Shadow

சிகை விமர்சனம்

Sigai-movie-review

ZEE5 எனும் செயலியில் படம் நேரடியாக வெளியாகிறது. திரையரங்கு வெளியீட்டுக்கு வெளியே மாற்று வழிகளை நோக்கி தமிழ் சினிமா நகர்வது ஆரோக்கியமான விஷயம். நெட்ஃப்ளிக்ஸில் பிரகாஷ்ராஜ் நடித்த ‘சில சமயங்களில்’ படம் வெளியானதும் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று.

பிரசாத் ஒரு பிம்ப் (Pimp). சந்தோஷ் எனும் இளைஞனுக்கு நிம்மி எனும் பெண்ணை அனுப்பி வைக்கிறான். போன நிம்மி விடிந்த பிறகும் திரும்பி வராததோடு, அவளைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என பதற்றம் ஆகிறான் பிரசாத். சந்தோஷின் வீட்டில் சந்தோஷ் இறந்து கிடக்க, நிம்மிக்கு என்ன ஆனது என விறுவிறுப்பாகப் பயணிக்கிறது படம்.

சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக, விறுவிறுப்பாகவும் அழுத்தமாகவும் பயணிக்கிறது கதை. இரண்டாம் பாதியின் கனமான கதையோ, முற்றிலும் வேறு ஜானருக்குப் படத்தை அழைத்துச் செல்கிறது. ஆனால் முதற்பாதி போல் கோர்வையாக இல்லாமல், இன்ன உணர்வினைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியே ஆகவேண்டுமென்ற நிர்பந்தத்தை இயக்குநர் வகுத்துக் கொண்டுள்ளார் போலும். முதல் பாதியில் எந்த உறுத்தலுமின்றி இயல்பாகப் பயணித்த கதை, இரண்டாம் பாதியிலோ இயல்பை இழந்து கோர்வையற்ற காட்சிகளால் பார்வையாளனின் பரிதாபத்தைக் கோருகிறது. 

மதிவாணனாக கதிர் நடித்துள்ளார். தானொரு திருநங்கை என்பதை வெளிக்காட்டிக்காமல் இருக்கும் மதி, திடீரென தன் அடையாளத்தை ஒரு விபச்சாரியிடம் தேவையில்லாமல் பகிர்கிறான். அதாவது முதற்பாதி போலில்லாமல், இரண்டாம் பாதி வசனங்களால் நகர்கிறது. நான் இதைப் பண்ணேன், அப்படி நினைச்சேன், எப்படியோ ஆகிவிட்டது எனக் கதையை வசனங்களால் கடத்துகிறார் இயக்குநர். நண்பனின் பிரிவுத் துயரில் வாடும் மதி, இருளில் அல்லாமல் மிணுக்கும் மின் விளக்கின் கீழ், ஜன்னலின் மேலுள்ள விதானத்தில் அமர்ந்து, பிரசாதின் பார்வையில் படுமாறு விசும்புகிறான். அதாவது அந்தக் காட்சியில் பிம்ப்பான பிரசாதும், மதியும் சந்திக்கவேண்டும் என்கிறது கதை. திரைக்கதையும் ரொம்ப மெனக்கெடாமல், சரி போய் சந்தித்துக் கொள் என்கிறது. படத்தின் மேக்கிங் கவரும்படியாக உள்ளது. அதற்கு, ரான் யோஹானின் இசையும், நவீன்குமாரின் ஒளிப்பதிவும்  உதவியுள்ளன. 

நிம்மியாக அறிமுகமாகியுள்ள மீரா நாயர் நன்றாக நடித்துள்ளார். டேக்ஸி ட்ரைவர் மயில்சாமியும், சேட்டாவாக நடித்திருக்கும் ராஜேஷ் ஷர்மாவும்  முதற்பாதியை விறுவிறுப்புடன் கொஞ்சம் கலகலப்பிற்கும் உதவியுள்ளனர். போஸ்ட் க்ளைமேக்ஸ் காட்சியில் சேட்டா தன் தொழிலில் கொண்டு வரும் மாற்றம் ரசிக்க வைக்கிறது.

