ஐஸ் ஏஜ்: கொலிஷன் கோர்ஸ் விமர்சனம்
சிறுகோள் (Asteroid) ஒன்று பூமியைத் தாக்க வருகிறது. பூமியின் அடியாழத்தில் வாழும் பக், ஒரு தீர்க்க தரிசணத்தைச் சொல்லும் தூணைத் தற்செயலாகக் கண்டுபிடிக்கிறது. அந்தத் தூணிலுள்ள செய்தியின் படி, முன்பே பூமியில் விழுந்த சிறுகோளின் ஒரு பகுதிதான் அதன் மற்றொரு பகுதியை ஈர்க்கும் விசையாகச் செயல்படுகிறது; அதை மீண்டும் விண்வெளிக்கு அனுப்பி விட்டால் பூமியைப் பேரழிவில் இருந்து காப்பாற்றலாம் என்றிருக்கிறது. பக்-கின் தலைமையில் பாலூட்டிகள் எப்படி சிறுகோளை விண்வெளிக்கு ஏவி பூமியைக் காப்பாற்றுகின்றன என்பதே படத்தின் சுவாரசியமான கதை.
2002 இல் வெளியிடப்பட்ட முதல் ஐஸ் ஏஜ் படத்தில் இருந்தே வரும் மரபுப்படி, இப்படமும் ஸ்க்ராட் எனும் அணிலின் ஓக் கொட்டை மீதான காதலுடனே தொடங்குகிறது. இம்முறை ஓக் கொட்டையைப் புதைக்கும் முயற்சியில், பனியில் புதையுண்டு கிடக்கும் வேற்றுக்கிரகவாசியின் விண்கப்பலை உயிர்ப்பித்து விடுகிறது ஸ்க்ராட...