Shadow

செக்ஸும், உடல் ஆரோக்கியமும் – டாக்டர் நாராயண ரெட்டி

Sexual-Health

சினிமாவில், நாயகன் நாயகிக்குள் முதலில் மோதல் வரும், பின் காதல் வருமெனக் காட்டித் தவறான கற்பிதத்தை விதைக்கிறார்கள். மோதலுக்குப் பிறகு, ஹீரோ தன் நண்பர்கள் பத்துப் பேருடன் நாயகியைக் கிண்டல் செய்து பாட்டு பாடிக் கலாட்டா செய்வான். நாயகிக்குக் காதல் வந்துவிடும். இதைப் பார்த்து வளரும் சிறுவர்கள், பார்ப்பதை உண்மையென்று எண்ணி, ‘கிண்டல் செய்தால்தான் காதல் வரும் போல’ என்றெண்ணி வளர்ந்ததும் பெண்ணைப் பின் தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்கள். முதல் பார்வையில் காதல் மலர, அதாவது love at first sight என்பது சாத்தியமே இல்லை. முதல் பார்வையில் தோற்றக் கவர்ச்சிக்குத்தான் வாய்ப்புண்டு, அதாவது physical attraction at first sight. பலமுறை பார்த்த பின் காதல் வருமென்பது வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம், அதாவது love at multiple sights.

பெண் ஒரு போகப்பொருள் இல்லை என்ற புரிதலைக் குழந்தைகளுக்குத் தொடக்கம் முதலே தரவேண்டும். பாலினச் சமத்துவத்தை (Gender equality) வீட்டில் இருந்தே தொடங்கவேண்டும். பையனுக்கு ஒரு சலுகையும், பொண்ணுக்கு ஒரு சலுகையும் கொடுத்து வளர்க்கக் கூடாது. சமமாக நடத்தப்படவேண்டும். இன்று குழந்தைகளும் சிறுவர்களும் கூட போகப்பொருளாகப் பார்க்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான தொந்தரவுகளுக்குக் காரணம் வெளிநபர் இல்லை. வீட்டிலுள்ள மாமா, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா போன்ற உறவினர்களாலேயே குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவுகள் நிகழ்கின்றன.

Doctor-Narayana-Reddyஏனெனில், இந்தியச் சமூகத்தில், மகள் வயசுக்கு வந்துவிட்டாலோ, பேரன் பேத்தி எடுத்தவிட்டாலோ, செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாதென சமூகத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதன் பின் அவர்கள் சந்நியாசி ஆகிவிடுவார்களா என்ன? அவர்கள் செக்ஸை அடக்கி வைக்கும் பொழுது என்னாகும்? 1951இல் எடுத்த சென்சஸ் படி, ஆணின் சராசரி ஆயுட்காலம் 40, பெண்ணின் சராசரி ஆயுட்காலம் 38. கடைசியாக வெளிவந்த 2011 சென்சஸ் படி, ஆணின் சராசரி ஆயுட்காலம் 65, பெண்ணின் சராசரி ஆயுட்காலம் 63. நவீன மருத்துவத்தால் மனிதனின் ஆயுட்காலம் அதிகமாகிவிட்டது. ஆனால், செக்ஸ் வாழ்க்கையோ பழைய நம்பிக்கையின் படி பாதியிலேயே நின்றுவிடுகிறது. இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள பாலியல் கல்வி அவசியமாகிறது.

பள்ளியில் மாணவர்களுக்கு நேரடியாகப் பாலியல் கல்வியைக் கொடுத்துவிட முடியாது. முதலில், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தான் பயிற்சியைத் தரவேண்டும். அதன் பின்பே, அவர்கள் மூலம் மாணவர்களுக்குத் தரப்பட வேண்டும். நாம் பல விஷயங்களில் இன்னும் பின் தங்கியுள்ளோம். இந்தியாவைப் பொறுத்தவரை பாலியல் சட்டங்களே காலாவதியான ஒன்றுதான். 1857 இல் போடப்பட்ட சட்டங்களையே இன்னும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ‘இயற்கைக்கு முரணாகச் செயல்படுவது குற்றம்’ எனச் சட்டத்தில் இருக்கு. எது இயற்கை என்பது பற்றிய தெளிவான விளக்கம் சட்டத்தில் கொடுக்கப்படவில்லை. குடும்பக் கட்டுப்பாடு அவசியம் என்கிறது அரசாங்கம். அது இயற்கைக்கு மாறானது இல்லையா? சட்டத்தின்படி பார்த்தால் அரசாங்கம் தான் குற்றவாளி என்றாகிறது.

