Search

லாபம் படத்தின் கதையென்ன? – எஸ்.பி.ஜனநாதன் | விஜய் சேதுபதி

விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7c ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் ஒன்பதாம் தேதியன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக குமார், பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட திரைப்பட இயக்குநர் சங்கர் நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், இயக்குநர் ஜனநாதனை நினைவுகூர்ந்து பேசினார் விஜய் சேதுபதி. “ஜனநாதன் சார், ஒரு திரைப்படத்தை பொழுதுபோக்கு என்று சொல்வதை ஒப்புக் கொள்ள மாட்டார். திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்ற எல்லையும் கடந்து, பார்வையாளர்களை ஏதேனும் ஒரு விஷயத்தில் சிந்திக்கத் தூண்டுகிறது. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை திரைப்படத்தைப் பார்க்கும் பலரும் பல தருணங்களில் இந்த காட்சி என்னை மாற்றியது; இந்தக் காட்சி என்னை யோசிக்க தூண்டியது; இந்தக் காட்சி என்னை மனிதனாக்கியது எனச் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அது எந்த மொழிப் படமாக இருந்தாலும் பரவாயில்லை. திரைப்படம் ஏதோ ஒரு வகையில் நம்மில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. உலகம் முழுவதும் மனிதனின் உணர்வுகள், ஒரே வகையான தாக்கத்தை ஏற்படுத்தி நம் மனதைத் தொடுகிறது. அதனால் திரைப்படம் சாதாரண பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது அதையும் கடந்து ஏதேனும் ஒரு பாதிப்பை மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிறது. மக்கள் சிந்திக்க வேண்டியவற்றை பிரதானமாக எடுத்துச் சொல்வது கலை வடிவங்கள்தான். ஒரு நகைச்சுவைக் காட்சி கூட ரசிகர்களை யோசிக்க வைக்கும். அதனால் கலையை சாதாரண பொழுது போக்கு அம்சம் என்ற கோணத்தில் மட்டும் அணுகாதீர்கள்.

கலை என்னைச் சிந்திக்க வைத்தது. அதனால் இத்துறையில் அடி எடுத்து வைத்தேன். இதுதான் என்னுடைய வாரிசுகளுக்கும் கற்றுக் கொடுக்கிறேன். அதனால் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று மட்டும் விமர்சிக்காதீர்கள். அதிலிருக்கும் எந்த சிந்தனை சிறந்தது, எது பலவீனமாக இருக்கிறது என்பதை உணர்ந்து, திறனாய்வு செய்ய பழகிக் கொள்ளுங்கள். ஒரு விஷயத்தைக் குறை சொல்வதன் மூலமாக நம்மை நாமே புத்திசாலிகள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோமோ என எண்ணத் தோன்றுகிறது. இங்கு ஒருவரை குறை சொன்னால் நான் புத்திசாலி ஆகி விடுகிறேன். கலை மனிதனைச் சிந்திக்க வைக்கிறது. அதனால் தான் பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு அது இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.

மேலும் இந்தப் படத்தைப் பற்றி நான் சொல்வதை விட, மறைந்த இயக்குநரும் என்னுடைய தலைவருமான இயக்குநர் ஜனநாதன் பல்வேறு பேட்டிகளில் சொன்னதை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.

‘சேத்துல கால் வச்சாதான் சோத்துல கை வைக்க முடியும் என விவசாய பத்திச் சொல்லி சுருக்கிட்டாங்க. நான் விவசாயத்தை எப்படிப் பார்க்கிறேன்னா, பிரிட்டிஷ்காரன் இந்தியாவுக்கு வந்தததே இந்தக் கிராமப் பகுதியில் நடக்கிற விவசாயத்தைப் பார்த்துதான். தங்கம் மாதிரி பொருளாய் இருந்தா, அவன் எப்பவோ எடுத்துட்டுப் போய் இருக்கலாம். ஆனா இந்த மண்ணுல முன்னூறு, நானூறு வருஷமா பருத்தியை எடுத்துக்கிட்டே இருக்காங்க. கரும்பை எடுத்துகிட்டே இருக்காங்க. இதுக்கு உலக அளவுல மார்க்கெட் இருக்கிறதால, இன்னும் கூட எடுத்துகிட்டு இருக்காங்க. இந்தியா முழுக்க சுமார் 2000 சர்க்கரை ஆலை இருக்கு. இவை அனைத்தும் கரும்பை மூலப்பொருளாக வைத்துதான் இயங்குது. இந்தக் கரும்பிலிருந்து வர்ற சர்க்கரை, சர்க்கரையிலிருந்து வர்ற மொலாசஸ், மொலாசஸிருந்து வர்ற ரம், ஜின், பிராந்தி, பால் கலந்த சாக்லேட், இதுல வர்ற மின்சாரம், அத தொழிற்சாலைக்கு பயன்படுத்திய பிறகு மீதமுள்ள மின்சாரத்தை விற்பனை செய்வது, கரும்பு சக்கையிலிருந்து பேப்பர் தயாரிப்பது என எல்லாமே விவசாயத்தில் இருந்து தான் கிடைக்கிறது.

பஞ்சாலை, கரும்பாலை என விவசாயத்திலிருந்து வர்ற எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, வேஸ்டேஜ் அப்டின்னு ஒன்னும் இல்ல. பல நாடுகள் தங்களுடைய வேஸ்டேஜ் கொட்றதுக்குன்னு சில நாட்ட செலக்ட் பண்ணி பயன்படுத்தறாங்க. நம்ம நாட்டுக்கும் கன்டெய்னர் கன்டெய்னரா ஏராளமான வேஸ்ட் அனுப்புறாங்க.

அதனால விவசாயத்தை நம்பி பல தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கு. கோடிக்கணக்கான பணம் புழங்கிக் கொண்டிருக்கு. சோத்து பிரச்சனை இல்லை. வெளவிச்சு பயிரிட்ட விவசாயி, அதுல உருவான பாட்டில வாங்கி குடிக்க சாய்ந்தரம் ஆனதும் க்யூவுல போய் நிற்கிறான். இது என்னுடைய உற்பத்தி செஞ்சு வர்ற பொருளிலிருந்து தான் பீராவும், பிராந்தியாவும் இங்க வித்து லாபம் சம்பாதிக்கிறாங்கன்னு விவசாயிக்குத் தெரியல. அதைதான் இந்தப் படம் சொல்லுது” என்றார் விஜய் சேதுபதி.