
படத்தில், விஜய் சேதுபதி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயரே படத்தின் தலைப்பாகும். மருதமங்கலத்தில் காப்பர் ஃபேக்டரி நிறுவ நடக்கும் முயற்சியைச் சட்டத்தின் உதவியோடு சங்கத்தமிழன் எப்படித் தடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இடைவேளை வரையிலான படத்தின் முதற்பகுதி சுமார் 1 மணி 10 நிமிடங்கள் கால அளவு ஓடுகிறது. கதையைத் தொடங்காமல், விஜய் சேதுபதியும் சூரியும் அநியாய மொக்கை போடுகிறார்கள். கதை தொடங்காததால், கதையோடு இயைந்த நகைச்சுவைக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விஜய் சேதுபதி மாஸோ மாஸ் என்பதை நிறுவுவதற்காக மட்டுமே படத்தின் முதற்பாதியை உபயோகித்துக் கொண்டுள்ளார் இயக்குநர் விஜய் சந்தர்.
இரண்டாம் பாதியில், ஸ்டெர்லைட் பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளார் இயக்குநர். அப்பிரச்சனையில் நிகழ்ந்த அரசு பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசாமல், வழக்கமான கார்ப்ரேட் வில்லனின் அட்டூழியம் என்பதாகப் படம் பயணிக்கிறது. அந்தப் பயணத்திற்காகவது தனது திரைக்கதையில் சுவாரசியமான ஸ்கெட்ச் போட்டிருக்கலாம் இயக்குநர். தெலுங்குப் படத்தை ரீ-மேக் செய்தது போல் திரைக்கதை அமைத்துள்ளார் விஜய் சந்தர். ஒரே ஆறுதல், தெலுங்குப் படத்தில் வரும் ரத்தம் தெறிக்கும் க்ளைமேக்ஸைத் தவிர்த்து, நாயகன் சட்டரீதியாகத் தீர்வு காண்கிறார். ஆனால், அதற்கு ஏன் முதற்பாதி படம் முழுவதும் மறைந்து வாழ்கிறார், வில்லனின் மகளான ராஷி கண்ணாவிடம் நாடகமாடி நட்பு ஏற்படுத்திக் கொள்கிறார் என்றெல்லாம் புரியவில்லை.
விஜய்சேதுபதியின் அத்தை மகளாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மாமன் மகனைக் காதலிப்பதற்காக நேர்ந்து விடப்பட்டாலும், ஊருக்காக முதல் ஆளாக நாயகனுக்கு முன் குரல்கொடுக்கும் பாத்திரத்தில் ஈர்க்கிறார். நாசர், ஸ்ரீமன், மைம் கோபி என பலர் நடித்திருந்தாலும் எவர் பபாத்திரமும் மனதில் நிற்கவில்லை.
கதையின் நாயகனாக வலம் வரும் வரை உறுத்தாத விஜய் சேதுபதி, நாயகனை மாஸாகக் காட்டுவதற்காகக் கதையமைக்கும் போது துருத்திக் கொண்டு தெரிகிறார். கதை கோராத பட்சத்தில், திணிக்கப்படும் சண்டைக் காட்சிகளைப் பொறுத்துக் கொள்ள மிகவும் பொறுமை தேவைப்படுகிறது. போதாக்குறைக்கு விவேக்-மெர்வின் பின்னணி இசை, குறிப்பாகச் சண்டைக் காட்சிகளில் ஓவர் இரைச்சல். திரைக்கதைக்கான மூலப் பொருட்கள் எதையும் சேர்க்காமல், வெறும் மசாலாபொருட்களைக் கொண்டு மட்டும் சங்கத்தமிழனைப் படைத்துவிட்டுள்ளார் இயக்குநர்.