ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஜூன் 25 அன்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, இயக்குநர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
படத்தின் இயக்குநர் ஜாய்சன் பேசுகையில், “இது என்னுடைய முதல் தமிழ்த் திரைப்படம். இது ஒரு த்ரில்லர் படம். நடிகர் ரகுமான், நடிகை இனியா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்’ எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்தர் பேசுகையில், “இந்தப் படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்களை மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். அவருடன் பாடல் எழுதிய அனுபவம் மறக்க முடியாத நினைவுகள். சென்னையிலிருந்து ஆந்திரா வரை பயணம் மேற்கொண்டே மூன்று பாடல்களையும் எழுதி கொடுத்தார். அவருடைய ஆசி எனக்கும், இந்தப் படக்குழுவிற்கும் என்றைக்கும் இருக்கும்” என்றார்.
அறிமுக நாயகன் நிகில் மோகன் பேசுகையில், “இது என்னுடைய முதல் படம். இந்தப் படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். ரியல் எஸ்டேட் பின்னணியில் சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர், காமெடி, ஆக்ஷன், லவ், சென்டிமெண்ட் என எல்லா அம்சங்களும் கலந்து உருவாக்கப்பட்ட கமர்சியல் எண்டர்டெயினர் தான் இந்த சதுரஅடி 3500. ஏராளமான திருப்பங்களுடன் அனைத்துத் தரப்பினரையும் கவரும் படமாகத் தயாராகியிருக்கிறது” என்றார்.
படத்தினை வெளியிடும் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ராகுல் பேசுகையில், “படத்தின் சஸ்பென்ஸ் கன்டெண்ட் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்” என்றார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “எல்லாத் தியேட்டர்களிலும் எப்போதும் ஏதேனும் ஒரு சிறிய படம் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை ஏன் போடக்கூடாது? எப்போது பார்த்தாலும் பெரிய ஆர்ட்டிஸ்ட் படம் தான் ஒடவேண்டும் என்று எந்த நியதியும் இல்லையே? ஒவ்வொரு தியேட்டரிலும் சிறிய படங்களுக்குக் காட்சிகளை ஒதுக்க வேண்டும். அதற்காக காலை காட்சியை ஒதுக்கக் கூடாது. பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் அந்தப் படத்தைக் காண ரசிகர்கள் காலை காட்சிக்கு வருவார்கள். ஆனால் புதுமுகங்கள் நடித்திருக்கும் சின்ன படங்களுக்கு ரசிகர்கள் வரமாட்டார்கள். இதைக் காரணமாகக் காட்டித் தியேட்டரிலிருந்து படத்தைத் தூக்கிவிடுகிறார்கள். படம் பார்த்த ரசிகர்களின் மெளத்-டாக் பரவுவதற்குள் படத்தைத் தூக்கிவிட்டால் சின்ன படங்கள் எப்படி ஒடும்? அதனால் சின்ன பட்ஜெட் படங்களுக்குத் தியேட்டர்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும். கண்டிப்பாக ஏதேனும் ஒரு சின்ன படம் தியேட்டரில் ஓடிக் கொண்டே இருக்கவேண்டும் என்பது போல் ஒரு நடைமுறையை உருவாக்கவேண்டும். அதே போல் ஏசி வசதி, பார்க்கிங் வசதி போன்ற எல்லா வசதிகளும் கொண்ட நல்ல தியேட்டர்களும் சின்ன படங்களைத் திரையிட முன்வரவேண்டும்.
இந்தப் படத்தின் டைட்டிலைப் பார்த்தவுடன் இது ஒரு சஸ்பென்ஸ் படமாக இருக்கும் என்று நினைத்தேன். இந்த வருடமே ஒரு சஸ்பென்ஸான வருடம் தான். ஜெயலலிதா அம்மா ஹாஸ்பிட்டலில் இருந்தது சஸ்பென்ஸாக இருந்தது. அதற்கு பின் இவர்கள் வருவார்களா? அவர்கள் வருவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் இவர்கள் அங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? அவர்கள் இங்கே போய் சேர்ந்துவிடுவார்களா? என்ற சஸ்பென்ஸ் இருந்தது. அப்புறம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தலில் வெங்கய்ய நாயுடுவுக்கு அந்தக் கட்சிகாரர்களே ஓட்டுப் போடுவார்களா மாட்டார்களா என்ற சஸ்பென்ஸ் இருந்து கொண்டேயிருக்கிறது. இது போல் ஏகப்பட்ட சஸ்பென்ஸ்களுடன் இருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில், இந்த ‘சதுர அடி 3500’ படம் வெளியாவது விசேசம்.
படத்தின் இயக்குநர் ஜாய்சன் அவருடைய குரு வைஷாக்கிற்கு நல்லதொரு மரியாதையைப் பெற்றுத்தருவார். அறிமுக நாயகன் நிகில் சுதந்திரமாக அனுபவித்து நடித்திருக்கிறார். நன்றாக இருக்கிறது. படம் வெற்றி பெறும்” என வாழ்த்தினார்.