Shadow

தமிழ் சினிமாவின் பவழ விழா ஸ்பெஷல் | பெரு.துளசி பழனிவேல்

peru-thulasi-palanivel-book

தமிழ்த் திரைப்பட உலகின் பவழ விழா ஆண்டு 2006 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அக்டோபர் 31, 1931 இல், தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ வெளியானது. அன்றிலிருந்து, தமிழ் சினிமாவில் முதன் முதலாக நிகழ்ந்த சிறப்புகளைத் தொகுத்து, ‘தமிழ் சினிமாவின் முதல்வர்கள்’ என்ற புத்தகத்தை 2006 இல் எழுதியுள்ளார் திரைப்படப் பத்திரிகை தொடர்பாளரான பெரு.துளசி பழனிவேல். மொத்தம் 28 சிறப்புமிகு படங்களைப் பற்றிச் சுருக்கமாக தந்துள்ளார். இப்புத்தகம், திரைப்படப் பிரியர்களுக்கான ஒரு பொக்கிஷச் சேமிப்பு.

காதலையும், தமிழ்ப்படங்களையும் பிரிக்கவே முடியாதோ என்று கதி கலங்கும்படி, வசவசவெனக் காதல் படங்களை உருவாக்கித் தள்ளுகின்றது தமிழ்த் திரைப்பட உலகம். அலுக்கவே அலுக்காமல் தமிழ்த் திரையுலகம் காதல் படங்களை எடுப்பதும், எங்களுக்குச் சலிக்கவே சலிக்காதெனப் பார்வையாளர்கள் அவற்றைக் கொண்டாடுவதும் ஒரு தொடர் கதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு, திரையரங்கிற்கு ரிப்பீடட் ஆடியன்ஸைக் கொண்டு வந்தது கூட காதல் படமான ’96 தான். இவற்றிற்கெல்லாம் வித்திட்டத் தமிழின் முதல் காதல் படம் வெளியான ஆண்டு – 1950. அதை விடச் சுவாரசியம், அப்படத்தை இயக்கியது ஓர் அமெரிக்க இயக்குநர் என்பதே ஆகும். பிராணநாதனை அத்தானாக்கி, அக்காதல் தமிழ்க் காவியத்திற்கு கதை – வசனம் எழுதியவர் புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்.

இப்படியாக, முதல் இரட்டை வேடப் படம், முதல் வண்ணப்படம், முதல் வட்டார மொழிப்படம், ‘ஏ’ சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப்படம், முதல் விஞ்ஞானப் படம் எனப் புத்தகம் முழுவதும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், தமிழின் முதல் பெண் இயக்குநரான டி.பி.ராஜலட்சுமி இயக்கிய ‘மிஸ் கமலா (1936)’ படத்தைச் சாய்ஸில் விட்டுவிட்டார். எழுத்தாளருக்கு அந்தச் சுதந்திரமும் உரிமையும் உண்டு என்றாலும், திரைப்படம் சார்ந்த எந்தத் தொகுப்பிலேயும், மறந்தும் விட்டுவிடக் கூடாத பன்முக திறமை வாய்ந்த ஆளுமை டி.பி.ராஜலட்சுமி. மிஸ் கமலா படத்திற்கு அவரே கதை, திரைக்கதை எழுதித் தயாரித்ததோடு மட்டும் அல்லாமல், படத்திற்கு இசையமைத்து, படத்தொகுப்பையும் செய்துள்ளார். இன்றளவும் நாவலைத் தழுவி தமிழ்ப்படம் எடுப்பது என்பது குதிரைக்கொம்பான விஷயமாகவே உள்ளது படைப்பாளிகளுக்கு. ஆனால், ‘கமலவள்ளி’ எனும் தனது நாவலைத் தழுவியே ‘மிஸ் கமலா’ படத்தை எடுத்துள்ளார் டி.பி.ராஜலட்சுமி. 

தமிழின் முதல் பிரம்மாண்டமான படமான ‘சந்திரலேகா’வைச் சிலாகிக்க மூன்றரை பக்கங்கள் மட்டுமே ஒதுக்கியது கஞ்சத்தனத்தில் வரும். என்றாலும், மூன்றரை பக்கங்கள் என்பதை 28 படங்களுக்கான சராசரி இட ஒதுக்கீடென சமத்துவம் பேணியுள்ளார். ‘கூண்டுக்கிளி (1954)’, சிவாஜியின் ‘நவராத்திரி (1964)’, கமலின் ‘பேசும் படம்’ (1987) ஆகிய மூன்று படங்கள் மட்டுமே விதிவிலக்காகக் கூடுதல் பக்கங்களைப் பெற்றுள்ளன. பாடலே இல்லாத படமான சிவாஜியின் ‘அந்த நாள்’ படம், ஜப்பான் படமான ரோஷாமானின் தழுவல் என சுட்டிக் காட்டியவர், தமிழின் முதல் இரட்டை வேடப்படமான ‘உத்தமபுத்திரன்’, ‘தி மேன் இன் தி அயர்ன் மாஸ்க்’ என்ற அமெரிக்கப் படத்தின் உருவல் என்பதை ஏனோ சொல்லாமல் தவிர்த்து விடுகிறார் எழுத்தாளர். தமிழ்த் திரையுலகில், கதைத் திருட்டுக்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது என்பது ஒரு வேதனையான உண்மை.

