

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” ஆகும். வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், “லலித் சார் என்னிடம் விசாரணை மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்றார். அவர் நினைத்திருந்தால் அவர் மகனை எப்படி வேண்டுமானாலும் ஒரு படத்தில் நடிக்க வைக்கலாம். ஆனால், அவர், ‘வெற்றிமாறன் படம் மாதிரி வேண்டும்’ என்றார். ஒரு ஒன்லைன் இருக்கிறது என்று உண்மைச் சம்பவமாகத் தான் இந்தக் கதை பற்றிச் சொன்னேன். இந்தக்கதையை நாம் செய்வோம் என்றார். அதன் பிறகு சுரேஷ் சார் வந்தார். வெற்றிமாறன் உதவியாளர் என்றால் ஓகே என்று லலித் சார் சொன்னார். நாம் எழுதிய கதையை நாமே பார்த்து அழ வைப்பது மிகப்பெரிய விசயம், அதை சுரேஷ் சார் செய்துள்ளார். ‘நாம் போய் கதை சொன்னால் கதை கேட்க ஒருத்தர் இருக்கிறார்’ என விக்ரம் பிரபு சாரிடம் போனேன். அவரும் கதை கேட்டுச் செய்கிறேன் என்றார். இந்தக்கதை உண்மைச் சம்பவம். இந்தக் கதை சம்பந்தப்பட்ட உண்மையானவர்களைப் பார்த்த ஒரே ஆள் நான் தான், ஆனால் அவர்கள் முகம் மறைந்து இப்போது அக்ஷய், அனிஷ்மா முகம் தான் ஞாபகத்தில் வருகிறது.
என்னை வடிவமைத்தவர் வெற்றிமாறன் சார் தான். விசாரணை ஷூட்டிங்கில், ‘ஏதாவது கதை வைத்திருக்கிறாயா?’ என்றார். நான் டபுள் ஹீரோ கதை சொன்னேன். ‘உன் பலமே போலீஸ் தான். அதில் உனக்குத் தெரிந்ததை வைத்துக் கதை எழுது’ என்றார். அப்படி உருவானது தான் டாணாக்காரன். இப்போது சிறை. நான் செய்திருந்தால் கூட இப்படி எடுத்திருக்க மாட்டேன். நான் வெற்றி சார் மாதிரி லாஜிக் பார்ப்பேன் ஆனால் சுரேஷ் மேஜிக்கை செய்து அசத்திவிட்டார். சுரேஷ் சார். என்னை விடச் சிறப்பாகச் செய்து ஜெயித்தது எனக்கு சந்தோசம்” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன், “இம்மேடை எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இந்த வருடத்தில் என் உதவியாளராகள் படம் தந்து வருகிறார்கள். சுரேஷ் மாதிரி இயல்பான மிக நிதானமான ஆளைப் பார்க்க முடியாது. நான் செய்வது தவறாக இருந்தாலும், அதை சொல்லும் விதத்தில் அவர் நேர்மை இருக்கும். மனிதர்களைக் கையாளும் திறமை அவரிடம் உண்டு. அவருக்கு லலித் சார் கார் பரிசு தருகிறார். முதல் படம் எடுக்கும் போது இருக்கும் அழுத்தம் எல்லாத்தையும் விட்டுவிட்டு, மிக இயல்பாக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்தப்படத்தில் போலீஸ் ஸ்டேஷன் சீன் உள்ளது. ‘அதைச் சரியாக எடுத்தால் படம் மிகப்பெரிய படமாக வரும்’ என்றேன். அதைத்தான் ரஞ்சித் பாராட்டினார். ஒரு விசயத்தைப் பிரச்சனையை அணுகுவதில், தீர்ப்பதில், அவருக்குத் தனித்திறமை உள்ளது. ஆடுகளம் முடித்தவுடன் வந்து சேர்ந்தவர், என்னுடனே இருந்திருக்கிறார். சிறை படம் பார்த்துவிட்டேன். என்னுடன் இருந்தவர்கள் படம் செய்தால், ‘என்ன தப்பு இருக்கிறது?’ என்று தான் முதலில் பார்ப்பேன். ஆனால் படம் பார்த்த எல்லோரும் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டினார்கள். படம் எல்லோருக்கும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பெரிய மகிழ்ச்சி தருகிறது. தமிழுக்கு அவர் வாழ்க்கையில் போலீஸ் நடைமுறை சார்ந்து நிறைய அனுபவங்கள் இருப்பதால் அது மிகப்பெரிய தாக்கம் கொடுக்கிறது. படத்தில் எடிட் மிக நன்றாக இருந்தது. படத்திற்கு மிக முக்கிய பலமாக மியூசிக் இருந்தது. முதல் ஐந்து நிமிடம் தான் விக்ரம் பிரபு தெரிகிறார். அதன் பிறகு கதாப்பாத்திரம் தான் தெரிகிறது. எல்லாக் கதாபாத்திரங்களும் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளனர். எல்லாம் ஒன்றாக இணைந்து மிக அழகான படைப்பாக வந்து, நமக்குள் அழுத்தமான கேள்வியைக் கேட்கிறது. அனிஷ்மா சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கிறது. அக்ஷய் அந்தக் கதாபாத்திரத்திற்குள் காணாமல் போயிருக்கிறார். அவர் இயல்பாக நடித்துள்ளார். இத்தனை பேரின் உழைப்பும் படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது. சுரேஷ், எடிட்டரின் உதவி பெரிய பலமாக இருப்பதாகச் சொன்னார், பிலோமின் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். இவ்வளவு நாட்களுள் படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல, அதை சுரேஷ் சாதித்துள்ளார். இப்படம் பார்த்த அத்தனை பேருக்கும் மகிழ்ச்சியைத் தருவது சந்தோசம். இந்த வாய்ப்பை சுரேஷுக்குத் தந்ததற்கு நன்றி. படம் வெளியாகும் முன் கார் தருவதும் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

