ஹேப்பி ஹாபிட், ஸ்டார் வார்ஸ், பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் போன்ற லைவ் ஆக்ஷன் படங்களின் பின்னால் இருக்கும் நபர் ஆண்டி செர்கிஸ். சீசரின் நடை, உடல்மொழி, பாவனைகளுக்குச் சொந்தக்காரர்.
“சீசரின் அசாதாரணமான சாதனை என்னவென்றால் மனிதர்களையும் மனிதக்குரங்குகளையும் பேலன்ஸ் செய்து நடக்கும் பாங்கு தான். முதல் பாகத்தில், தன்னை ஒரு மனிதனாக நினைத்து வளரும் சீசர், மனிதகுரங்குகளுடன் அடைக்கப்பட்டதும் தானொரு மனிதக்குரங்கென உணர்கிறது. தனது இனத்திற்காக ஒரு சமூகத்தை உருவாக்கி, மனிதர்களுடன் போருக்குத் தயாராகும் அளவு பிரமிக்கத்தக்க வகையில் வளர்கிறது. தன்னையொரு லீடராக உனர்கிறது. தன் குடும்பத்தையும், தன் இனத்தையும் மிகவும் நேசிக்கும் சீசர் இரண்டையுமே அழகாகப் பேணிக் காக்கிறது” என அவருக்கு அழியாப் புகழ் தேடித் தந்த சீசர் பற்றிக் கூறுகிறார் ஆண்டி செர்கிஸ்.
படம் பார்த்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக பேட் ஏப் எனும் புது கதாபாத்திரத்தால் கவரப்பட்டிருப்பர். அதைப் பற்றி ஆண்டி செர்கிஸ் விவரிக்கையில், “வார் ஃபார் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் – படத்திற்காகப் புதிதாகச் சேர்ந்தவரான ஸ்டீவ் ஒரு நல்ல காமெடி நடிகர். தனது பாத்திரமான ‘பேட் ஏப்’பை (Bad Ape) உள்வாங்கி மிக அருமையாக நடித்துள்ளார். சீசருக்கும், பேட் ஏப்க்குமான உறவு அலாதியானது. பேட் ஏப் தங்கள் பழங்குடியைச் சேர்ந்தது இல்லையெனினும், தன்னைப் போலவே ஜூவில் பல இன்னல்களை அனுபவித்தது என உணர்ந்து கொள்கிறது சீசர். ஸ்டீவ் தியேட்டர் ஆர்டிஸ்ட் வேறு. அவருடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது” என்றார்.
65mm-இல் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் சிறப்பான ஒளிப்பதிவைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் ஆண்டி செர்கிஸ். “மேட்(Matt)-க்கு, தனது கையின் பின்புறம் போல் தெள்ளத்தெளிவாகப் படத்தின் கதை தெரியும். ‘டான் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’க்குப் பிறகு அவருடன் மீண்டும் பணிபுரிவதில் மகிழ்ச்சியை அளித்தது. அவரது எனர்ஜி அபிரதமானது. இந்தத் தொடர் படங்களில் பொதிந்துள்ள உருவகத்தை (metaphor) நன்றாக உணர்ந்து, எஞ்சாய் செய்து எடுத்துள்ளார்” என இயக்குநர் மேட் ரீவ்ஸ்க்குப் புகழாரம் சூட்டினார் செர்கிஸ்.