Shadow

ஐரா விமர்சனம்

Airaa-movie-review

‘ஐரா’ என்றால் யானையின் குறியீடு என்கிறார் இயக்குநர் சர்ஜுன். ‘என்னது ஐரான்னா யானையா?’ என வாய் பிளந்தால் ஐராவதம் என்கிறார். இதென்ன இந்திரனின் வெள்ளையான வாகனத்துக்கு வந்த சோதனை எனக் குழம்பி, யானையின் ஞாபகச்சக்திக்கும், பழிவாங்கும் குணத்திற்குமான குறியீடாகத் தலைப்பை உருவகப்படுத்திக்க வேண்டியுள்ளது.

விபத்தில் இறந்துவிடும் கருப்பு நயன்தாராவான பவானியின் பழிவாங்கும் படலம் தான் ஐரா படத்தின் ஒரு வரிக் கதை.

பட்டாம்பூச்சி எனப் படத்திற்குப் பெயர் வைத்திருந்தால் மிகப் பொருத்தமானதாய் இருந்திருக்கும். படத்தின் தொடக்கம் முதலே பட்டாம்பூச்சி முக்கிய பாத்திரமாக சோலோவாகவும், கும்பலாகவும் வருகின்றன. படத்தின் ஆதாரக் கருவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வைக்கச் சிரமப்படுகிறார் கதை, திரைக்கதை எழுதியுள்ள பிரியங்கா ரவீந்திரன். ஆதலால், நயன்தாரா முதன்முதலில் இரு வேடங்களில் நடித்திருந்தும் மனதில் பதியவில்லை.

ஓர் அழுத்தமான வெஞ்சினத்துடன் பழி வாங்குவதுதான் தமிழ்ப்பேய்களின் குணம். அத்தகையதொரு வலுவான காரணி பவானிக்கு இருப்பதாகப் பார்வையாளர்களை நம்பவைக்காததுதான் திரைக்கதையின் பலவீனம். யமுனாவான வெள்ளை நயன்தாராவிடம், ‘உன்னைப் பயமுறுத்தினா தான் என் நியாயம் புரியும்’ எனச் சொல்கிறார் பவானியான கருப்பு நயன்தாரா. யமுனாவைப் பயமுறுத்துவதற்காக, யமுனாவின் பாட்டியைக் கொல்வது என்ன பேய்த்தனமான லாஜிக்கோ தெரியவில்லை?

‘உனக்கு என் மேல கோபம்ன்னா என்னை மட்டுந்தான டார்கெட் பண்ணியிருக்கணும்? ஏன் சம்பந்தமே இல்லாமல் என் பாட்டியைக் கொன்ன?’ என்ற கோபம் யமுனாவிற்கு எழாதது ஆச்சரியமாக இருக்கிறது. தன் வாழ்க்கையை அடமானம் வைக்கும் தியாகியாகிவிடுகிறார் யமுனா. ஷ்ஷ்ப்பாஆஆ..

பவானியின் காதலன் அமுதனாகக் கலையரசன் நடித்துள்ளார். மிகக் கச்சிதமான வரையறைகளோடு இந்தக் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதால், அமுதனைப் படம் முழுவதும் ரசிக்க முடிகிறது. அமுதனுக்கும், பவானிக்குமான ஃப்ளாஷ்-பேக்கும், அவர்களின் அன்பைச் சொல்லும் ‘மேகதூதம்’ பாடலும் அருமையாக உள்ளன. ‘பிளாக் & வொயிட் காட்சிகளை ரசித்து எடுத்தேன்’ எனச் சொல்லியுள்ளார் இயக்குநர் சர்ஜுன். ஒருவேளை அவர் முழுப் படத்தையும் ரசித்து எடுத்திருந்தால், அற்புதமான படமாக வந்திருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.

ஃப்ளாஷ்-பேக்கில், பவானியாக நடித்துள்ள மாடலிங் நடிகையான கேப்ரில்லா அசத்தியுள்ளார். ஃப்ளாஷ்-பேக் காட்சிகளின் கனத்தைத் தனது நடிப்பால் சாத்தியமாக்கியுள்ளார். காது கேளா மணியாய் யோகி பாபு முதற்பாகத்தில் வருகிறார். அவர் கவுன்ட்டர் தருமளவுக்கு காட்சிகளோ, உடன் நடிக்கும் நபர்களோ அவருக்கு செட் ஆகவில்லை. அதனால் கண் தெரியாத பாட்டியாக நடித்திருக்கும் குலப்புள்ளி லீலாவை மட்டும் கலாய்க்க வேண்டியுள்ளது யோகிபாபுக்கு. அவை நகைச்சுவைக்கு உத்திரவாதம் அளிக்கவில்லை. க்ளைமேக்ஸும் காட்சிகளும் சோதிக்கிறது.

இயக்குநர் சர்ஜுனின் சீன் கோரியோகிராஃபிக்கான மெனக்கெடல் படத்தை ரசிக்க வைக்கிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகள், நல்ல த்ரில்லருக்கான முஸ்தீபாகத் தொடங்குகிறது. அந்தச் சுவாரசியத்தை நீட்டிருந்தால், நயன்தாராவின் முதல் இருவேடப் படம், மறக்கவியலாத விஷுவல் ட்ரீட்டாய் மனதில் நடை போட்டிருக்கும்.