“இப்படம் முழுக்க முழுக்க X வீடியோஸ் என்கிற இணையதளத்திற்கு எதிரான படம். இந்த இணையதளம் மூலம் மக்களின் வாழ்க்கையில் எப்படி அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்” என்கிறார் படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர்.
அந்தரங்கமான நேரத்தை மொபைலிலோ, கேமிராவிலோ விளையாட்டாய் எடுக்கப்படும் வீடியோக்கள் எப்படியெல்லாம் ஆபாச இணையதளங்கள் சேகரித்து ஒளிபரப்புகின்றனர் என்பதை உறித்துக் காட்டியுள்ளார் இயக்குநர். அப்பட்டமாகவே உறிப்பதால் A சான்றிதழ் பெற்றுள்ளது படம்.
அரை நிர்வாணக் காட்சிகளின் துல்லியம் சற்றே திடுக்கிட வைக்கின்றன. இயக்குநர் சஜோ சுந்தரின் தைரியம் ஆச்சரியமூட்டுகிறது. கதைக்கருவை மட்டுமின்றி, காட்சிப்படுத்திய விதத்திலும் பெரிதும் சமரசமின்றி எடுத்துள்ளார். ஆனால், அத்தகைய காட்சிகள் திரைக்கதையின் நோக்கில் இருந்து விலகாமல் கட்டுக்குளேயே அவிழ்வது ஆறுதல். முற்றிலும் புதிய முகங்களைக் கொண்ட படமெனினும், பேசுபொருளாலும் கலகலப்பான திரைக்கதையாலும் சுவாரசியப்படுத்தியுள்ளார் இயக்குநர். ஒருவரின் ஆண்ட்ராய்ட் மொபைலில் இருக்கும் 60 ஆபாச வீடியோக்களை, இணையதளம் நடத்துபவர்கள் கைப் பற்றும் விதம் சுவாரசியத்திற்கு ஓர் உதாரணம்.
பத்திரிகையாளர் மனோஜாக வரும் அஜய்ராஜ் தான் கதையின் நாயகன். ஆர்வக்கோளாறில் தங்களையே வீடியோ எடுத்துக் கொள்ளும் மக்களிடம் இருந்து, ஏதேனும் ஒரு வழியில் அவ்வீடியோக்களை எடுத்து தனது இணையதளத்தில் வலையேற்றி பெரும்பணம் பார்க்கும் விக்ரம் பாத்திரத்திற்கு பிரபுஜித் அழகாய்ப் பொருந்துகிறார். சென்னைக்குக் கபாலியை வரவேற்கும் விஷ்வாந்த், விக்ரமின் கூட்டாளிகளில் ஒருவராக வந்து கவனம் பெறுகிறார்.
த்ரிப்தியாக நடித்திருக்கும் அக்ரிதி சிங் தான் படத்தின் நாயகி. கல்லூரி மாணவி நிஷாவாக ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் ரியாமிகா. தன்னைப் போல் வேறு யாரேனும் பாதிக்கப்படக்கூடாதென தைரியமாக கம்ப்ளெயின்ட் தர முன் வரும் அக்ரிதி, க்ளைமேக்ஸில் மறுமணம் வேண்டாம் என்பதற்காகச் சொல்லும் காரணம் பிற்போக்குத்தனமாக உள்ளது. இனி தனக்கு வாழ்க்கையே இல்லை என நாயகி தன்னை ஒடுக்கிக் கொள்வதாக இயக்குநர் படத்தை முடித்திருக்க வேண்டாம்.
ஃபோர்ன் (Porn) தளங்கள் அவசியமா என்ற கேள்வியில் தொடங்கும் படம், அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கும் வயரிசத்தினால் (Voyeurism) ஏற்படும் தற்கொலைகள் எனும் புள்ளியில் பயணிக்கிறது. இரண்டிற்குமான வேறுபாட்டினைத் தெளிவுபடுத்தாததோடு, படத்தின் தொடக்கத்தில் எழுப்பப்படும் கேள்விக்கான சர்வே பதிலையும் அவர் சொல்லவில்லை. யாரும் தொடாத ஒரு கருவைத் தொட்டாலும், ஒற்றை நோக்கிலேயே அதை அணுகி வில்லைனை மடக்கும் நாயகன் என்றளவில் படம் முடிந்துவிடுகிறது. நிர்வாணம், உடலரசியல் எனப் பரந்துபட்ட விவாதத்தை முன்னெடுக்காவிட்டாலும், விளையாட்டு வினையாகிவிடும் என்பதை அழுத்தமாகப் பதிந்துள்ளது படம்.