Shadow

சபாநாயகன் விமர்சனம்

காதலும் கடந்து போகும்; அது காலம் செல்ல செல்ல மறந்து போகும் என்கின்ற 2கே கிட்ஸ்கான டேக் இட் ஈஸி காதல் கதை தான் இந்த சபாநாயகன்.

அரவிந்த் என்று சொல்லப்படும் ச.பா.அரவிந்திற்கு பள்ளியில் ஒரு காதல், கல்லூரியில் டிகிரி முடிக்கும் போது ஒரு காதல், பின்னர் சிங்கப்பூரில் இருக்கும் அம்மா அப்பாவை பார்க்கச் சென்ற போது அங்கு ஒரு குட்டி காதல், மீண்டும் பள்ளிகால க்ரஷ் திரும்ப வாழ்க்கையில் வந்ததால் மீண்டும் அவளுடன் காதல், பிறகு எம்.பி.ஏ படிக்கும் போது மற்றுமொரு காதல் இப்படி பல்வேறு காதல்கள் அடங்கிய அரவிந்த்-தின் ஆட்டோகிராப் டைரியே இந்த சபாநாயகன்.

படம் எப்படியோ தொடங்கி, எப்படியோ நகர்ந்து எப்படியோ முடிந்து போகிறது.  பள்ளிகால காதலோ, கல்லூரி காலக் காதலோ, எம்.பி.ஏ கால காதலோ எதுவுமே மனதில் ஒட்டவில்லை. நாயக கதாபாத்திரமோ தன் காதல் மீதோ, தன் காதலி மீதோ எந்தவித பிடிப்பும் அழுத்தமும் தீவிரத்தன்மையும் இல்லாமல் இருப்பதாலும், காதல் தோல்விக்குப் பிறகு அந்தக் காதலை நினைத்தோ, காதலியை நினைத்தோ கவலை கொள்ளாமலும், புலம்பாலும் எளிதாக அடுத்த காதலை நோக்கிச் சென்றுவிடுவதால், அந்தக் காதல் கைகூட வேண்டும் என்கின்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு துளி கூட வருவதில்லை.

காட்டப்பட்ட காதல்களிலேயே மேகா ஆகாஷ் வரும் எம்.பி.ஏ கால காதல் தான் கொஞ்சமேனும் ரொமாண்டிக்காகவும், கவித்துவமாகவும் இருந்தது. அதையும் கடைசியில் கதை என்று சொல்லிவிடுகிறார்கள்.  படத்தின் இயக்குநர் 90ஸ் கிட்ஸ் காலத்தை சேர்ந்தவரோ என்று தோன்றுகிறது. ஏனெனில் காதலை வெளிப்படுத்துவதில் இருக்கும் தயக்கங்களையும் நடுக்கங்களையும் பார்க்கும் போது அந்த எண்ணம் தோன்றுகிறது. ஆனால் காதலை மறந்து எளிதாக அந்த வலியைக் கடந்து அடுத்த காதலுக்கு ஆயத்தம் ஆவதைப் பார்த்தால் நாயகனின் கதாபாத்திர வடிவமைப்பை 90ஸ் கிட்ஸ் ஆக வடிவமைப்பதா..? இல்லை 2கே கிட்ஸ் ஆக வடிவமைப்பதா என்கின்ற குழப்பத்துடனே பணியாற்றி இருக்கிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

கல்லூரிப் போர்ஷனில் சாந்தினியுடன் வரும் எபிசோடில் அந்த 200 ரன் அடிக்க வேண்டும் என்கின்ற விடயம் க்யூட்டாக இருந்தது. இது போன்ற ப்ரெஷான ஐடியாக்களை அள்ளி ஆங்காங்கே காதல் காட்சிகளுக்கு இடையில் தூவி இருந்தால்  எல்லா பருவக் காதல்களுமே ஈர்த்திருக்கும். படத்தின் நீளமும் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம், எப்படி சேரப் போகிறார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு வருவதற்குப் பதிலாக எப்படா சேருவீங்க என்கின்ற எரிச்சல் மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறார்கள்.

நடிப்பாக பார்க்கும் போது அசோக் செல்வன் குறை வைக்கவில்லை. அதே போல் ஹீரோயின்களில் கார்த்திகா முரளிதரன் செகண்ட் இன்னிங்க்ஸில் செமத்தியாக ஸ்கோர் செய்கிறார்.  மேகா ஆகாஷ் தன் அழகினால் கிறங்கடிக்கிறார்.  சாந்தினியும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். ஸ்ரீராம், அருண், ஜெய்சீலன் மூவரும் தங்கள் தேர்வை நியாயம்படுத்தும் அளவிற்கு நடித்திருக்கிறார்கள்.

லியோன் ஜேம்ஸின் இசையிலும் பின்னணி இசையிலும் வசீகரமில்லை. காட்சிகளில் இருக்கும் வெறுமையையும், உப்பு சப்பில்லாத காட்சிகளையும் அப்பட்டமாக காட்டிக் கொடுக்கிறது இசை.  படத்தின் ஒரே ஆறுதல், ஒளிப்பதிவாளர்கள் பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோரின் ஒளிப்பதிவு தான். கண்ணுக்கு குளுமையாக காட்சிகளை அள்ளி வந்திருக்கிறது இவர்களின் கேமரா.

இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயனுக்கு இது முதல் திரைப்படம்.  ஒரு ஜாலியான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு, அதில் ஜாலியாக கதை சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் திரைக்கதையிலோ அல்லது காட்சிகளிலோ பெரிதாக காமெடியும் வொர்க்-அவுட் ஆகாமல், எமோஷ்னலும் எடுபடாமல் படம் இரண்டுக்கும் இடையில் சேருமிடம் தெரியாமல் நிற்கிறது.

படத்தின் நீளத்தை இன்னும் சற்றுக் குறைத்து, காதல் காட்சிகளில் கொஞ்சம் கவித்துவத்தை தூவி, திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யத்தை ஏற்றி இருந்தால், இந்த சபாநாயகன் “சபாஷ் நாயகன்” ஆகி இருப்பான்.

மதிப்பெண் : 2.5 / 5.0