Shadow

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

Odu-Raja-Odu-movie-review

எழுத்தின் மேலுள்ள ஆர்வத்தில் வேலையை விட்டு எழுத்தாளர் ஆகிவிடுகிறான் மனோகர். நர்ஸாக வேலை புரியும் அவனது மனைவி மீரா தான் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள். மனோகரிடம் பணம் கொடுத்து, செட்-டாப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்கிறாள் மீரா. தனது நண்பன் பீட்டருடன் செட்-டாப் பாக்ஸ் வாங்கக் கடைக்குப் போகும் மனோகர், ஒன்றிலிருந்து மற்றொன்றெனப் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான். அந்தச் சிக்கல்களில் இருந்து மனோகர் மீண்டு, வீட்டுக்குச் செட்-டாப் பாக்ஸ் வாங்கிக் கொண்டு போனானா என்பதுதான் படத்தின் கதை.

ஆனாலும், கதையை இப்படி நேர்க்கோட்டிற்குள் அடைத்து விட முடியாது. மூன்று கிளைக் கதைகள், மையக் கதையுடன் நான்-லீனியராக ஒட்டி உறவாடுகிறது. ஒன்று, வேஷ்டி சட்டை கேங் சகோதர்களான காளிமுத்து மற்றும் செல்லமுத்துவின் தந்தையான பெரியதேவர், தன் மகன்கள் இருவரும் ரெளடியிசத்தை விட்டுவிடவேண்டுமெனச் சத்தியம் வாங்கிக் கொள்கிறார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லையென ரெளடியிசத்தை காளிமுத்து விட்டுவிட, செல்லமுத்துவோ பேண்ட் சட்டை கேங் தலைவன் வீரபத்திரனைக் கொன்றே தீருவேன் எனக் கொதிக்கிறான். இதனால் சகோதரர்களுக்குள் ஏற்படும் மனஸ்தாபம் என்னாகிறது?

இரண்டு, செய்யாத குற்றத்துக்காகச் சிறை சென்றுவிட்டு வரும் நகுல் தன் நண்பன் இம்ரானுடன் மேரியைக் காணச் செல்கிறான். அழகான மேரி, ஒருபுறம் நகுலுடனும் நெருக்கமாக இருக்கிறார், இம்ரானுடனும் நெருக்கமாக இருக்கிறார். அந்த முக்கோண உறவு என்னவாகிறது, அவர்கள் மூவரும் இணைந்து போடும் கடத்தல் திட்டம் என்னவாகிறது என்பது ஒரு கதை.

கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருக்கும் ‘அறந்த வாலு’ மலர், ‘ரோட் சைட்’ ரோமியோ சத்யா ஆகிய இரண்டு மகிழ்ச்சியான சிறுவர்கள், பேண்ட் சட்டை கேங்கின் பணத்தை நாயகன் மனோகரிடமிருந்து திருடி விடுகின்றனர். சிறுவர்களது கோலிக்குண்டும், அவர்கள் திருடிய பணமும்தான் மனோகரைச் சொல்லொண்ணாச் சிக்கல்களுக்குக் கொண்டு செல்கிறது. இப்படியாக எல்லாக் கதைகளும் ஒரு புள்ளியில் இணைந்து, ரசனையானதொரு பிளாக்-ஹ்யூமர் படத்திற்கு உத்திரவாதமளிக்கிறது.

இத்தனை கதைகளைக் குழப்பமின்றி நேர்த்தியாகக் கோர்த்து, அத்தனை நடிகர்களையும் மிக அற்புதமாக உபயோகித்திருப்பது இரட்டை இயக்குநர்களான ஜதின் ஷங்கர் ராஜ் மற்றும் நிஷாந்த் ரவீந்திரனின் திறமைக்குச் சான்று என்றே சொல்லவேண்டும். திரைக்கதை எழுதியது இயக்குநர்களில் ஒருவரான நிஷாந்த் ரவீந்திரன் ஆகும்.

படத்தில் ரசிக்க ஏராளமான காட்சிகள் உள்ளன. மேரி, தன்னுடன் நெருக்கமாக இருப்பது போலவே இம்ரானுடன் நெருக்கமாக இருப்பது நகுலுக்குத் தெரியவருகிறது. அதனால், நகுலும் இம்ரானும் சண்டையிடுகின்றனர். அந்தச் சண்டையை நிறுத்த மேரி சொல்லும் சமாதானத்திற்குத் திரையரங்கத்தில் பலமான சிரிப்பொலி. படத்தில் இன்னொரு ஹைலைட்டான காதாபாத்திரத்தில் இயக்குநர் ஜோயல் நிக்லி நடித்துள்ளார். சுந்தர் எனும் அந்தக் கதாபாத்திரம் மனோகர்க்குப் பக்கத்து வீட்டுக்காரர். சுந்தர்க்கு மீரா மீது மையல். மனோகர், சரியான நேரத்தில் செட்-டாப் பாக்ஸ் வாங்கி வராததைத் தனக்குச் சாதகமாக அவர் பயன்படுத்திக்கப் பார்க்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல், அவரைப் பார்த்தாலே பார்வையாளர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். மீராவாக லக்ஷ்மி பிரியா நடித்துள்ளார்.

அப்பா பேச்சை மதிக்கும் காளிமுத்தாக நாசரும்; அப்பா, அண்ணன் பேச்சைக் கேட்கவிரும்பாத செல்லமுத்துவாக ரவீந்திர விஜயும் நடித்துள்ளார். அத்தனைக் கதாபாத்திரங்களும், படம் முடிந்த பிறகும் நினைவில் இருப்பதுதான் படத்தின் விசேஷம். ஏனோதானோ என்றில்லாமல் அத்தனைப் பேருமே நிறைவாக நடித்துள்ளது தான் அதற்குக் காரணம். அதனால் தான், முதன்முறையாக, மனோகராக நடித்திருக்கும் ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரம் தனித்துத் தெரியவில்லை. நகுலாக ஆனந்த் சாமியும், இம்ரானாக K.S.அபிஷேக்கும் அசத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் இருவரையுமே ஒரே நேரத்தில் ஏய்க்கும் மேரியாக நடித்துள்ளார் ஆஷிகா. அவரது அப்பாவியான முகமும், குழைவான நடிப்பும் மிகவும் கவர்கிறது. நாயகனுக்கு எல்லாச் சிக்கலும் இழுத்துவிடும் பீட்டராக வெங்கடேஷ் ஹரிநாதன் நடித்துள்ளார். மலராக நடித்துள்ள சுட்டிச் சிறுமி ஹரினி தான் படத்தைச் சுபமாக முடித்து வைக்கிறார். படத்தில் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸாக கால பைரவர் என்ற கதாபாத்திரத்தில் ஒரு சீனியர் நடிகர் கேமியோ செய்துள்ளார்.

காமிக்கலாகக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் யுக்தி ரசிக்கும்படி உள்ளது. சிக்கலான இந்த நான்-லீனியர் திரைக்கதையை, குழப்பமில்லாத சுவாரசியமான படமாக எடுத்துள்ளது கண்டிப்பாக தலைமுடியால் மலையை இழுக்கும் செயலே!