தனது அடையாளம் கசிந்து விடக்கூடாது என தன்னை மறைத்துக் கொள்ளும் கிரிமினல் மூளையுடைய மதி, பிரசாதிடம் உண்மை விளம்பியாக அனைத்தையும் சொல்கிறான். திருநங்கையாக அசத்தலான நடிப்பைக் கதிர் வெளிபடுத்தியிருந்தாலும், இயக்குநர் அந்தக் கதாபாத்திரத்தை ஃபீல் செய்த அளவு பார்வையாளர்களும் செய்வார்களா என்பது கேள்விக்குறியே! திருநங்கைகளின் நியாயத்தை அழுத்தமாகப் பதிய அவசர கோல திரைக்கதை தவறி விடுகிறது.

பிரசாத் கதாபாத்திரத்தில் ராஜ்பரத் நடித்துள்ளார். அத்தகைய தொழில் செய்யும் குற்றவுணர்வை அழகாகச் சுமந்துள்ளார். திருநங்கையாக ஒரு படத்தில் நடிக்கவேண்டுமென நடிகர் திலகம் கூட ஆசைப்பட்டுள்ளார். ஆனால், எவரும் ஏற்க விரும்பாத பாத்திரம் ‘பிம்ப்’. கூட்டிக் கொடுப்பது என்பது மிக இழிவான வேலை என்பது அனைவரது நெஞ்சிலும் ஊறிய ஒன்று. கொடிய வில்லனாக நடிக்கக் கூடத் தயாராக இருப்பார்கள். ஆனால், இத்தகைய கதாபாத்திரத்தை ஏற்கத் தயங்குவார்கள். நாயகனாக வளர்ந்து வரும் ராஜ்பரத் ஏற்றுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது. அந்தப் பாத்திரத்திற்கு ஒரு நாயக பாவத்தை ஊட்டி, ஏற்றுக் கொள்ளக் கூடியதாகச் சித்தரித்துள்ளனர். கதிர் முன்னிலைப்படுத்தபட்டாலும், படத்தின் நாயகன் இவர் தான். காரணம், சக மனிதர்கள் மேல் இருக்கும் காதல் ராஜ்பரத்தின் பாத்திரத்தை முழுமையாக்குகிறது. குறிப்பாக விபச்சாரிகளை இவர் பார்க்கும் விதமும், கதிர் பார்க்கும் விதமும் தான் படத்தின் இரு பாதிக்கும், இரு பாத்திரங்களுக்கும் உள்ள முரண். சஸ்பென்ஸ் த்ரில்லராகத் தொடங்கி, சோஷியல் மெஸ்சேஜ் சொல்லும் அவாவில் சிகை கலைந்துவிடுகிறது.

தில்லுமுல்லு படத்தில் ஒரு வசனம் வரும். மீசை வச்சா சந்திரன், மீசை இல்லைன்னா இந்திரன் என்று ரஜினி தேங்காய் சீனிவாசனை நம்ப வைப்பார். அது போல், சிகையை வளர்த்துக் கொண்டால் பெண், சிகையை மழித்து விட்டிருந்தால் ஆண் என பாலியல் அடையாளத்தை (Gender identity) மிக எளிமையாக்கியுள்ளார் ஜகதீசன் பாபு. ஒரு திருநங்கையின் அகப்போராட்டம் எப்பொழுது மறையும் என்பதற்கான அழகான தருணம் படத்திலுண்டு. சமூகத்தில் தொடர்ந்து பேசப்பட வேண்டிய ஒரு கருவைப் படத்தின் மைய நோக்கமாக எடுத்ததற்காக இயக்குநருக்குப் பாராட்டுகள்.