Shadow

சேத்துமான் விமர்சனம்

பெருமாள் முருகனின் ‘வறுகறி’ எனும் சிறுகதையை மிக நேர்த்தியாக சேத்துமான் எனும் படமாக உருமாற்றியுள்ளார் இயக்குநர் தமிழ். பன்னியைக் கொங்கு வட்டாரத்தில் சேத்துமான் என்றழைப்பார்கள். கதை நடக்கும் களமாக மேற்கு கொடைக்கானலைத் தெரிவு செய்துள்ளனர்.

பெயர் போடும் போது ஒரு கதையை ஓவியத்தில் சொல்லி முடித்ததும், டைட்டில் க்ரெடிட் முடிந்த பின் படத்தின் கதைக்குள் செல்கின்றனர். மகனையும் மருமகளையும் இழந்த பூச்சியப்பன் தனது பேரனுடன் ஊரை விட்டு வெளியேறி, பண்ணாடி வெள்ளையனிடம் வேலைக்குச் சேருகிறார். உடல் சூட்டினைத் தணிக்க, பன்னியின் வறுத்த கறியைத் திண்பதில் ஆர்வம் காட்டுபவர் வெள்ளையன். ஆனால், ஊர் உலகமோ, பன்னிக்கறியை உண்பதை மிக ஏளனமாகப் பார்க்கிறது. குறிப்பாக வெள்ளையனின் மனைவியே, ‘பீ திண்ணும் பன்னியைச் சாப்பிடுறது பீ திண்பதற்கு சமம்’ என வெள்ளையனை அநியாயத்திற்கு அசிங்கப்படுத்துகிறார். கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் வெள்ளையன், அதையெல்லாம் துடைத்துப் போட்டுவிட்டு, கூறுக்கு ஆள் சேர்த்து விடுகிறார். குறித்த நாளில் பன்னியும் வெள்ளையனின் தோட்டத்தில் வறுபடுகிறது.

இந்த எளிமையான கதைக்குத் திரைக்கதை அமைத்து, இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலத்தின் அரசியலையும் பின்னணியிலும் வசனத்திலும் நுண்ணியமாகப் படரவிட்டு அசத்தியுள்ளார். மாற்று சினிமாவிற்கு வாயிலைத் திறந்து விடுவதில் மிகப் பெரிய பங்காற்றி விடுகிறது நீலம் நிறுவனம்.

பூச்சியப்பனாக நடித்திருக்கும் மாணிக்கம், பண்ணாடியாக நடித்திருக்கும் பிரசன்னா, வெள்ளையனின் பங்காளியாக நடித்திருக்கும் சுருளி என அனைவரும் அசத்தியுள்ளனர். குறிப்பாக, பிரசன்னா மிகச் சிறந்த குணசித்திர நடிகராக வலம் வரக்கூடிய திறமை வாய்த்தவர் எனத் தீர்மானித்துள்ளார். வாய்தா படத்திலும், அவர் தனது பங்கினை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். உறியடி படத்தில் புழுங்கிப் புழுங்கி மிரட்டும் நடிப்பைச் சுருளி வழங்கியிருப்பார். இப்படத்திலும் அப்படியொரு பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திவிடுகிறார். பன்னி வளர்க்கும் ரங்கனின் உடற்மொழியும் வசனங்களும் படத்திற்கும், நீலத்தின் அரசியலுக்கும் கட்டியம் கூறும்வண்ணம் அழகாக அமைந்துள்ளது.

பரீட்சயமான நடிகர்கள் இல்லாவிட்டாலும், அது படத்தை ரசிக்க எந்த சுணக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தெளிந்த நீரோடையாகப் பயணிக்கும் திரைக்கதையே அதற்கு முதன்மை கதாபாத்திரம். பூச்சியப்பன் தன் பேரனைத் தோளில் சுமந்து பள்ளிக்குச் செல்லும் நீண்ட வழியில் ‘சைல்ட் பிளான்’ எனும் ஸ்கூலுக்கான விளம்பரமும், கதை நடக்கும் காலத்தை உணர்த்த உதவுவது போல் ராம்நாத் கோவிந்தின் பெயர் ஜனாதிபதி தேர்தலுக்குப் பரிசீலிக்கப்படுவதில் இருந்து, பின்னணியில் நாளிதழ் விளம்பரங்களில் பயன்படுத்தியிருக்கும் யுக்தி சிறப்பு.

Sony LIVஇல் வெளியாகியுள்ளது இப்படம்.