Shadow

“மனிதத்தை மதிக்காதவர்கள் வாழும் சமூகத்தில் எப்படி வாழுவது?” – மாரி செல்வராஜ் | DNA திரைப்படம்

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், ”இந்தப் படத்தை நேற்று இரவு தான் என் உதவியாளர்களுடன் பார்த்தேன். அதன் பிறகு திவ்யா கதாபாத்திரத்தின் வடிவமைப்பு குறித்து விவாதித்தோம்.‌ திவ்யாவுக்கு என்ன டிஸ்ஸார்டர் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு என் உதவியாளர், ‘மிகவும் எனர்ஜியாக இருப்பார்கள். துருதுருவென்று ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருப்பார்கள்’ என்று விளக்கினார். நான் அதைப்பற்றி யோசித்துக் கொண்டே படம் பார்க்கிறேன். ஆனால் நான் இங்கு மேடையில் வந்த பிறகு அவருடைய நடவடிக்கையைக் கவனித்தேன். அவருடைய நடவடிக்கையைப் பார்த்து தான் கதாபாத்திரத்தை வடிவமைத்து இருப்பார்களோ என நினைக்கிறேன். அந்த அளவிற்கு அவர் உற்சாகமாக இருக்கிறார்.

எனக்கு இயக்குநர் நெல்சனை மிகவும் பிடிக்கும். ஏனெனில் ‘ஒரு நாள் கூத்து’ படத்தைப் பார்த்தேன். பொதுவாக சினிமாவை நாம் தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளது. யார் என்ன சொன்னாலும் கேட்காமல் பிடிவாதமாக நம்முடைய கற்பனைக்கேற்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து அந்தக் கதைகளைத் திரையில் கொண்டு வருவது. மற்றொரு வாய்ப்பு என்னவென்றால் எது மக்களுக்குப் பிடிக்கிறது, எது வெற்றிகரமானதாக இருக்கிறது, எது நம்மை முன்னிலைப்படுத்தும், எது நம்மை பிரபலமானவராக உயர்த்தும் என எண்ணி படத்தை இயக்குவது மற்றொரு வகை. இதில் நெல்சன் இயக்கிய நான்கு படங்களையும் எடுத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். அவர் கனமான கதைகளைத் தேர்வு செய்திருப்பார்.

‘ஒரு நாள் கூத்து’ படத்தின் கதையின் தொடக்கத்தையே மிகவும் முதிர்ச்சியாக காட்சிப்படுத்தி இருப்பார். அதைப் பார்த்து அப்போதே நான் வியந்து இருக்கிறேன்.‌ அவருடைய படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு உள்ளார்ந்த வாழ்க்கை இருக்கும்.

எங்களுடைய தலைமுறையைச் சார்ந்த இயக்குநர்களில் அவர் தனித்து நிற்கிறார். அவருடைய படைப்புகளில் அவருடைய சமூகப் பொறுப்புணர்வு தெரிகிறது. சட்டென்று பெரும்பாலான மக்களுக்குத் தென்படாத கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து அதைத் திரையில் கொண்டு வருகிறார்.

இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஓடும் ஆற்றில் ஒரு இலையைத் தூக்கி போட்டால் அது எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாமல் செல்வது போல், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு நாவலைப் படிப்பது போன்ற உணர்வுகளைத் தரக்கூடிய படம் இது. இது போன்ற படத்தை வழங்குபவர் தான் நெல்சன்.

இந்ப்த படத்தை பார்த்த என்னுடைய உதவியாளர்களிடம், ‘படம் எப்படி?’ எனக் கேட்டபோது, அனைவரும் ஒரு நாவலை வாசித்த பிறகு இருக்கும் அமைதியும் மௌனமும் தான் அவர்களின் எதிர்வினையாக இருந்தது. இந்தப் படத்தை பார்க்கும் போது எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உண்மையை நேரில் பார்ப்பது போல் இருக்கும்.‌

நாம் படுத்து எழுந்து சென்ற இடத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தையும், பில் கட்டுவதற்காக ஒரு கவுண்டரில் நின்று கொண்டிருப்போம். அந்த கவுண்டருக்குள் ஒரு கதை இருக்கும். அது நமக்குத் தெரியாது. நாம் ஒரு டாக்ஸிக்குள் பயணித்திருப்போம். அந்த டாக்ஸிக்குள் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கும். அது நமக்குத் தெரியாது. இப்படி நாம் அங்கங்கே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே சென்றிருப்போம். இதுபோல் நாம் படுத்து, எழுந்த, தவித்த இடங்களில் மனிதநேயம் கொண்ட ஒரு கதை இருக்கும். அதைப் பிரதிபலிக்கிற படமாகத்தான் டிஎன்ஏ இருக்கிறது.‌

நாம் நம்பிக்கையுடன் பழகும் சமூகத்தில் உள்ளவர்களிடம் இப்படி ஒரு விசயம் நடந்தால் எப்படி இருக்கும் என்ற விசயமும், மனிதத்திற்கு மதிப்பளிக்கக் கூடியவர்களும், மனிதத்தை மதிக்காதவர்களும் வாழும் இந்த சமூகத்தில் நாம் எப்படி வாழ்வது என்பதையும், அதற்குள் நாம் எப்படி சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் இந்தப் படம் பேசுகிறது.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிமுக இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா, சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் அம்பேத்குமார் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.