பாயிண்ட் பிரேக் விமர்சனம்
முடிவெடுத்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும் கணத்தையோ, இதற்கு மேல் அடக்கி வைக்க இயலாதென்று குமுறியெழும் அழுகையையோ, இனி பொறுக்க இயலாதென வெடித்தெழும் கோபத்தையோ 'பாயின்ட் ப்ரேக்' என்பார்கள். நாயகனுக்கு அப்படி இரண்டு 'பாயின்ட் ப்ரேக்'கள் படத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஏற்படுகிறது. ஒன்று சோகத்திலும்; இன்னொன்று பரவசத்திலும்.
கடலலையில் சறுக்கி விளையாட ஏதுவான சற்றே நீடித்த அலை, கரையிலிருந்து கடலை நோக்கி நீளும் ஒரு நீர் முனையில் வந்து மோதும் இடத்தையும் 'பாயிண்ட் பிரேக்' என்பார்கள்.
எதிர் நாயகனாகச் சித்தரிக்கப்பட்டிருப்பவர் தான் நாயகன் எனத் தோன்றுகிறது. படம் முழுவதும் குறியீடுகளும் தத்துவங்களும் விரவிக் கிடக்கின்றன. நாயகன் பெயர் யூட்டா; எதிர்நாயகன் பெயர் போதி. சமஸ்கிருதத்தில், போதி என்றால் அக ஒளி அல்லது விழிப்பு நிலை எனப் பொருள். நவோஜா எனும் செவ்விந்திய இனமொன்றில், யூட்டா என்றால் மலைகளில் ...