Search

பிக் பாஸ் 3: நாள் 77 | கவின் – காற்று போன பலூன்

bigg-boss-3-day-77

சேரனனின் சீக்ரெட் ரூம்

எவிக்ஷனுக்குப் பிறகு தெளிவும் நிம்மதியும் அவர் முகத்தில் இருந்தது. ‘எங்கிட்ட நிறைய மாற்றம் வந்துருக்கு’ எனச் சொன்னார். அது கண் கூடாகத் தெரிந்தது. உள்ளே வரும்போதும், பிறகு வாராவாரமும், மைக் கிடைத்த பொழுதெல்லாம் நிறைய பேசின சேரனைப் பார்க்க முடியவில்லை. நிறைய அனுபவங்கள் கிடைத்தது. ‘என்னோட கோபத்தைத் தூக்கி எறிஞ்சுட்டேன்’ என இந்த கேமையே ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தின ஒரு பெருமிதம் அவரிடம் தெரிந்தது. ஒரு குறும்படம் போடத் தயாரான போது, சேரன் சீக்ரெட் ரூம் செல்கிறார் என பிக் பாஸ் குரல் வந்தது. சேரனும் மகிழ்ச்சியாகக் கிளம்பினார்.

கவினும் காலர் ஆஃப் தி வீக்கும்

‘அண்ணா, 75 நாளா பிக் பாஸ் வீட்டுல இருக்கீங்க. ஒரு தடவை கூட பெஸ்ட் பெர்ஃபாமர் அவார்டுக்கோ, கேப்டன் ஆகுறதுக்கோ உங்க பெயரை யாரும் சொல்லவே இல்ல?’ என்பது கேள்வி. ‘சாரி நண்பா என்னிடம் பதிலில்லை’ என்ற கவினிடம், ‘மழுப்பாம, புரிஞ்சுக்கப் பாருங்க’ என கமல் சொன்னார். ‘புரிஞ்சது சார். யோசிக்கிறேன்’ என்றார் கவின். ஆக, அதற்கு ஒரு ஸ்கெட்ச் போடுவார் என எதிர்பார்க்கலாம்.

சேரனின் பிரியாவிடை

‘வெளிய போகறதுக்கு காரணம் இருக்கு’ எனச் சொன்ன சேரனிடம், ‘இப்ப சொல்லுங்க அந்தக் காரணத்தை’ என கமல் கேட்கவும், ‘வித்தியாசமான அனுபவத்தை எதிர்பார்த்து வந்தேன் சார்; அது எனக்கு கிடைச்சிருச்சு’ எனச் டொல்லும் பொழுதே கார்ட் எடுத்துக் காட்டினார் கமக். லாஸ் அழுக, மற்றவர்கள் எல்லாம் கனத்த இதயத்துடன் விடை கொடுத்தனர். ஷெரினுக்குத்தான் பெரிய இழப்பு. ஒருத்தரோட இருப்பு, அவர் இல்லாத போதும் உணர முடிந்தாலே, நாம் அந்த இடத்தில் சரியாக இருந்திருக்கோம் என அர்த்தம். அந்த விதத்தில் சேரன் சரியாகத்தான் இருந்திருக்கிறார்.

வனிதாவும் – கழுத்தில் கத்தியும்

சேரனும், சாண்டி டீமும் ஏதோ பேசிக் கொண்டிருக்க, டபாரென உள்ளே புகுந்த வனிதா ஹை டெசிபலில் மீண்டும் கத்த ஆரம்பித்தார். ‘இந்தப் பாயின்ட்ஸ் எல்லாம் நான் கேப்பேன்’ எனச் சொல்லவும், நம்மைப் போலவே சேரனும் கெதக்கென அதிர்ந்தார். பிக் பாஸ் டீமும் ஷாக் ஆகியிருக்கும் போல. சேரனைக் கூப்பிட்டு, ‘காலில் வேணும்னாலும் விழறேன், அந்த அரிசி குண்டானை சமாதானம் பண்ணி விடுங்க’ எனக் கேட்ருப்பாங்க போல. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, ஒரு வழியாக இந்தப் பிரச்சினையை விட்டுத் தொலை எனச் சொல்லிவிட்டார். உள்ளே வந்த சேரனைப் பார்த்து, ‘காதுல ரத்தமா?’ என சாண்டி கேட்க, ‘என் கழுத்தைப் பார்க்கலையா நீயி?’ என காமெடி பண்ணார் சேரன்.

மீண்டும் மரம் ஏறிய வேதாளம் – வனிதா

சேரன் தான் வெளியேறுகிறார் எனச் சொன்ன உடனே மொத்த வீடும் அமைதியாக இருந்தது. ‘இது எப்படிண்ணா? என்னால ஏத்துக்கவே முடில, எனக்கு புரில!’ என ஆரம்பித்தது வனிதா தான். ‘ஒழுங்கா டாஸ்க் பண்றவங்க, நல்லா வேலைசெய்யறவங்க, இவங்கெல்லாம் இங்க இருக்க முடியாது இல்லையா? அப்ப எங்களையும் வெளிய அனுப்பிடுங்க’ எனக் கத்திக் கொண்டிருந்தார் வனிதா.