உலக சுகாதார அமைப்பு (World Health Organisation), ஆரோக்கியமான வாழ்க்கைக்கு செக்ஸ் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என அறிவித்துள்ளது. அடிப்படை தேவைகளில் ஒன்றாக செக்ஸை அறிவித்து, அது அனைத்து மனிதர்களுக்கும் கிடைக்கவேண்டியது அவசியம் என வலியுறுத்துகிறது. ஆண், பெண் பிறப்பு விகிதங்கள் சமமாக இல்லாததாலும், வேலை, சூழல், என இன்னப்பிற காரணங்களாலும் அனைவருக்கும் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை அமைவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், செக்ஸ் டாய்ஸ்-களை ஆணோ, பெண்னோ பயன்படுத்துவது தவறில்லை என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி. ஆனால், எல்லாப் பழக்கமும் ஓர் அளவுக்குள் இருப்பது நல்லது என எச்சரிக்கிறார்.

HELP என்றொரு குறும்படத்தைப் பாண்டியராஜன் இயக்கியுள்ளார். அது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஸ்டீஃபன் ஹாக்கிங் போல, நரம்பியல் இயக்க நோயுள்ள ஒரு மகன் ரொம்ப மூர்க்கமாக நடந்து கொள்ளும்பொழுது, தாயின் கை யதேச்சையாகப் பட்டு அவனது விந்து வெளியேறி விடுகிறது. அதன் பின் அந்த மகன் இயல்பாகிவிடுகிறான். அம்மாவிற்கு என்ன பிரச்சனை என்று புரிந்து விடுகிறது. ஆனால், அவரால் மகனுக்கு உதவ முடியாது என்பதால், வெளிநாட்டில் இருந்து செக்ஸ் டாய் வாங்கி வருகிறார் அந்தப் பையனது அப்பா. கஸ்டம்ஸில் சிக்கிக் கொள்கிறார். இந்தியாவில் செக்ஸ் டாய்ஸ் விற்கக்கூடாது, ஆனால் சொந்த உபயோகத்துக்குக் கொண்டு வரலாம். டாக்டர் நாராயண ரெட்டி தான், ஏர்போர்ட்டிற்குச் சென்று செர்ட்டிஃபிகேட் கொடுத்து அந்தத் தந்தைக்கு உதவியுள்ளார்.

AOFS---CSEPI-Conference

இப்படிப் பேசியே ஆகவேண்டிய ஒரு விஷயத்தைக் கூச்சத்தின் காரணமாகப் பொதுவெளியில், இத்தகைய தலைப்புகள் முன்னெடுக்கப் படவதேயில்லை. செக்ஸ் குறித்த அறியாமை, சாமானியர்களுக்கு மட்டுமில்லை மருத்துவர்களுக்கே உண்டு என்கிறார் நாராயண ரெட்டி. இதையெல்லாம் கலையும் நோக்கில், “ஆரோக்கிய வாழ்விற்கு – செக்ஸ்” என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கத்தை, AOFS (Asia – Oceanic Federation for Sexology)-உம், CESPI (Council of Sex Education and Parenthood International)-உம் இணைந்து சென்னையில், ஆகஸ்ட் 17, 18, 19 ஆகிய தேதிகளில் மூன்று நாள் கருத்தரங்காக நடத்துகின்றனர். 37 வருடங்களாக செக்சாலஜியில் பணி புரியும் டாக்டர் நாராயண ரெட்டி, AOFS-இன் இந்தியக் கிளையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. AOFS இன், 15வது காங்கிரஸின் தலைவரும் அவரே ஆவார்! இந்தக் கருத்தரங்கிற்கு, 17 நாடுகளில் இருந்து 271 பிரதிநிதிகள் கலந்து கொண்டு, பலதரப்பட்ட தலைப்புகளில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து விவாதிக்க உள்ளனர்.