

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய நடிகர் ரமேஷ் திலக், ”பத்து வருடங்களுக்கு முன் இதே மேடையில் தான் இயக்குநர் நெல்சன் இயக்கிய ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. அவர் தொடர்ந்து நிறைய படங்களை இயக்க வேண்டும் ஏனெனில் அவர் ஒரு நேர்மையான இயக்குநர். அவர் பத்து ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு இப்போது தான் இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்திருக்கிறார். பொருத்தமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அழைத்து வாய்ப்பளிப்பார்” என்றார்.
இயக்குநர் ராஜூ முருகன், ”என் மனதிற்கு நெருக்கமாக இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் படம். இது என்னுடைய விழாவாக தான் பார்க்கிறேன்.
ரமேஷ் திலக் குறிப்பிட்டது போல் நெல்சன் வெற்றி பெற்றால் ஏராளமானவர்களுக்கு ஒரு தலைமுறைக்கான வாசல் திறந்து விட்டது போல் இருக்கும். மிகச் சாதாரண நிலையில் இருந்து இந்த இடத்தை எட்டிப் பிடித்திருப்பவர்.
சில நபர்கள் தான் ஏற்ற இறக்கங்களைக் கடந்து வாழ்க்கையில் சீரான ஒரு நிலையை பராமரிப்பார்கள். அப்படி ஒரு இயக்குநர் தான் நெல்சன். இந்தத் திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். நிச்சயமாகச் சொல்கிறேன். நெல்சன் இயக்கிய படங்களில் வெகுஜன ஆதரவும், வியாபார ரீதியான பெரிய வெற்றியையும் பெறக்கூடிய முதன்மையான படமாக இது இருக்கும். இது சம்பிரதாயமான வார்த்தை இல்லை. நிச்சயம் இது நடக்கும்.
அதர்வாவிற்கும் இந்தப் படம் நிச்சயமாக நல்ல படமாக இருக்கும். அற்புதமாக நடித்திருக்கிறார். நிமிஷா இந்தியாவில் இருக்கக்கூடிய நல்ல நடிகைகளில் ஒருவர். மொழிகளைக் கடந்து ஏற்கனவே நம்மிடம் வந்திருப்பவர். இந்தப் படத்தில் ஸ்பெஷலாக நடித்திருக்கிறார். இந்தப் படம் மக்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார், தயாரிப்பாளர் என்பதை கடந்து என்னுடைய நண்பர். நல்ல மனிதர். நான் எப்போதும் ஆச்சரியமாக பார்க்கும் மனிதர். காலையில் 6:00 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி வந்தவாசிக்கு 9 மணிக்கு சென்று விடுவார், பிறகு அங்கிருந்து மாலை 6:00 மணிக்கு கிளம்பி, 9 மணிக்கு சென்னைக்கு வந்து விடுவார். தொடர்ந்து உழைக்கும் அபாரமான உழைப்பாளி. இந்த உழைப்புதான் அவரை அரசியல், சினிமா, தொழில் துறை என அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளராக மாற்றி இருக்கிறது.
சினிமா மீது தீரா காதல் கொண்டவர். ஒரு காபி குடிப்பதற்குள் ஒரு கதையைச் சொல்லக்கூடிய வல்லமை பெற்றவர். அவர் இயக்குவதற்கு அவரிடமே நிறைய கதைகள் உள்ளது. அவர் வெற்றி பெற்றால் மக்களுக்கு நிறைய நல்ல படங்கள் கிடைக்கும். அந்த வகையில் டி என் ஏ படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும். வெற்றி விழாவில் சந்திப்போம்” என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான், ”இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தப் படத்தின் பின்னணி இசைக்காக இயக்குநர் நெல்சன் என்னைத் தொடர்பு கொண்ட போது அவரிடம் நான் உங்கள் மிகப் பெரிய ரசிகன் என்று சொன்னேன். அவருடைய படங்களில் கதை சொல்லலில் ஒரு நேர்த்தி இருக்கும். என்னைப் பொறுத்தவரை அவர் இயக்கிய மூன்று படங்களை விட இந்த டிஎன்ஏ சிறந்தது என்று சொல்வேன்.
அவருடைய பேச்சை நான் மிகவும் ரசிப்பேன். அவரால் பொலிட்டிக்கல் என்டர்டெய்னர் படத்தை இயக்க முடியும். அந்த அளவிற்கு அவரிடம் அரசியலைப் பற்றிய அறிவு இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்து இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி” என்றார்.
ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் அம்பேத்குமார் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.