எளிமையான மொழியில் தமிழ் சினிமா வரலாற்றின் முக்கிய பக்கங்களை ஆவணமாக்கியுள்ளது இப்புத்தகம். வரலாறு என்று சொல்வதை விட, தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் காலந்தோறும் நகர்த்திய படங்களைப் பற்றிய எளிய அறிமுகம் என்பதே சரியாக இருக்கும். இரண்டு திலகங்கள் முதன்முறையாக நடித்த ‘கூண்டுகிளி (1954)’ என்ற படம் இதிலுமொரு விதிவிலக்கு. திரையில், முதல் முறையாக ஒரு நாயகனை இரட்டை வேடங்களில் பார்த்த பொழுது ரசிகர்களுக்கு நேர்ந்த பரவசத்தை அழகாக வர்ணித்துள்ளார். இன்றைய தலைமுறையினருக்கு, அத்தகைய பரவசம் கிடைத்திட வாய்ப்பே இல்லை. 

படத்தைப் பற்றி சின்ன அறிமுகம், திரைப்படக் குழுவைப் பற்றிய தகவல்கள், இறுதியில் படத்தின் கதையைச் சுருக்கமாக எடுத்தியம்புவது என்ற பேட்டர்னில் உள்ளன 28 கட்டுரைகளும். இது போன்ற புத்தகங்களின் அவசியம் என்பது மிகவும் தேவையாக உள்ளது. ஒன்று, அடுத்த தலைமுறைகளுக்குத் தகவலைக் கடத்துவது; மற்றொன்று, நாயகர்கள் மட்டுமே சாதனையாளர்கள் அல்ல என்ற எண்ணத்தை அழுத்தமாகப் பதிப்பது. பல துறைக் கலைஞர்களின் கூட்டு முயற்சியான சினிமாவின் முகமாகப் பெரும்பாலும் நாயகர்கள் மட்டுமே இருப்பது, இத்துறையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு மிகப் பெரும் தடை. அதைத் தகர்க்க, இது போன்ற புத்தகங்களின் வரவு மிகவும் அத்தியாவசியம்.

Tamil cinema Stamps

இந்திய சினிமா நூற்றாண்டு விழா, 2013 இல் கொண்டாடப்பட்டது. அப்போது, மறைந்த எழுத்தாளரான ஞாநி, அவரது வீட்டில், சினிமா நூற்றாண்டு விழாவினைப் பொருட்டு நிகழும் கேணி இலக்கியச் சந்திப்பை  நடத்தினார். அச்சந்திப்பிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த  நடிகர் மோகன்ராமன், பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட முதல் இந்தியப் படமான ‘தியாக பூமி’ பற்றிச் சொல்லி, தமிழ்த் திரைப்படங்கள் சுதந்திரப் போராட்டத்திலும், சமூக நீதியைத் தக்க வைக்கவும் தொடர்ந்து எப்படி இயங்கியது எனச் சிலாகித்தார். அப்பொழுது அவர் சுட்டிக் காட்டிய ஒரு விஷயம், இந்திய அரசாங்கம் சினிமா நூற்றாண்டிற்காக, சிறந்த திரைக் கலைஞர்களுக்குத் தபால் தலை வெளியிடத் திட்டமிடுகிறது. அதற்காகத் தமிழின் சிறந்த கலைஞர்களைப் பற்றிய விவரத்தினை மத்திய அரசாங்கம் கேட்கிறது. இங்குள்ள சங்கங்களோ அரசாங்கமோ அக்கறை காட்டாத பொழுது, நடிகர் மோகன் ராம் சொந்த முயற்சியில் மெனக்கெடல் போடுகிறார். நாகேஷ் எனும் மகத்தான கலைஞனுக்குப் பரிந்துரையின் பெயரில்தானா மத்திய அரசு தபால் தலை வெளியிட வேண்டுமென வருத்தம் தெரிவித்தார். நாம் நம் படங்களைக் கொண்டாடித் தீர்ப்பதில்லை, அதைப் பெருமையாகப் பலர் பார்வைக்கு வைப்பதில்லை. ஏனெனில் நாமே நம்மைப் பற்றிப் பெருமை பேசிக் கொண்டால், அது ‘தற்பெருமை’ எனச் சொல்லி வளர்க்கப்படுகின்றோம். அப்படியில்லாமல், ஹிந்திவாலாக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும்படி இங்குள்ள ஊடகத்தின் குரல் பலமாக இருக்கவேண்டும் என்கிறார். இது எல்லா விஷயத்திற்குமே பொருந்தும். அப்படி நம்மை நாமே கொண்டாடுவதற்கும், நம் சாதனைகளை உரக்கச் சொல்வதற்கும் தேவையான ஆதாரங்களை ஆவணப்படுத்த பெரு. துளசி பழனிவேல் போன்றவர்களின் பங்களிப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

தற்போது, ‘துளசி சினிமா நியூஸ்’ எனும் இதழ் நடத்தும் பெரு. துளசி பழனிவேல், தமிழ் சினிமாவில் வெளியாகும் அனைத்துப் படங்கள் குறித்த விவரங்களையும் முறையாகத் தொகுத்து வழங்குகிறார். திரைத்துறையின் மூத்த பத்திரிகையாளரான அவர், ஏ.வி.எம் நிறுவனத்தில் மக்கள் தொடர்பாளராக நீண்ட காலம் பணியாற்றியவர். சமகால படங்களைப் பற்றி மட்டுமல்லாமல், பழைய படங்கள் பற்றிய தகவல்களுக்கும் அவரிடம் பஞ்சமில்லை. டிஜிட்டல் யுகத்தில் சினிமாவைப் பற்றிப் பல போலியான தகவல்கள் இணையத்தில் சுற்ற,  ஆதாரபூர்வமான தகவல்கள் விரும்புவோர்க்கு ‘துளசி சினிமா நியூஸ்’ ஓர் அருமையான வரப்பிரசாதம்.    

thulasi-cinema-news