சென்னையின் முன்னணி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான பில்ராத் ஹாஸ்பிடல்ஸ், அதித்ரி என்ற பெயரில் கருத்தரித்தல் மையத்தைத் தொடங்கியுள்ளது. ஜூன் 27, 2018 இல் தொடங்கப்பட்ட இந்தக் கருத்தரித்தல் மையம் குழந்தைப்பேறில் சிக்கலுள்ள தம்பதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அதித்ரியின் விரிவான மருத்துவச் சிகிச்சை , ‘அட்வான்ஸ்டு அசிஸ்ட் ரீப்ரொடக்டிவ் ட்ரீட்மென்ட் (Advanced Assist Reproductive Treatment’-ஐச் சென்னையில் வழங்கவிருக்கிறது. பில்ராத் ஹாஸ்பிடல்ஸின் சி.இ.ஓ.-வான கல்பான ராஜேஷ் அவர்களின் மகள் பெயர் அதித்ரி என்பது குறிப்பிடத்தக்கது. அங்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் தங்கள் மகவுகளாகப் பாவிக்கவே அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதைப் பிரதிபலிக்கும் வகையில், “மை கேர்ள் மை ப்ரைட் (My Girl My Pride)” என்ற தலைப்பில் குழு விவாத நிகழ்ச்சியொன்று சென்னை எழும்பூரிலுள்ள ராடிஸன் ப்ளூ ஹோட்டலில் அதித்ரி சார்பாக நடைபெற்றது.
மகளிர் நல மருத்துவர் V.ரஞ்சினி, வாள் வீச்சு சாம்பியனான பவானி தேவி, திரைப்பட நடிகை ஸ்ரீப்ரியா, ‘குற்றம் 23’ இயக்குநர் அறிவழகன், தொழில்முனைவோர் C.K.குமரவேல் ஆகியோர் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அன்னா ஐசக் எனும் ஊடகவியலாளர் விவாதத்தை நடத்தினார்.
பல துறைகளில் பெண்கள் சாதித்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்பொழுது அதன் விகிதம் மிகவும் குறைவே! பெண்களுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், இவ்விரண்டையும் விரைவில் எட்டுவதற்கான முயற்சியையும் முன்னெடுக்கவேண்டும் என்பதே விவாதத்தின் மையச் சரடாக இருந்தது.
“பொருளாதாரச் சுதந்திரம் மட்டுமே தன்னிறைவாய்ப் பெண்களைத் தங்கள் கால்களில் நிற்க வைக்க உதவும். பெண்களை விடப் பல மடங்கு சிறந்தவர்கள் பெண்கள். ஆண்களிடமோ, பேராசை, மூர்க்கத்தனம், பொறுப்பற்றத்தன்மை மிகுந்திருக்கும். ஃப்ரான்சைஸ் (Franchise) பிசினஸ் மாடலுக்குப் பெண்களே பொருத்தமானவர்கள். அவர்களை நம்பி ஒப்படைத்தால் தொழில் பன்மடங்காகும்” என்றார் க்ரூம் இந்தியா சலூன் அண்ட் ஸ்பாவின் இணை நிறுவனர் C.K.குமரவேல். அவரது மனைவி திருமதி K. வீணா தொடங்கிய நேச்சுரல்ஸ் சலூனிற்கு இந்தியா முழுவதும் 600க்கும் மேற்பட்ட கிளைகள் உடையது குறிப்பிடத்தக்கது. ஆங்கில அகராதியில் இருந்து ‘ஹவுஸ் ஒயிஃப்’ என்ற வார்த்தையை நீக்கும் அளவுக்குப் பெண்கள் வாழ்வில் மாற்றம் வரவேண்டும்பதே குமரவேலின் கனவு.
பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் அவசியம் என்ற கருத்தை வரவேற்ற ஸ்ரீப்ரியா, “ஹவுஸ் ஒயிஃப் ஆக இருப்பது என்றால் ரொம்ப சாதாரண வேலை என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?” எனக் குமரவேலைக் கேள்வியெழுப்பினார். வேலையையும், குடும்பத்தையும் ‘பேலன்ஸ்’ செய்வதிலுள்ள மனநிறைவைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார்.
“ஆண்-பெண் இருவருமே சமம் என்பதைப் பெற்றோர்கள்தான் முதலில் குழந்தைகளுக்குச் சொல்லித் தரவேண்டும். வீட்டில் குழந்தைகள் முன், அம்மாவை அப்பா திட்டினால், அதைப் பார்க்கும் குழந்தைகள் மனதில் அது நெகடிவாகப் பதிந்துவிடும். அவனும் பின்னாளில், தன் மனைவியை அதே போலேவே கீழ்த்தரமாக நடத்துவான். பெண் குழந்தைகள் தாமதமாக வந்தால் கேள்வியெழுப்பும் பெற்றோர்கள், ஆண் குழந்தைகளையும் கேள்வி கேட்கவேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் ஏதோ ஒரு பெண் பாதிக்கப்பட இந்த ஆண் காரணமாக இருக்கலாம்” என்றார் இயக்குநர் அறிவழகன்.
வாள்வீச்சு (Fencing) வீரங்கனையான பவானி தேவி, 2014இல் இத்தாலியில் நடந்த டுஸ்கானி போட்டியிலும், 2017 இல் ஐஸ்லாந்தில் நடைபெற்ற சாட்டிலைட் உலககோப்பைப் போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமையைச் சேர்த்தவர். “ஸ்போர்ட்ஸ் ஒருவரின் உடல்பலத்தையும் மட்டுமின்றி மனபலத்தையும் வளர்க்க உதவுகிறது. சமூகவெளியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடுமையான சட்டங்கள் மூலம் குறைக்கப்பட்டால், பெண்களை அதிகளவில் விளையாட்டுத் துறை உட்பட பல துறைகளிலும் நம்பிக்கயுடன் களமிறங்கப் பெற்றோர்கள் ஒத்துழைப்பார்கள்” என்றார். ஆறாம் வகுப்பில் வாள்வீச்சைக் கற்றுக் கொள்ள தொடங்கிய பவானி தேவியுடன், பத்தாம் வகுப்பு வரை 20 பேர் பயிற்சி எடுத்துள்ளார்கள். பத்தாம் வகுப்பில், அவர்களில் ஐவர் மட்டுமே பயிற்சியைத் தொடர்ந்துள்ளனர். உயர்நிலை வகுப்பில் அது இரண்டாகக் குறைந்து, கல்லூரியின் பொழுது இவர் மட்டுமே வாள்வீச்சில் தொடர்ந்து இருந்துள்ளார்.
விவாதத்தைத் தொடக்கி வைக்கும் முன், “இன்னும் எத்தனை வருடங்களுக்குப் பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டு மட்டுமே இருக்கப் போகிறோம்? நாம் நமது தலைமுறையிலேயே அதைச் சாத்தியப்படுத்திக் காட்ட உழைக்கவேண்டும். அதித்ரி அதற்கான முழு ஒத்துழைப்பை நல்கும்” என்றார் டாக்டர் கல்பனா ராஜேஷ்.
சித் ஸ்ரீராமின் குரலில், பாரதியாரின் பாடல் வரிகளைக் கொண்டு, பில்ராத் ப்ரோமோ வீடியோ செய்துள்ளனர். அபிராமியும் சந்தோஷ் பிரதாபும் வசனங்களின்றியே மிக நன்றாகத் தன் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளனர்.