
“ஆனி போய், ஆடி போய், ஆவணி வந்துச்சுன்னா அவன் டாப்பா வருவான்” என்ற சரண்யா பொன்வண்ணனின் நம்பிக்கை நனவானதா இல்லையா எனச் சொல்ல வருகிறது களவாணி 2.
களவாணியின் முதல் பாகம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. அதனூடே, பிக் பாஸில் விழுந்த புகழ் வெளிச்சத்திற்குப் பிறகு, ஓவியா மீண்டும் நடிக்கிறார் என்பது இப்படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
சமீபத்தில் ஓவியாவும் விமலும் நடித்த, ‘ஒட்டாரம் பண்ணாத’ என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ பாடலை எழுதிய மணி அமுதவன் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். இயக்குநர் சற்குணம் மற்றும் படக்குழுவினர் இந்தப் பாடலை ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்கத் திட்டமிட்டனர். கலை இயக்குநர் குணசேகரன், நிஜத்தைப் பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சமாக இது இருக்கும்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது. எப்போதும் உத்வேகத்துடன் படத்தை முடிப்பதில் கவனத்தோடு இருக்கும் இயக்குநர் சற்குணம், மிகக் கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்.
நடிகர் சூரியைத் தவிர, ஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாப்பாத்திரத்தில் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார்கள். ஆர்ஜே விக்னேஷ் நாயகன் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார்.