Shadow

ஜுமான்ஜி – வெல்கம் டூ தி ஜங்கிள் விமர்சனம்

jumanji-2017

காட்டுக்குள் ஜாலியான அட்வென்ச்சர் சஃபாரிக்கு உத்திரவாதம் அளிக்கிறது படம்.

பள்ளியில் நான்கு மாணவர்களை ‘டெடன்ஷன்’ செய்து அவர்களுக்கு ஓரறையைச் சுத்தம் செய்யும் பணியைத் தருகின்றனர். அங்குள்ள ‘ஜுமான்ஜி’ எனும் வீடியோ கேமை விளையாடி அதற்குள் உறிஞ்சப்படுகின்றனர் மாணவர்கள். ஜுமான்ஜி காட்டின் சாபத்தை அவர்கள் போக்கினால் தான் அந்தக் காட்டில் இருந்தும், விளையாட்டில் இருந்தும் வெளியேற முடியும். ஜுமான்ஜியின் சாபத்தை மாணவர்கள் எப்படிப் போக்குகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

மாணவர்கள் விளையாட்டுக்குள் போகும் பொழுது, வேறு உருவத்தில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் அவதாரங்களில் காட்டுக்குள் விழுகின்றனர். அதில், மேக்கப் மற்றும் செல்ஃபி விரும்பியான பெத்தானி எனும் பள்ளி மாணவி, ‘கர்வி ஜீனியஸ்’ என்று அவதாரத்தைத் தேர்ந்தெடுத்து ஆணாக ஜுமான்ஜியில் உலா வருகிறார். அந்தக் கதாபாத்திரம், அதாவது நடு வயது ஆணின் உடம்புக்குள் புகும் பள்ளி மாணவியைக் கொண்டு ‘அடல்ட்’ காமெடியை ஆபாசமின்றி மிக நாசூக்காகக் கையாண்டுள்ளனர். 

ராக் என அறியப்படும் ட்வானே ஜான்சன் கலக்கியுள்ளார். ராக்கிற்கு இப்படத்தில் ப்ரேவ் ஸ்டோன் (Bravestone) எனப் பெயர். அஜானபாகு ஸ்டோன் ஒரு காட்சியில், “ஐ ஆம் நெர்ட் (nerd)” எனக் குதூகலிப்பார். அந்த நான்கு மாணவர்களின் குணாதிசயங்களைப் படத்தின் தொடக்கத்தில் தெளிவாக அடித்தளம் போட்டுவிடுகின்றனர். முழுப் படத்திற்குமான அச்சாணி அது தான்.  ஜீனியஸாக மாறும் பெத்தானியின் கண்களில், 20 வருடங்களுக்கு முன் ஜுமான்ஜி விளையாட்டில் தொலைந்து விடும் அழகான அலெக்ஸ் மீதான காதலை, ஜாக் பிளாக் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். ஆண்களை எப்படித் திசை திருப்புவதென கரென் கில்லன் கற்றுக் கொண்டு சொதப்பும் காட்சி ரசிக்க வைக்கின்றன. 

பாம்பின் விஷப் பற்களைப் பிடுங்கும் கெவின் கார்ட், செல்ஃபி எடுக்க முடியவில்லையே எனக் கவலைப்படும் ஜாக் பிளாக், என் உடல் பாதியாகிவிட்டதெனக் கவலைப்படும் மெளஸ், கேக் சாப்பிட்டால் வெடித்துவிடும் ஃபின்பார் எனப் படத்தை ரசிக்க வைப்பது கதாபாத்திரங்களும், அவர்கள் பேசும் வசனங்களுமே! வில்லனும், அவரது அத்தியாமும் மொக்கை. 

ராபின் வில்லியம்ஸ் நடிப்பில் 1995இல் வெளிவந்த ஜுமான்ஜி படத்தில் இருந்த வசீகரமும் நகைச்சுவையும் இப்படத்தில் மிஸ்ஸிங். 3டி எஃபெக்ட்ஸும் படத்தில் பெரிதாக இல்லை. ஆனால், காட்டின் வசீகரமும், கெவின் கார்ட்டின் நகைச்சுவையும், ஜாக் பிளாக்கின் அலட்டில்லாத் தேர்ந்த நடிப்பும், ராக்கிடம் வெளிப்படும் பயந்த சுபாவத்தின் ஊடான முரட்டுத்தனமும் படத்தை ரசிக்க வைக்கின்றன. 

 
தொழில்நுட்பத்திலும், வீடியோ கேம்ஸிலும்,  மூழ்கியிருக்கும் தலைமுறையை, ஒரு விளையாட்டு, ஓடி ஆடி – ஒற்றுமையாகச் சேர்ந்து காட்டில் விளையாடும் ஒரு விளையாட்டு, நான்கு மாணவர்களை எப்படி இணைக்கிறது, அவர்களுக்கு என்ன படிப்பிணைகளை வழங்குகிறது என்பதுதான் படத்தில் ஹை-லைட்டான் விஷயம். சிறுவர்களைச் சிறுவர்களாக இருக்க விட வேண்டிய அவசியத்தைப் படம் அழகாய் வலியுறுத்துகிறது.