
விஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசும் போது, “நடிகர் விஜய் சேதுபதியுடன் நான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடிக்கும் போது, ‘இந்த முகமெல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்குமா அம்மா?’ என என்னிடம் கேட்பார். அப்போது, ‘உனக்கென்னப்பா குறை. பார்க்க லட்சணமாக இருக்கிறாய். பெரிய ஆளா வருவாய்’ என்று வாழ்த்தினேன். ஆனால் இன்று அவருடைய தயாரிப்பில் நடித்து, அவரிடமிருந்து சம்பளத்தை வாங்கியிருக்கிறேன். ஒரு தாய் தன்னுடைய மகனின் வளர்ச்சியை எப்படி பெருமிதமாக பார்த்துக் கர்வப்பட்டுக் கொள்வாரோ அதே போல் விஜய் சேதுபதியின் வளர்ச்சியை நான் பார்க்கிறேன். அவர் மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் அருண் பாண்டியன் பேசும் போது, “நடிகர் விஜய் சேதுபதி எதையும் எதிர்பார்க்காதவர். இவரைப் போன்ற ஒரு மனிதரை என்னுடைய நாற்பது ஆண்டு கால திரையுலகப் பயணத்தில் கண்டதில்லை. படத்தைப் பற்றி இயக்குநர் என்னிடம் என்ன சொன்னாரோ அதை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறார். ஜுங்கா, பெரிய பட்ஜெட்டில் உருவான படம்” என்றார்.