Shadow

செம விமர்சனம்

Sema movie review

நாயகன் பெயர் குழந்தை. குழந்தையாக ஜீ.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார்.

குழந்தைக்கு 3 மாசத்துக்குள் கல்யாணம் செய்யவேண்டும். இல்லையென்றால் 6 வருடம் கல்யாணம் தள்ளிப் போகும் என்பதால், குழந்தையின் அம்மாவான ஆரவல்லி பெண் பார்க்கும் படலத்தில் தீவிரமாக ஈடுபடுகிறார். சில அவமானங்களுக்குப் பிறகு, மகிழினியை நிச்சயம் செய்கின்றனர். திடீரென, மகிழினியின் தந்தை அட்டாக் பாலா நிச்சயத்தை நிறுத்தி விடுகிறார். அவமானம் தாங்காமல் குழந்தையின் அம்மா ஆரவல்லி கிணற்றில் குதித்து விடுகிறார். அதற்குக் காரணமான அட்டாக் பாலா மீது ஆத்திரம் கொள்ளும் குழந்தை, அவரை எப்படிப் பழி வாங்குகிறார் என்பதே படத்தின் கதை.

மிகக் குழந்தைத்தனமான பழி வாங்குதல்தான் படத்தின் பலவீனம். ஒரு சீரியஸ்னஸே இல்லாத நேர்க்கோட்டில் பயணிக்கும் கதை. நகைச்சுவையும் முழுவதுமாக இழையோடாத திரைக்கதை. ஆனால், போரடிக்காமல் பார்த்துக் கொள்கின்றனர் யோகிபாபுவும், கோவை சரளாவும்.

ஆரவல்லியை வம்புக்கு இழுக்கும் கதாபாத்திரம் மிக இயல்பாய் வந்துள்ளது. வம்புக்கு அலைவதையே பொழுப்பாக அலைந்து கொண்டிருக்கும் பாத்திரத்திற்குத் தக்கதொரு ஆளைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் வள்ளிகாந்த். வம்பு பேசுவதில் அந்தப் பெண்மணி காட்டும் வக்கணை அட்டகாசம். அவருக்கு முன், ஆரவல்லியாக நடித்திருக்கும் சுஜாதாவல் ஈடு கொடுக்க முடியவில்லை என்றே சொல்லவேண்டும்.

ஓமகுண்டம் என்ற பாத்திரத்தில் யோகி பாபு வருகிறார். படத்தை அவரது ஒன்-லைன் கவுன்ட்டரே காப்பாற்றுகிறது எனினும், யோகி பாபுவிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை விடக் கம்மியாகவே இப்படத்தில் கொடுத்துள்ளார். அது அகப்பையின் தவறன்று, சட்டியில் இல்லாததே குறை!

மகிழினி எனும் பாத்திரத்தில், செம நாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளார். அழகாக, பாந்தமாகப் பார்த்ததும் பிடித்துவிடக் கூடிய லட்சணத்துடன் இருக்கிறார். ஏற்கெனவே, தொண்டன் படத்தில் தோன்றியிருந்தாலும், நாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளது இப்படத்திலேயே!

அட்டாக் பாலாவாக காமெடி அரிதாரம் பூசியுள்ளார் மன்சூர் அலி கான். கடன்காரர்களைச் சமாளிக்கும் பாத்திரத்தில் சோபிக்காவிட்டாலும், க்ளைமேக்சில் ஒரு தந்தையாக முழுமையடைவது சிறப்பு. சவால் விடுவது நாயகன் எனினும், அதைத் திறம்பட எக்ஸிக்யூட் செய்வது கோவை சரளாவே! படத்தின் உண்மையான நாயகி அவர்தான். இடைவேளை வரை குழந்தையும் ஓமகுண்டமும், இயக்குநர் பாண்டிராஜின் ஒன்லைனர்களால் தடுமாற, இரண்டாம் பாதி படத்தை நகர்த்துவது கோவை சரளா தான். ஜீ.வி.பிரகாஷின் இசையும், விவேக்கானந்தனின் ஒளிப்பதிவும் பாடல் காட்சிகளில் மட்டும் வண்ணமயமான இளமைத் துள்ளலைக் கொண்டு வந்துள்ளது.