸின் பெயரைக் கேட்டும், உருவத்தைப் பார்த்தும் அனைவரும் நடுநடுங்குவதுமான காட்சிகளைப் பார்க்கும் போது நாம் காமெடி திரைப்படம் பார்க்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முதல்பாதி வெறும் பில்டப்புகளால் நிறைந்து கதையே இல்லாமல் நகருகிறது என்றால், இரண்டாம் பாதியில் காட்சிக்கு காட்சி கதை சொல்கிறார்கள். என்ன அவர்கள் சொல்லும் கதை தான் ஏற்கனவே கேட்டு பழக்கப்பட்ட கதையாகவே இருக்கிறது.

பிரபாஸ் மற்றும் ப்ருத்விராஜ் உடன் ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, மைம் கோபி, பாபி சிம்ஹா, ஜான் விஜய், ராமச்சந்திர ராஜு, டினு ஆனந்த், மதுகுருசாமி, மீனாக்‌ஷி செளத்ரி, ஜான்ஸி, சரண் சக்தி, என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. ஆனால் அவர்கள் நடிப்பதற்கான காட்சிகளோ களங்களோ இல்லாதது  பெரும் பின்னடைவு.

ரவி பஸூரின் இசை நாயகனுக்கான ஆக்‌ஷன் திரைப்படத்திற்கான இசையைக் கொடுத்தாலும்  காட்சிகளின் பலவீனத்தால் இசை மட்டும் தனியே தெரிகிறது. புவன் கெளடாவின் ஒளிப்பதிவில் காட்சிகளில் அனல் பறப்பதை கண்களால் உணர முடிகிறது.  உஜ்வால் குல்கர்னி படத்தொகுப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.  நீண்ட நெடிய பில்டப் காட்சிகளை இன்னும் செதுக்கி நேரத்தை குறைத்திருக்கலாம்.  அப்படி நேரத்தை குறைத்திருந்தாலும் அது படத்திற்கு எந்தளவும் கை கொடுக்கப் போவதில்லை என்பது வேறு விசயம். ஹொம்பாலே ப்லிம்ஸ் சார்பாக விஜய் கிர்கந்தர் தயாரித்திருக்கிறார்.

மிகப்பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரசாந்த் நீல் “சலார் – பார்ட் 1 சீஸ் ஃபயரில்” சற்று சறுக்கியிருக்கிறார் என்பதே உண்மை. இரண்டாம் பார்ட்-க்கான லீட் மிகச் சரியாக அமைந்திருக்கிறது. முதல் பாகத்தில் விட்ட இடத்தை இரண்டாம் பாகத்தில் பிரசாந்த் நீல் மற்றும் பிரபாஸ் கூட்டணி கைப்பற்றும் என்று நம்பி காத்திருப்போம்.

சலார்: பார்ட் 1 சீஸ் ஃபயர்  – ஏமாற்றம்.

– இன்பராஜா ராஜலிங்கம்