Shadow

பிக் பாஸ் 3: நாள் 78 | ‘மக்களே! கவின் பண்றதைப் பார்த்துக்கிடுங்க’ – உஷார் செய்யும் சேரன்

bigg-boss-3-day-78

சேரனின் எவிக்ஷனுக்குப் பிறகு வனிதா இன்னும் குமுறிக் கொண்டிருந்தார். அவர் கேட்ட கேள்விகளும் மிக மிக நியாயமான கேள்விகள் தான். மிக நன்றாக வேலை செய்பவர், குறை சொல்ல முடியாதபடி டாஸ்க் செய்பவர், அவரால் இந்த வீட்டில் பிரச்சினை என்று சொல்ல எதுவும் இல்லை. வீட்டில் பிரச்சினை வந்த போதும், முடிந்த வரைக்கும் அதைத் தீர்க்கப் பேசியிருக்கார். தனித்தனியாகப் பலருக்கு ஆறுதலாகவும், தேவைப்படும் நேரத்தில் வழிநடத்தவும் செய்துள்ளார். இது மட்டுமில்லாமல் மற்ற எல்லோரை விடவும் மக்களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறவர். அப்படி இருக்கும் போது, சேரனின் வெளியேற்றம் நமக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கு. வனிதாவின் அதிர்ச்சி, கொஞ்சம் மிகையாக இருந்தாலும், அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது.

இந்த வாரம் கவின் தான் போயிருக்க வேண்டுமென ஷெரின் சொன்னதில் விஷயம் இருக்கு. ஒரு பக்கம் சேரனும், இன்னொரு பக்கம் கவினும் இருந்தால் மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள்? ‘யார் ஜெயிப்பா?’ எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். ஆனால் இங்கே தலைகீழாக நடந்திருக்கு. ஒரே காரணம் தான். சேரன் தனி ஆளாக நிற்கிறார், கவின் ஒரு க்ரூப்பா நிற்கிறார். ப்ரெண்ட்ஷிப், காதல், உறவுக்கு நடுவில், க்ரூப்பா நின்றதால் அந்த ஓட்டுகளும் அவனுக்குத்தான் விழுது. இத்தனை நாளும் போட்ட ஸ்கெட்ச் எல்லாமே இந்த மாதிரியான ஒரு சூழ்நிலைக்குத்தான். ‘இது சரியா? தவறா?’ என விவாதம் நடந்து கொண்டே இருக்கு. ஆனால் இதுவும் ஒரு ஸ்ட்ராட்டர்ஜி என தான் விஜய் டிவி சொல்லாமல் சொல்றாங்க. என்ன செய்ய வேண்டுமெனத் தெரியாமல், 5 – 6 வாரம் இருந்துவிட்டு போனவர்கள் மத்தியில், வந்ததில் இருந்தே பக்காவாக திட்டம் போட்டு விளையாடின கவின் ஒரு படி மேலே தானே! அடுத்த சீசனில் உள்ள வர்றவங்களுக்கு, இப்படியும் இந்த கேமை விளையாடலாம் என ஒரு ஐடியா கிடைத்திருக்கும். நம்ம கண்ணுக்கு முன்னாடி நேர்மையும் இருக்கு, புத்திசாலித்தனமும் குறுக்குபுத்தியும் இருக்கு. அதுவும் பார்க்கிறவங்க பார்வையில் வேறுபடும். யாருக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளவேண்டியது தான்.

போன வாரத்துக்கும், அதற்கு முந்தைய வாரத்துக்கும், நேற்றிருந்த வனிதாவுக்கும் வித்தியாசத்தை உணரமுடிந்தது. ‘எனக்குத் தோன்றியதை நான் பேசுவேன். ப்ளான் பண்ணி எதுவும் செய்ய மாட்டேன்’ எனச் சொல்லும் வனிதா, நாமினேஷனில் இருந்த போது, அமைதியின் வடிவமாக இருந்தவர், கேப்டன் பதவி கிடைத்த உடனே அவர் ஆடின ஆட்டம் வேற லெவல்! ஆனால் நேற்று சேரன் போனதிலிருந்து, அந்த விஷயத்தையே கையில் எடுத்துக் கொண்டு பெர்ஃபாமன்ஸ் ஆரம்பித்துவிட்டார். ‘எங்கடா வீட்ல இருந்த வனிதாவை காணோம்?’ எனத் தேட வேண்டியதாகிவிட்டது. அமைதியின் திருவுருவமாகக் காட்சியளிக்கும் வனிதா, சேரன் எவிக்ட் ஆனதையே இந்த வாரம் தன்னோட ஸ்ட்ராட்டர்ஜியாக யூஸ் பண்ணப் போறார் போல.

தாறுமாறு பாடலுடன் 78 ஆம் நாள் தொடங்கியது.

‘கேப்டன்ஸி டாஸ்கில் கலந்துக்க மாட்டேன். அதுக்குப் பதிலா நீ கலந்துக்கிறியா?’ என ஷெரினிடம் கேட்டார் வனிதா. அப்படிச் செய்ய முடியாது என நன்றாகவே தெரியும். டாஸ்க் அறிவித்த பிறகும், பிக் பாஸிடம் இதையே சொல்ல, தலையில் தட்டி, ‘போய் விளையாடு’ எனச் சொல்லிவிட்டார்.