பறக்கும் பட்டமும் – பறந்த மரியாதையும்

பட்டப்பெயர் கொடுத்த போது லாஸ் கோபப்பட்டு தூக்கி எறிந்த விஷயத்தை கையில் எடுத்தார் கமல். இந்தப் பக்கம் லாஸ், அந்தப் பக்கம் மோகன் வைத்யா. இரண்டு பேருக்கும் மாற்றி மாற்றி கருத்தூசி போட்டுக் கொண்டே இருந்தார். அது ஊசியென லாஸுக்கு புரிய, மோகன் தான் பாவம். வனிதா இங்கேயும் மறுத்துப் பேச, டிஸ்கவரி சேனலிடம் இருந்து கடன் வாங்கி கருத்து சொன்னாரு.

கவின் – காற்று போன பலூன் 

‘எவிக்‌ஷனுக்குப் போறதுக்கு முன்னாடி, கடைசியாக ஏதாவது சொல்லணும்னா சொல்லுங்க கேப்போம்’ எனச் சொல்ல, முதல் ஆளாக கை தூக்கினார் முகின். ‘நான் போக மாட்டேன் சார். நான் கண்டிப்பா சேவ் ஆகிருப்பேன்’ என கண்டிஷனாகச் சொல்ல, ‘தன்னம்பிகை ஜெயித்தது’ எனச் சொல்லி முகினை சேவ் பண்ணிட்டார். கூடவே ஷெரினையும். ஷெரின் கொடுத்த “ஆ ஆ ஆ” ரியாக்ஷனை கமல் செய்து காட்டினது ஆசம். மீதி இருந்த 3 பேரில் கவினும் காப்பாற்றபட்டதாகச் சொன்னவுடனே, இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஒரு ரியாக்னோட இருந்தார் கவின். உங்களுக்கு இது செட்டாகலைங்க தம்பி!

நாலு டிசர்ட்டும் நல்லாயிருந்த பிக் பாஸ் வீடும்

‘பாய்ஸ் டீம்ல தன்னை சேர்த்துக்கலை’ என வருத்தப்பட்ட ஷெரின் சார்பாகச் சாண்டியைக் கேள்வி கேட்டார் கமல். ‘அது வந்து சார், போய் சார்’ என மழுப்பி, ‘கொடுகலாம்ன்னு வச்சிருந்தோம், மறந்து போய்ட்டேன், இப்ப அபிராமி வந்து வாங்கிட்டுப் போய்ட்டாங்க’ எனச் சொல்ல, ‘டீசர்ட் வந்து ரெண்டு வாரம் ஆச்சு’ என உண்மையை உடைத்துவிட்டார் சேரன். ‘சரி விடுங்க. பிக் பாஸ் சார்பா வேற டீ சர்ட் வந்துட்டே இருக்கு’ எனச் சொல்லி பஞ்சாயத்தை முடித்து வைத்தார்.

கலைஞன் கமல்

சத்தம் போடாமல் அகத்துக்குள் வந்த போது, ஜாலியாகப் படுத்திருந்த சாண்டியை, ‘ரங்கநாத சாண்டி’ எனக் கூப்பிட்டு ரகளையாக ஆரம்பித்தார். காலர் ஆஃப் தி வீக்கிடம், ‘தூங்கிட்டு இருக்கீங்களா நண்பா?’ என கவின் கேட்க, ‘எல்லலோரும் சாண்டியா என்ன?’ என கமல் கவுன்ட்டர் கொடுத்தது சூப்பர்.

எப்பவும் போல வனிதா குறுக்க வர, ‘இருங்க நான் பேசிடறேன்’ என சைகை பண்ணின போது ஒரு ஸ்டாண்டப் காமெடியனின் பாடி லாங்வேஜ் தெரிந்தது. ‘குறுக்கப் பேசினா மறந்துருவேன்’ எனச் சொல்லிவிட்டு, ‘இப்ப மறந்துட்டேன் பாருங்க’ என ஆக்டிங் செய்தது அதகளம்.

பெஸ்ட் பெர்ஃபாமர் பற்றிக் கேட்கும் போது, ‘இப்ப எதுக்கு கை தட்டுனிங்க?’ என பார்வையாளர்களைக் கலாய்த்தது சிறப்பு. மொத்தத்த்தில் கமல் அனைவரையும் தெறிக்க விடும் ஃபார்மில் இருந்தார். சனி, ஞாயிறு வந்தாலே ஒரே குதூகலமாகப் போகிறது.

மகாதேவன் CM