32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“உங்க படத்தில் நடிக்கணும்” – சிவகார்த்திகேயன் டூ ரவி மோகன்

Dinesh R சேலம் Published: 01/09/2025 4 நிமிட வாசிப்பு Updated: 04/09/2025 சினிமா
எழுத்து அளவு:

நடிகர் ரவி மோகன் தனது புதிய அத்தியாயமான “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு நிறுவனத்தைப் பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன், “தயாரிப்பு நிறுவனம் என்பது சாதாரண விஷயம் அல்ல. நம்முடைய கனவைத் திரையில் கொண்டு வரக்கூடிய மிகவும் பொறுப்பு மிகுந்த விஷயம். ரவிமோகன் சாரை எனக்கு அவ்வளவாகத் தெரியாது. நான் சார் என்று தான் கூப்பிடுவேன். சினிமா துறையில் அவர் என்னைவிட சீனியர்.

பராசக்தி படத்தின் போது தான் அவருடன் நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நல்ல மனிதர். நாம் அவருடைய படங்களைப் பார்த்து அவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒரு எண்ணம் இருக்கும். அவர் அப்படியேதான் இருக்கிறார். இந்த விழாவிற்கு என்னை அழைத்தது மட்டுமில்லாமல், நேற்று எனக்கு ஃபோன் செய்து, ‘நாளைக்கு நிச்சயம் வந்துருங்க ப்ரோ’ என்று நினைவுப்படுத்தினார்.

இங்கு வந்து பார்த்த பிறகு அவருக்குள் இருக்கும் அத்தனை கனவுகளும் ஒரு நடிகராகத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்று என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து இருக்கிறார். ‘ப்ரோ கோட்’ படத்தின் ப்ரோ மூவி திருட்டுத்தனமாக நான் பத்து நாட்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இயக்குநர் கார்த்திக் யோகி எனக்குக் காண்பித்தார். எனக்கு மிகவும் பிடித்த ஜானர். அப்போதே, முதல் பாதியைக் காண்பித்து விட்டீர்கள், அடுத்த பாதியை எப்போது காட்டப் போகிறீர்கள் என்று கேட்டேன். அந்த அளவிற்கு மிகவும் நகைச்சுவையாக இருந்தது. ப்ரோ கோட் என்ற பெயரே சூப்பர். பெயரிலேயே அனைத்தும் வந்துவிட்டது. ரவி மோகன் ஸ்டுடியோவில் நடிகராக நீங்கள் பணியாற்றி இருக்கும் ‘ப்ரோ கோட்’ படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.

அடுத்து, யோகி பாபு சாருக்கு வாழ்த்துகள். அவருடைய நகைச்சுவைக்கு அவர் எப்போதும் எல்லை வகுத்துக் கொண்டதே கிடையாது. ஆர்டினரி மேன் உடைய வாழ்க்கை ஒரு எக்ஸ்ட்ரா ஆர்டினரி பயணமாக இருக்கும் என்பதை கூறுவது தான் இந்தப் படம். அதுக்குப் பொருத்தமானவர் யோகி பாபு தான். ஆனால் அவரிடம் கேட்டால், ‘குரு நான் காமெடி நடிகன்’ என்பார். ஆனால், அவருக்குள் ஒரு ஹீரோ இருக்கிறார் என்பதைப் படத்தைப் பார்த்தால் தெரியும்.

ஒரு நடிகர் இயக்குநராவது சாதாரண விஷயம் அல்ல. சிறு வயது முதலே சினிமாவில் பயணித்ததால் அந்த நம்பிக்கை அவருக்கு வந்திருக்கிறது. எல்லோருக்கும் இயக்குனராக வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால், எல்லோராலும் ஒரு படத்தை இயக்கி விட முடியாது. அதேபோல், எல்லா நடிகர்களுக்கும் இயக்குநராகும் தகுதி வந்து விடாது. ஆனால், ரவி மோகனுக்கு இருக்கிறது. அடுத்து கார்த்தியும் படம் இயக்குவார் என்று நம்புகிறேன். அவருக்குள்ளும் இயக்குநர் இருக்கிறார். அதேபோல், மணிகண்டனும் விரைவில் இயக்குநராகி விடுவார் என்று நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

இப்படத்தின் ப்ரோமோ பார்க்கும்போது நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிகிறது. ரவி மோகன் இயக்கும் ஆர்டினரி மேன் படமும் வெற்றியடைய வாழ்த்துகள்.

அடுத்து காக்கி ஸ்குவாட். இப்படத்தின் டீசர் பார்த்தேன். நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. கண்ணா ரவியுடைய மண்டேலா, குருதி ஆட்டம், இப்போது கூலி வரைக்கும் அவருடைய நடிப்பைப் பார்த்து வருகிறோம். அதேபோல் இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்து இருக்கிறார்.

இப்படத்தின் இயக்குநர் சக்தியையும் எனக்குத் தெரியும். இதற்கு முன்பு மூன்று படம் இயக்கி இருக்கிறார். எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசர் ஆகவும் இருக்கிறார். எப்படி இரண்டு வேலைகளையும் செய்கிறார் என்று தெரியவில்லை.

இப்போது ரவி மோகன் ஸ்டுடியோ என்று இன்னொரு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டது. தைரியமாக ஒரு கதையை நாம் தேர்வு செய்யலாம். நானும் அது போல ஒரு சில படங்களை அளித்துக் கொண்டிருக்கிறேன். இதுபோல இன்னும் ஒரு 15 தயாரிப்பு நிறுவனங்கள் வந்துவிட்டால், நிறைய நல்ல விஷயங்களை வெளிக்கொண்டு வர முடியும். எங்கள் மீது படும் வெளிச்சம் அதன் மீதும் பட்டால் இதுவரை மக்கள் எங்களுக்குக் கொடுத்த இடத்தை நாங்கள் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக இருக்கும். இந்த மூன்று படங்களும் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மூன்று படங்களின் வெற்றி விழாவிற்கும் அழையுங்கள். கண்டிப்பாக வந்து கலந்து கொள்வேன்.

நான் கல்லூரியில் படிக்கும்போது சந்தோஷ் சுப்பிரமணியம் படம் வந்தது, ஜெனிலியாவை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஜெனிலியா மற்றும் ரவி மோகனின் நடிப்பைப் பார்த்ததும் கல்லூரி நாட்கள் நினைவிற்கு வந்தது. இருவரும் மீண்டும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்.

ரவி மோகன் தயாரிப்பில் அல்லது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன். தயாரிப்பில் அவரை விட நான் சீனியர். ஆகையால் ரவி மோகன் சார் உங்களுக்கு எப்போது சந்தேகம் வந்தாலும் என்னிடம் தாராளமாகக் கலந்து கொள்ளலாம்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.