
குழந்தைகளுக்கான ஒரு ஸ்பூஃப் பேய்ப்படம். தெறிக்க விட்டாலும், பேய்கள் யாரையும் கொல்வதில்லை. மாறாகச் சிறுவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல தன் அறிவை மேம்படுத்திக் கொள்கின்றன பேய்கள்.
பாழடைந்த கோட்டை போன்ற பங்களாக்குள் சிக்கிக் கொள்ளும் ஒன்பது சிறுவர்களை பணப்பேய் பிடித்த மனிதர்கள் கொல்லப் பார்க்கின்றனர். அவர்களிடமிருந்து சிறுவர்களைப் பேய்கள் எப்படிப் பாதுகாக்கின்றன என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் அழகழகான சிறுவர்களின் பட்டாளம் ஒன்றுள்ளது. குட்டிப் பேய் மலராக நடித்திருக்கும் மோனிகா செம க்யூட். தனிமையில் விளையாட ஆள் இல்லாமல் தவிக்கும் அந்தக் குட்டிப் பேய்க்குச் சிறுவர்களைப் பார்த்ததும் செம குதூகலமாகி விடுகிறது.
படத்தின் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ள திலீப் சுப்புராயன், ஆகாயம் எனும் குழந்தைக் கடத்தல்காரனாக நடித்துள்ளார். நல்ல காமிக்கலான கதாபாத்திரத்தை நகைச்சுவையாகச் செய்துள்ளார். ‘டார் டார் டமாரு’ எனச் சொல்லிக் கொண்டு ஃபுல் எனர்ஜியுடன் அவர் செய்யும் அலப்பறை ரசிக்க வைக்கிறது. படத்தில் இடையிடையில் சில வசனங்கள் புருவத்தை உயர்த்த வைக்குமளவு இருக்கின்றன. “பணம் நிரந்திரமில்லைன்னு சொல்ற மனுஷங்க எல்லாம் போயிட்டாங்க. ஆனா அந்தப் பணம் தான் நிரந்திரமா இருக்கு” என்று ஆகாயம் பேசும் வசனத்தைச் சான்றாகப் பாவிக்கலாம்.
சில காட்சிகள் கடியைக் கூட்டினாலும், சிறுவர்கள் ரசித்துப் பார்க்கின்றனர். படத்தில் கிப்ரிஷ் (Gibberish) மொழி பேசும் பேயோட்டி, மேஜிக்கல் கோஸ்ட் ரைடரான அமெரிக்கரைப் பார்த்து, ‘அடேய், சூப்பர் மார்க்கெட்ங்கிற பேர்ல சிறு வணிகத்தைத்தான் காலி பண்ணீங்க.. இப்ப பேயோட்டும் தொழிலுக்கும் போட்டியா வந்துட்டீங்களா?’ எனக் கேட்டு, அமெரிக்கனுக்கு ஸ்பெஷல் வாத்தியக் கருவிகளை வாசிப்பார் உள்ளூர் பேயோட்டி. இப்படியாக அரசியலையும் வசனங்களில் நகைச்சுவையாகத் தூவியுள்ளார்.
நிறைவேறாத ஆசையோடு இறப்பவர்கள் மட்டும் தான் பேயாவார்கள் என குட்டிப் பேயின் அம்மா பேய் அங்கயற்கண்ணி சொல்ல, ‘இனத்துக்காக இறந்தவர்களின் நிறைவேறாத ஆசையோடு உனக்குப் பெரிய ஆசையா?’ என்ற கேள்வி அட்டகாசம். அங்கயற்கண்ணியாக ‘புன்னகை பூ’ கீதா நடித்துள்ளார்.
படம் முடிந்த பிறகு, போஸ்ட் கிரெடிட் காட்சிகள் வருகின்றன. பேயிடம் சிறுவன் தமிழன் ஒரு கேள்வி கேட்கிறான். தியேட்டரே வெடி சிரிப்பில் குலுங்குகிறது. செம டைமிங் கேள்வி அது. இயக்குநர் மாரிசனின் குசும்பு, காட்சிகளில் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பது சுவாரசியம்.