இரண்டு கையிலேயும் தண்ணிர் நிறைந்த பாத்திரத்தைப் பிடித்துக் கொண்டு, அரை மண்டியில் நிற்கவேண்டும். அது தான் டாஸ்க். வனிதா ஆரம்பிக்காமலே முடிக்க, தர்ஷனும், ‘என்னால முடில’ என விலகிவிட்டார். லாஸ், ‘இதை ஏத்துக்க மாட்டேன்; மத்தவங்க விட்டுக் கொடுத்து எனக்கு இது வேணாம்’ எனச் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘இந்த வாரம் கேப்டனா இருந்து உன்னை நீ ப்ரூப் பண்ணு. அதுக்கான ஒரு வாய்ப்பா இதை எடுத்துக்கோ. கேப்டன்சி ஒரு மேட்டரே இல்லை. ஃபைனல் வரும் போது நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்’ என தன்னோட நிலையைத் தெளிவாகச் சொன்னார் தர்ஷன். இதை எல்லாவற்றையும் ரகசிய அறையில் இருந்து சேரன் பார்த்துக் கொண்டிருந்தார்.

லாஸ் தான் இந்த வார கேப்டன். அடுத்தது நாமினேஷன் தான். வனிதாவைத் தவிர எல்லோரும் வனிதா பேரைச் சொன்னார்கள். லாஸ், முகினைத் தவிர எல்லோரும் நாமினேஷனில் இருந்தனர். வோட்டிங் பொறி பறக்கப் போகிறது.

பாய்ஸ் டீம் வெளியே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, சாண்டி பாட்டு பாடிக் கொண்டிருந்தார். ‘நீங்க பாடுறது கேக்கணும்னா மைக்கைச் சரியா மாட்டுங்க சாண்டி’ என பிக்பாஸ் குரல் கொடுக்க, மொத்த டீமும் வெடித்துச் சிரித்தனர். குட் ஒன்.

அடுத்ததாக ஒரு டாஸ்க் – மியூசிக்கல் நாற்காலி மாதிரி ஒரு கேம். பந்தைத் தூக்கிப் போட்டு விளையாட வேண்டும். இசை நிற்கும் போது, பந்து யாரிடம் இருக்கோ, அவங்க துண்டு சீட்டில் எழுதியிருக்கிறதைச் செய்யவேண்டும். சாண்டி லாஸ்லியா பெயரைச் சொல்ல, அவர் சாப்பிட ஜகா வாங்கினார். உப்பு டீ குடிக்கவேண்டுமென வந்த டாஸ்க்கை தர்ஷன் தானே முன் வந்து செய்து முடித்தார். ஒரு முழு கிரில்லைச் சாப்பிடவேண்டுமென அடுத்த டாஸ்க் வர, ‘என்னைக் கூப்பிடறா மச்சான்’ எனக் கேட்டு, அதை முழுதாக சாப்பிட்டு முடித்தார் தர்ஷன். மீதி பேர் நாக்கில் எச்சில் ஊறப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருந்தனர். ஐஸ் பக்கெட் குளியல் சாண்டிக்கு. கவின் தலையில் முட்டை உடைத்தார் ஷெரின். அதற்கு சாரி சொல்ல, ‘சாரிக்கு வேல்யூ இல்லேன்னு சொன்னீங்களே!” என டைமிங்கில் மடக்கினார் கவின். ஷெரின் முகம் முழுவதும் பெயின்ட் அடித்து விட்டார் தர்சன்.

இதை எல்லாவற்றையும் சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சேரன். டாஸ்க் முடிந்து எல்லோரும் வீட்டுக்குள் இருக்க, லாஸும் கவினும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தனர். கவின் ஏதோ சொல்ல, வெளியே போய்ப் பேசிக்கலாமென லாஸ் சொல்லிக் கொண்டிருக்க, அந்தப் பக்கம் சேரனிடம் ஒரு ஷார்ப்னெஸ் வந்தது. “வெளியே பார்க்கிறவங்க, வீட்டில் இருக்கிறவங்க, ஃபோன் பண்றவங்க எல்லோருமே, ‘இங்கே எதுக்கு வந்தீங்க?’ என்று தான் நம்மளை கேள்வி கேட்டுட்டு இருக்கார்கள். நாம மறுபடியும் அதைப் பற்றிப் பேசவேண்டுமா? அதான் வெளிய போய்ப் பேசிக்கலாமென முடிவு பண்ணிருக்கோம் இல்ல” என்று லாஸ் சொல்ல, அதற்கு கவின் பேசினது எனக்கு மட்டுமில்ல, லாஸ்க்கும் புரில. இதைக் கேட்ட சேரன், “இதைப் பத்தி இங்க இனிமே பேசமாட்டோம்ன்னு ரெண்டு பேருமே சொல்லிருந்தாங்க. ஆனா கவின் இப்ப லாஸைப் பேசுறதுக்கு ஃபோர்ஸ் பண்றான். நோட் பண்ணிக்குங்க மக்களே!” எனப் பார்வையாளர்களை அலர்ட் பண்ணினார்.

‘யாரும் சாப்பிடாதீங்க!’ என பிக் பாஸ் அறிவிப்பு வர, எல்லோரும் ஜாலியானார்கள். மறுபடியும் ஒரு முழு கிரில் வந்தது. சங்கடமே படாமல் தட்டோட வந்து, ‘எனக்கும்’ எனக் கேட்டான் தர்ஷன்.

மகாதேவன் CM