தலைப்பிலிருந்தே படத்தின் கதையை யூகிக்கலாம். சேட்டுக்கு வட்டி கட்டாதவர்களின் வண்டிகளை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கும் நாயகன், தாதாவான ராயபுரம் குமாரின் காரைத் தூக்குவதால் அவனது கோபத்திற்கு உள்ளாகிறான். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
ஸ்கெட்சிற்கு வண்டிகளைப் பறிமுதல் செய்ய உதவும் நண்பர்களாக ‘கல்லூரி’ வினோத், ‘கபாலி’ விஷ்வநாத், ஸ்ரீமன் ஆகியோர் வருகின்றனர். படத்தில், ஸ்டைலான பளபளப்பான பரோட்டா சூரியும் உண்டு. ஆனால், நாயகனின் நண்பனாகவோ, நகைச்சுவைக்காகவோ இல்லாமல், கதையில் ஒரு பாத்திரமாக வருகிறார். சேட்டாக ஹரீஷ் பெராடி நிறைவாக நடித்துள்ளார்.
படத்தின் திரைக்கதை, தன்னுள் பார்வையாளர்களை இழுத்துக் கொண்டு சுவாரசியப்படுத்த முற்படவில்லை. விக்ரமின் உடல்மொழியும், வசனம் உச்சரிக்கும் தொனியும் ஒரு டெம்ப்ளட்க்குள் உறைந்துவிட்டதாகவே தெரிகிறது. அதிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்வது மிக அவசியம். காரின் நம்பர் கொண்டு அவர் கொலையாளிகளை நெருங்குவது ரசிக்க வைக்கிறது. அவரால் காதலிக்கப்படுபவராக தமன்னா. முகத்தில் தெரியும் முதிர்ச்சி அவரை ‘லவ்’ ஹீரோவில் இருந்து கொஞ்சம் அந்நியமாகக் காட்டுகிறது.
மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடித்துள்ளார். பெரிதாய் மிரட்டுவதற்கு வாய்ப்பில்லாத வழக்கமான வில்லன் தான் எனினும், அவரது ஆகிருதியும் தோரணையும் செமயாக உள்ளன. பாபநாசம் படத்தில் கெளதமியின் தம்பியாக நடித்த அபிஷேக் வினோத், இப்படத்தில், ராயபுரம் குமாரின் அடாவடித்தனங்களை ஒடுக்கும் காவல்துறை உயரதிகாரியாக வருகிறார். குரங்கு பொம்மை படத்தில் நேர்த்தியாய் நடித்திருந்த தயாரிப்பாளர் தேனப்பன், இப்படத்தில் அரசியல்வாதியாக மனதில் பதிய மறுக்கும் வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தின் ஒரு காட்சியில், வண்டிக்கு சரியான டாக்குமெண்ட்ஸ் எடுத்துப் போகாததால் தமன்னாவும் விக்ரமும் காவல் நிலையத்தில் அமர்ந்திருப்பார்கள். காவல்துறை அதிகாரியான ராமதாஸ், வண்டி திருடப்பட்டதாகப் புகாரளித்திருந்த ஒரு நபருக்குத் தொலைபேசியில் அழைப்பார். அவ்வழைப்பு தமன்னாவிற்கே செல்லும்.
படத்தின் முடிவு அவசர கோலத்தில் திணிக்கப்பட்டது போல் தெரிந்தாலும், மிக சர்ப்ரைஸான க்ளைமேக்ஸாக உள்ளது. அதனூடாகச் சொல்லப்படும் மெஸ்சேஜும் ஏற்புடையதாகவே உள்ளன. கதையையே அந்தப் பின்னணியில் இன்னும் வலுவாக உருவாக்கியிருக்கலாம் இயக்குநர் விஜய் சந்தர்.