Shadow

சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்

Super-deluxe-movie-review

வாழ்வின் ரகசியத்தைப் பற்றிச் சொல்லும் 175 நிமிடங்கள் ஓடும் நீளமான படம்.

மணமாகிவிட்ட வேம்பு, தனது கல்லூரிக் காதலனுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் இறந்து விடுகிறான்; பள்ளியைக் கட்டடித்து விட்டு பிட் படம் பார்க்கும் பள்ளி மாணவர்களின் ஒருவனது அம்மா அந்தப் படத்தில் தோன்றுகிறார்; வீட்டை விட்டு ஓடிப் போய்விட்ட தந்தையை முதல்முறையாகப் பார்க்கக் காத்திருக்கும் சிறுவன் முன் ஷில்பா வந்து இறங்குகிறாள்; தற்கொலை செய்து கொள்ள கடலில் இறங்கி சுனாமியில் சிக்கிய தன்னைக் காப்பாற்றிய ஒரு சிலையை ஆண்டவராக எண்ணி சதா பிரார்தித்துக் கொண்டிருக்கிறான் தனசேகர். இப்படி நான்கு கிளைக்கதைகளை ஒன்றிணைக்கும் தரமான கலகலப்பான அடலட் (A) மூவியாக சூப்பர் டீலக்ஸ் உள்ளது.

நீளத்தை மட்டும் கத்தரித்திருந்தால் படத்தின் விறுவிறுப்பு கூடி சலிப்பு தட்டாமல், முதல் பாதியைப் போலவே இரண்டாம் பாதியையும் ரசித்திருக்க இயலும். முக்கியமாக, சப்-இன்ஸ்பெக்டராக வரும் பக்ஸின் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். காவல் நிலையத்தில், பக்ஸ்க்கும் ஷில்பாவிற்குமான காட்சிகளை அறவே நீக்கினாலும் கதையில் எந்த மாற்றமும் தோன்றாது. ஃபகத் ஃபாசில், சமந்தாவுடனான பக்ஸின் காட்சிகளையும் பாதியாகக் குறைத்திருந்திருக்கலாம். கலகலப்பாகப் பயணிக்கும் படத்தை எரிச்சல் மூட்டுகிறது பகவதி பெருமாளின் போர்ஷன். மிக சென்சிடிவாக அணுக வேண்டிய ஷில்பா அத்தியாயத்தை, மலினமான கேமிராக் கோணங்களால் தன் படைப்பிற்குத் தானே துரோகம் செய்கிறார் இயக்குநர். க்ளைமேக்ஸின் பொழுது படம் வளவளவென வசனங்களால் நிரம்பி வழிகிறது. எல்லாவற்றிற்கும் பதில் சொல்கிறார் தியாகராஜன் குமாரராஜா. வைரங்களின் தோற்றம், உயிர்களிம் தோற்றம் என எதைச் சொல்ல, எதை விட என்ற யோசனைக்கே போகாமல் அத்தனையையும் வசனங்களாக்கி விடுகிறார். அதை, அஜால் குஜால் டாக்டராக வரும் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனும் சளைக்காமல் பேசித் தீர்க்கிறார்.

ஒரு படைப்பு, கலையாக வேண்டிய தருணங்களைப் படம் பெற்றிருந்தாலும், அதை ஒரு காமிக்கல் சர்ப்ரைஸாக மாற்றி, பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார் தியாகராஜன் குமாரராஜா. ஷில்பா, தன் மகனுடனே இருந்துவிடுவதென முடிவெடுக்கும் தருணம் மிக முக்கியமானது. ஆரண்ய காண்டத்தில், குரு சோமசுந்தரம் தன் கண்களில் மகன் மீதான பாசத்தைச் சுமந்தவண்ணம் இருப்பார். ஷில்பாவான விஜய் சேதுபதியோ, திருநங்கைகளின் உணர்வுகளையும் பிரதிபலிக்கவில்லை, தன் மகன் மீதான பிரியத்தையும் வெளிக்காட்டவில்லை. அவருக்கு நேர்மாறாக, காயத்ரியோ சின்னஞ்சிறு அசைவின் மூலம் கூடத் தன் வருத்தத்தையும் துயரையும் நடிப்பில் பிரதிபலிக்கிறார்.

பணத்திற்காகத் திருநங்கைகள் குழந்தைகளைக் கடத்தி விற்பார்கள்; கிறிஸ்துவர்களின் வழிபாட்டைச் சித்தரித்திருக்கும் விதம்; ஆண்டவரின் அற்புதத்தை நம்புபவருக்கு ராமசாமி என்ற பெயர் சூட்டல்; காமாந்தகரான பக்ஸின் பெயர் பெர்லின்; தேசப்பற்று உண்மை என்றால் சாதிப்பற்றும் உண்மைதானே என்ற கேள்வி எனப் படம் நெடுகே ஒரு வலதுசாரி இழை நுண்ணியமாய் ஓடிக் கொண்டே இருக்கிறது. படத்தில் ஏலியனும் வருகிறது, விஞ்ஞானமும் பேசுகிறது. கொண்டாட ட்விஸ்ட்கள், வசனங்கள் உண்டென்ற போதிலும், அதனூடே தேவையே இல்லாத பொழுதும் திணிக்கப்பட்டுள்ள வலதுசாரித் தூவல்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எவ்வளவு நாசூக்காக இழையோட விட்டுள்ளார் தியாகராஜன் குமாரராஜா.

விஷுவலில் உள்ள வண்ணமயமான கெட்டிக்காரத்தனம், கதாபாத்திரங்களின் எமோஷ்னல் கிராஃபில் பிரதிபலிக்காதது மிகப் பெரும் குறை. ஒரு வித்தியாசமான திரை அனுபவமாகவும், ஜாலியானதொரு படமாகவும் மட்டுமே ‘சூப்பர் டீலக்ஸ்’ மிகச் சொகுசானதொரு தளத்தில் ரசிக்க வைக்கிறது.