Shadow

மன நலத்தில் யோகாவின் பங்கு

நியூரோக்ரிஷ் ஏற்பாடு செய்திருந்த, ‘தி புத்தி இம்மெர்ஷன் (The Buddhi Immersion)’ எனும் இண்டோ-ஜப்பான் வொர்க்-ஷாப்பில், ‘மூளை, மனம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவம்’ என்ற கருத்தரங்கம் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகள் நிகழ்ந்தன. இந்தியா முழுவதிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் பிரபலமான மருத்துவர்கள் கலந்து கொண்டு, பக்கவாதம், மூளைத்தேய்வு, பார்க்சின்சன், கைகால் இழுப்பு நோய், மன அழுத்தம், மனக்கலக்கம், மனப்பிறழ்வு, மற்றும் பல உளநோய்கள், அவற்றின் மருத்துவ முறைகள் குறித்து விவாதித்தனர்.

‘பண்டைய ஞானத்துடன் கூடிய நவீன மருத்துவம்’ குறித்த அனுபவத்தை, தி புத்தி இம்மெர்ஷன் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது. பல்வேறு கலாச்சாரங்களின் குறுக்காக, மூளை மற்றும் மனதின் இடைப்பரப்பில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகளைப் பற்றியும் விவாதம் அரங்கேறியது. அறிவியல், மருத்துவ அனுபவம், உளவியல், தத்துவம், சமூகவியல், மெஞ்ஞானம் என பன்னோக்கில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய முன்னாள் மேற்கு வங்க ஆளுநர் திரு. கோபாலகிருஷ்ண காந்தி, மறைந்து விட்ட தெய்வத்திரு. கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீநிவாஸின் மருத்துவச் சேவையைப் புகழ்ந்துவிட்டு, “ஆட்டிசம்: தி புத்தி புக் (Autism: THE BUDDHI BOOK)” எனும் புத்தகத்தினை வெளியிட்டார். வித்யா சாகர் எனும் சிறப்புப் பள்ளியில், நியூரோக்ரிஷும் ட்ரைமெடும் இணைந்து, பாரம்பரியத்தையும் நவீனத்தையும் கலந்த மருத்துவச் சிகிச்சையை சில மாணவர்களுக்கு அளித்ததன் கேஸ் ஸ்டடி தான் அப்புத்தகம்.

Autism: The Buddhi book launch

நிமான்ஸின் (NIMHANS) இயக்குநர் திரு. B.N. கங்காதர், “Yoga for integrative medical health: Neurobiological evidence” என்ற தலைப்பில் ஒரு பிரசென்டேஷனை விளக்கினார். இந்தியாவில், 150 மில்லியன் மக்களுக்கு மனநலச் சிகிச்சை தேவைப்படுகிறது எனப் புள்ளி விவரத்தை எடுத்தியம்பினார். ஆனால் 6000க்கும் குறைவான உளவியல் மருத்துவர்கள் தான் நம்மிடம் உள்ளனர். தேவையை விட 20 மடங்கு உளவியல் மருத்துவர்கள் கம்மியாக உள்ளனர் என்பது கசப்பான உன்மை.

மனப்பிறழ்வு உள்ளவர்களுக்கு வழக்கமான சிகிச்சையோடு யோகாவும் சேர்த்து அளிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களில் பேஷன்ட்களிடம் நல்ல மாற்றங்களைக் கண்டுள்ளார் கங்காதர். அவற்றுள் சில:

~ மூளையின் காபா (GABA) அளவினை அதிகரிக்க யோகா உதவுகிறது

~ யோகா, மிரர் நியூரான்களைத் தூண்டி மனப்பிறழ்வில் இருந்தும், மன அழுத்தத்தில் இருந்தும் காக்கிறது

~ மன அழுத்தத்தைத் தூண்டும் கார்டிசால் (Cortisol) அளவினைக் குறைக்க யோகா உதவுகிறது

~ கற்றல், நினைவு, சிந்தனை முதலியவற்றுக்குத் தேவையான BDNF (Brain-derived neurotrophic factor) எனும் புரதத்தின் அளவைச் சமன் செய்ய யோகா உதவுகிறது

~ வயதாக ஆக உடல் சுருங்கத் தொடங்கும். மூளையும் சுருங்குவதால், நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது. மூளையிலுள்ள ஹிப்போகேம்பஸ் (Hippocampus) தான் நினைவாற்றலுக்குக் (Long-term memory) காரணமான பகுதி. வயதானவர்களுக்கு அளித்த யோகா பயிற்சியில், சுருங்கிய ஹிப்போகேம்பஸ் விரிவடைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

~ ‘லவ் ஹார்மோன்’ என அழைக்கப்படும் ஆக்ஸிடாசின் (Oxytocin) அளவை அதிகரிக்க யோகா உதவுகிறது (ஆக்ஸிடாசின் எனும் இந்த உட்சுரப்பி, மன அமைதி, நல்ல தூக்கம், இலகுவான குழந்தைப் பிறப்பு, மற்றவர்களுடன் பழகும் சமூகத் திறன் அதிகரிப்பு, விட்டுக்கொடுத்தல், பகிர்தல் என பல முக்கியமான அம்சங்களுக்குப் பொறுப்பேற்கிறது). ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களும், மனப்பிரழ்வால் பாதிக்கப்பட்டவர்களும், ஆக்ஸிடாசின் அதிகரிப்பால் மிகுந்த பலன்களை அடைவார்கள்.

இந்நிகழ்வில், 200க்கும் மேற்பட்ட பல்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.