சதுரங்க வேட்டை இயக்குநரின் அடுத்த படைப்பு என்ற ஆவல் ஒரு பக்கம் என்றால், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் போலீஸைக் கெளரவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்று எதிர்பார்ப்பு மறுபக்கம். இந்த ஆவலையும் எதிர்பார்ப்பையும் இயக்குநர் வினோத் நூறு சதவிகிதம் பூர்த்திச் செய்துள்ளார்.
பத்து வருடங்களுக்கு மேலாக, நெடுஞ்சாலையில் ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளில் நடக்கும் கொடூரமான கொலை, கொள்ளைகளைத் துப்புத் துலக்கி, அதற்குக் காரணமானவர்களை எப்படிக் கஷ்டப்பட்டு கொள்ளையர்களின் வேரைத் தீரன் திருமாறன் கலைகிறார் என்பதே படத்தின் கதை.
ராஜஸ்தானின் பவேரியர்கள் செய்தது திருட்டில் வராது; வழிப்பறிக் கொலையில் வரும். ஐந்தல்லது ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டால் அது வழிப்பறி (Dacoity) ஆகும். பவேரியர்கள் கொடூரமாக அடித்துக் கொல்கிறார்கள் என்ற சித்தரிப்போடு நிறுத்திக் கொள்ளாமல், அம்மனநிலைக்கான பின்புலத்தையும் இயக்குநர் இணைத்துள்ளது சிறப்பு. இப்படி, பல காட்சிகளில் மிக நுணக்கமான டீட்டெயிலிங்கால் கவருகிறார் வினோத். உதாரணமாக, போலீஸ் ஸ்டேஷனின் சில செலவுகளை அரசு ஏற்காது என்ற செய்தியைச் சொல்லலாம்.
தன் கேரியர் கிராஃபில், காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு பெருமையாகச் சொல்லும் படமாக இது என்றென்றைக்கும் கார்த்திக்கு அமையும். அவரது உடலும் முகமும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாய்ப் பொருந்திப் போகிறது. ‘அப்ப இருக்கிறவங்க கிட்ட வாங்குங்க; இல்லாதவனை விட்டுடுங்க’ எனச் சொல்லும் பொழுது மாறும் அவரது முகபாவம் அசத்தல். காதல் படலத்தை விட, கல்யாணத்திற்குப் பின்னான கார்த்தியின் ரொமான்ஸ் ரசிக்க வைக்கிறது. பிரியா தீரனாக ரகுல் ப்ரீத் சிங், தனக்குரிய சிறு பங்கை அழகாகச் செய்துள்ளார்.
ராஜஸ்தான் பாலைவனத்திலும் வட மாநிலத்திலும், தமிழகப் போலீஸ் குழு மாதக்கணக்காகப் படும் சிரமங்களை அழகாகக் கடத்தியுள்ளனர். பிரம்மாண்டமான படங்கள் பார்க்கும் பொழுது, உதாரணத்திற்குப் பாகுபலியைக் கூட எடுத்துக் கொள்ளலாம், அதன் பின்னுள்ள உழைப்பைப் பற்றிப் படம் பார்க்கும் பொழுது சிந்தனை போகாது. ஆனால், இப்படம் ஒரு மலைப்பை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், கலை இயக்குநர் கதிர் என ஒட்டுமொத்த படக்குழுவின் உழைப்பின் மீது ஒரு மரியாதையும், வியப்பும் ஒருங்கே ஏற்படுகிறது. அதோடு, இக்கதையின் நிஜ நாயகனான காவல்துறை உயரதிகாரியான ஜாங்கிட்டையும் வியந்தோத வைக்கிறது.
ஒரு நல்ல ஆக்ஷன் மூவி பார்த்த திருப்தியைத் தீரன் அதிகாரம் ஒன்று தருகிறது. இயக்குநர் வினோத்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்.