“இது நிச்சயமாக டப்பிங் படம் கிடையாது. முழுக்க முழுக்கத் தமிழிலும் தனியாக எடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜாய். இது நேரடி தமிழ்ப்படம் தான். இந்தப் படத்தில் வாய்ப்புக் கிடைக்க அன்சன் பால் தான் காரணம். ரெமோ படத்தில் நடிக்கிறப்பத்தான் அவர் பழக்கம். ஒருநாள், ‘துல்கர ஹீரோவா ஒரு படம் நடிக்கிறார்; பிஜாய் இயக்கிறார்’ எனச் சொல்லிக் கூப்பிட்டார். நான் இதுவரை 40 படத்திலும் ஒரே மாதிரி தான் நடிச்சிருக்கேன். ஆனா, ஒரே படத்திலேயே நாலு டிஃபரன்ட் கெட்டப்ல செமயா நடிச்சிருக்கார் துல்கர். தன்ஷிகாவும் செமயா நடிச்சிருக்காங்க” என்றார் சதீஷ்.
“ரெமோ படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்துள்ள ஒரு நல்ல வாய்ப்பு. சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு ஆடிஷன் போய், இந்தப் படத்துக்குள் வந்தேன். இன்று வரை இந்தப் படத்தோடு மிக நெருக்கமாக இருக்கிறேன். துல்கர், பிஜாய் உடன் அடுத்தடுத்த படங்களிலும் வேலை செய்ய விரும்புகிறேன்” என்றார் நடிகர் அன்சன் பால்.
“இந்தப் படத்தில் நான்கு கதைகளில், ‘வேர்ல்ட் ஆஃப் சிவா’ என்ற பகுதியில் ருக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ருக்கு மாதிரியே இந்தப் படத்தில் வரும் எல்லா பெண் கதாபாத்திரங்களுமே வலிமையானவை. மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது. நானும் ஒரு ரசிகையாக இந்தப் படத்துக்காகப் காத்திருகிறேன்” என்றார் நாயகி ஸ்ருதி ஹரிஹரன்.
“நீண்ட நாட்கள் கழித்து இரு மொழிகளில் தயாரான இந்த சோலோ என்ற பைலிங்குவல் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. புதிய முகம் படத்தைப் பார்த்து நான் மிரண்டு போயிருக்கிறேன். அந்தப் படத்தை இயக்கிய சுரேஷ் சந்திர மேனன் இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்குப் பெருமை. வேற்றுமையில் ஒற்றுமை எனச் சொல்லப்படுவது போல், நான்கு நாயகிகள் உட்பட பல மொழி நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். சோலோ நான்கு கதைகளை உள்ளடக்கிய ஒரு ஆன்தாலஜி திரைப்படம். கதை சொல்லலில் அடுத்த கட்டத்துக்கு நகரும் ஒரு முயற்சி. தமிழ், மலையாளம் ரசிகர்கள் சிறந்த, புது முயற்சிகளை ஆதரிக்கிறார்கள் என்பதில் பெருமைப்படுகிறேன். இந்த படத்தை பற்றிய உங்களின் எல்லா விமர்சனங்களையும் பாராட்டுகளையும் வரவேற்கிறோம்” என்றார் இயக்குநர் பிஜாய் நம்பியார்.