

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ”இந்த மேடையில் வியப்பாகவும், சிலிர்ப்பாகவும் சொல்ல நினைப்பது இயக்குநர் நெல்சனைப் பற்றி தான். அவரிடம் தொடர் இலக்கிய வாசிப்பு இருக்கிறது. சமகாலத்தில் சமூகத்தின் அசைவுகளை அவதானித்து, அதில் தன்னுடைய பார்வையைப் பதிவு செய்வதில் தீவிரமானவர். அத்துடன் உலகத் திரைப்படங்களையும் தீவிரமாகப் பார்க்கக் கூடியவர். இத்தகைய அனுபவங்களில் ஊறி வெளியாகும் படைப்புதான் இது.
அவருடன் பாடல் எழுதும் போது பாடலுக்காக அவர் விவரிக்கும் சூழல் வாழ்க்கைக்கான கொண்டாட்டமாக இல்லாமல் நம்முடைய வாழ்க்கைக்குள் இருக்கும். மனித உணர்வுகளை நுட்பமாகச் சொல்லக்கூடிய வகையில் தான் அவர் சூழலை விவரிப்பார். என்னைப் போல் எழுதக்கூடியவர்களுக்கு இது எளிதானது. இதற்காகவும் அவருக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் பணியாற்றிய ஏனைய பாடலாசிரியர்களுக்கும், இசையமைப்பாளராக அறிமுகமாகும் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உலகம் நமக்கு எதைக் கொடுத்தாலும் நாம் அதற்கு திருப்பித் தர வேண்டியது அன்பை மட்டும் தான். இதைத்தான் இந்தப் படமும் பேசுகிறது” என்றார்.
பாடலாசிரியர் முத்தமிழ், ”1980களில் வெளியான ‘கண்ணில் தெரியும் கதைகள்’ என்ற படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றினார்கள். அவர்கள் அனைவரும் இசைத்துறையில் சாதித்த ஜாம்பவான்கள். தற்போது பாடல்கள் மலிந்து வரும் தருணத்தில் ஐந்து இசையமைப்பாளர்களை ஒரு படத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இயக்குநரும் தயாரிப்பாளரும் எடுத்த முடிவிற்குப் பாராட்டுகிறேன். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் அனைவரும் இசைத்துறையில் ஜாம்பவான்களாக மாற வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த ‘டிஎன்ஏ’ திரைப்படம், ரசிகர்களின் டிஎன்ஏவுக்குள் சென்று உற்சாகத்தை உண்டாக்கட்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
பாடலாசிரியர் உமாதேவி, ”இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் இடம் பிடித்திருக்கும் பெண் கதாபாத்திரங்கள் மிக முக்கியமானவர்களாக எனக்குத் தெரிந்தார்கள். கவனிப்பாரற்று இருக்கும் பெண்களைத் தன்னுடைய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இடம்பெறச் செய்திருப்பார்.
‘டிஎன்ஏ’ வில் உள்ள திவ்யா கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொலைத்த அனுபவங்களை நினைவுப்படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்திருக்கிறது. அற்புதமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களை தயாரித்திருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகை நிமிஷா சஜயன், ” டிஎன்ஏ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. திவ்யா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிறிது சவாலானதாக இருந்தது. அதர்வா திறமையான சக நடிகர். ரசிகர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு திரையில் மாயஜாலம் செய்திருக்கிறார்” என்றார்.
ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் அம்பேத்குமார் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

