பல்லவர் காலத்தில் செஞ்சி நகரை ஆண்டு வந்த நந்திவர்மன் என்கின்ற அரசன், தன் ஊரை கொள்ளையிட வந்த கொள்ளையர் கூட்டத்தினை விரட்டியடிக்கும் முயற்சியில் மாண்டு போகிறான். அதனைத் தொடந்து அந்த ஊரும், நந்திவர்மன் பூஜித்து வந்த சிவபெருமான் கோவிலும் பூமிக்குள் புதையுண்டு போனதாக நம்பப்படுகிறது. இதை அறிந்து கொள்ளும் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுவினர், செஞ்சி பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தி புதையுண்ட கோவிலையும், நந்திவர்மனின் வரலாற்றை மீட்டு உலகிற்கு உரைக்க முடிவு செய்து, ஒரு குழுவாக செஞ்சி பகுதிக்கு வருகின்றனர். ஆனால் அந்த ஊரில் சிலர் இரவு நேரத்தில் அந்த கோவில் புதையுண்ட பகுதிக்கு சென்று மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். இதனால் மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்கூடாது என்று அந்த ஊரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஊர் மக்கள் அந்தக் கோவில் இருக்கும் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய எதிர்ப்பு தெரிவிக்க, அதையும் மீறி தொல்பொருள் துறையினர் தங்கள் வேலைகளை துவங்குகின்றனர். இதனைத் தொடர்ந்து மேலும் சிலர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். தொல்பொருள் துறையினருக்குப் பாதுகாப்பாக வந்த இன்ஸ்பெக்டர் இந்த வழக்குகளை விசாரிக்கத் துவங்குகிறார். விசாரணையில் மர்ம மரணங்கள் மற்றும் புதையுண்ட கோவில் போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்ததா…? என்பதை விவரிக்கிறது நந்திவர்மன் திரைப்படம்.
நிகழும் மர்ம மரணங்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டராக சுரேஷ் ரவி நடித்திருக்கிறார். வீரதீர சண்டைக் காட்சிகளில் விறைப்பாக இருக்கும் இவரின் நடிப்பு, காதல் மற்றும் எமோஷ்னல் காட்சிகளில் டல்லடிக்கிறது. இவரின் ஜோடியாகவும் தொல்பொருள் ஆராய்ச்சி மாணவியாகவும் நடித்திருக்கும் ஆஷா வெங்கடேஷ் தொல்பொருள் துலக்குவதை விட அதிகமாக காதல் செய்கிறார். நடிப்பாக சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை.
தொல்பொருள் குழுவினரின் தலைவராக வரும் போஸ் வெங்கட் நடிப்பில் அனுபவம் கை கொடுக்கிறது. புதிரான கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்படும் அவரின் கதாபாத்திரம் திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்குப் பயன்பட்டு இருக்கிறது. கல்லூரியின் தொல்பொருள் துறை தலைவராகவும், தொல்பொருள் குழுவினரின் வழிகாட்டியாகவும் நிழல்கள் ரவி நடித்திருக்கிறார். அவரின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. ஊர் தலைவராக நடித்திருக்கும் கஜராஜ் சொல்லிக் கொள்ளும்படி நடித்திருக்கிறார்.
ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர் மற்றும் ஜே.எஸ்.கே கோபி என பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜெராட்டு ஃபெலிக்ஸ் இசையமைத்திருக்கிறார். அவரின் இசையில் காட்சிகளின் மர்மம் கூடுகிறது. கனிராஜன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சியான் முத்து மூவரும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். செஞ்சி பகுதிகளின் ஏரியல் ஷாட்டுகள் கண்ணுக்கு விருந்தாகின்றன. ஏ.கே ஃபிலிம் பேக்டரி சார்பாக அருண்குமார் தனசேகரன் தயாரித்திருக்கிறார். பெருமாள் வரதன் எழுதி இயக்கி இருக்கிறார்.
கோவில் பகுதியை சுற்றி நடக்கும் மர்ம மரணங்கள், புதையுண்டு போன நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னனின் கற்பனையான வரலாறு, நந்திவர்மனின் பிரத்யேகமான கண்ணுக்கு தெரியாத ஆயுதம், என சுவாரஸ்யமான முடிச்சுகளுடன் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த மர்ம முடிச்சுகளின் பின்னால் அவிழும் காரணங்கள் தான் மிகவும் சராசரியான விடயங்களாக இருக்கிறது. மேலும் சங்கு ஊதிக் கொண்டு திரியும் சாமியார் கதாபாத்திரம் போன்றவை கதையில் மாயத்தை கிளப்ப மட்டுமே பயன்பட்டு இருப்பதும் ஏமாற்றம். கடைசி க்ளைமாக்ஸ் காட்சிகளில் பெரிய நடிகர்களின் சண்டைகளையே இப்பொழுது பார்வையாளர்கள் பார்க்கத் தயாராக இல்லாத போது, நிழல்கள் ரவி, போஸ் வெங்கட், கஜராஜ் போடும் சண்டைகள் படத்தின் மீதான சலிப்பை மேலும் அதிகரிக்கின்றன.
வரலாற்று ரீதியிலான கதைப் பின்புலம், தொல்பொருள் ஆராய்ச்சி என மிகப்பெரிய பட்ஜெட்டிற்கான கதையை எடுத்துக் கொண்டு அதை மிகக்குறைந்த பொருட்செலவில் படமாக்கி இருப்பதால் கதை சார்ந்த நம்பக்தன்மை கடைசி வரை வரவில்லை. மேலும் சி.ஜி காட்சிகளில் பூமி பிளப்பதும், இடிந்து விழும் கோயில்களும், பூமிக்குள் இருந்து மீட்கப்படும் நடராஜர் சிலைகளும் மலைப்பை ஏற்படுத்தாமல் நகைப்பையே ஏற்படுத்துகின்றன. இப்படி பட்ஜெட்டிற்கு பொருந்தாத கதைக்களத்தை எடுத்துக் கொண்டு களமாட முனைந்திருப்பது பெரும் பிழை.
மொத்தத்தில் நந்திவர்மன் கற்பனையாகவும், வரலாற்றுப் பின்னணி கொண்டு மர்ம மரணங்கள் என சுவாரஸ்ய முடிச்சுகளுடன் நம்மை ஈர்த்தாலும், மர்மங்களுக்கு பின்னணியாக சித்தரிக்கப்படும் காரணிகள் சிலிர்ப்பூட்டாமல் கற்பனை வறட்சியால் வாட்டுகின்றது. மேலும் சி.ஜி காட்சிகளும் சிறப்பாக இல்லை. வரலாற்றுப் பின்னணியின் கற்பனையும் சங்கூதிக் கொண்டு திரியும் சாமியாரும் மர்மங்களைக் கூட்ட மட்டுமே பயன்படுத்தப்பட்டு மாயமாகிவிடுகிறார்கள். படம் முடியும் தறுவாயில் மற்ற எல்லாமே மறந்து போய் படம் எதைப் பற்றிய கதை என்பது மட்டுமே எஞ்சி நிற்பதால், அந்த வரிசை படங்களில் இதுவும் ஒரு படமாக சுருங்கி விடுகிறது.
மதிப்பெண் 2.5 / 5.0