Shadow

தீதும் நன்றும் விமர்சனம்

Theethum-Nanrum-review

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

கணியன் பூங்குன்றனாரின் மிகச் சிறப்புமிக்க இவ்விலக்கியச் செவ்வியல் வரிகளைத் தலைப்பாக்கியுள்ளார் இயக்குநர் ராசு ரஞ்சித். அதற்காக அவருக்கு ஓர் எக்ஸ்ட்ரா பாராட்டுகள்.

ஒருவருக்கு ஏற்படும் நன்மைக்கும் தீமைக்கும், அவரவரே காரணம் அன்றி, பிறரால் அது நிகழாது என்பதே கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்குப் பொருள். படத்தின் மையக் கதாபாத்திரங்களான ஈசனும், சிவாவும் தனக்கான தீமையை அவர்களே தேடிக் கொள்கின்றனர்.

மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஈசனும், சிவாவும் நண்பர்கள். மாறன் எனும் நண்பன் ஊருக்கு வரும் நாட்களில், முகமூடி அணிந்து கொள்ளையடிக்கவும் செய்கின்றனர். அதனால் ஈசனும் சிவாவும் சிறைக்குச் செல்ல நேருகிறது. வெளியில் வந்த பின்னும், சூழ்நிலை காரணமாகக் கடைசியாக ஒருமுறை திருடலாம் என முடிவெடுக்கின்றனர். மாறனோ, கொள்ளையடிக்க என நண்பர்களை அழைத்து, ஒரு கொலை செய்துவிடுகிறான். கூடா நட்பு எப்படி கேடில் விளையும் என்பதோடு படம் முடிகிறது.

அபர்ணா பாலமுரளியும், லிஜோமோல் ஜோஸும் நாயகிகளாக நடித்துள்ளனர். ஃபஹத் ஃபாஸிலின் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தில் இவர்களது நடிப்பைப் பார்த்த ராசு ரஞ்சித், இவர்கள் இருவரையும் தனது படத்தில் நடிக்க வைத்துள்ளார். படம் இரண்டாண்டு நெடும் காத்திருப்புக்குப் பின் வெளியாகியுள்ளது. அபர்ணாவும் லிஜோமோலும், தாங்கள் ஏற்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

நாயகர்களின் நண்பனாக இன்பா நடித்துள்ளார். அவரது டயலாக் டெலிவரியும், மாடுலேஷனும் படத்தின் கலகலப்பிற்குப் பெரிதும் உதவியுள்ளது. சரியாக உபயோகப்படுத்தப்பட்டால் நல்ல நகைச்சுவை நடிகராக ஒரு வலம் வருவது உறுதி. மாறனாக சந்தீப் ராஜ் நடித்துள்ளார். படத்தில் மெயின் வில்லன் என்றே அவரைச் சொல்லலாம்.

முதற்பாதியில் இருந்த ஓர் உயிர்ப்பும் வாழ்வியலும், இரண்டாம் பாதியில் வழக்கமான கமர்ஷியல் சினிமாவாக மாறி வன்முறையைத் தீர்வாக முன்மொழிகிறது. அப்படியில்லாமல் முதல் பாதி போலவே இரண்டாம் பாதியின் திரைக்கதை ஓட்டமும் இருந்திருந்தால், படம் நல்லதொரு அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்கியிருக்கும்.

முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு (படம் எடுக்கப்பட்ட பொழுது தமிழுக்கு நாயகிகளுமே புதுசு), இயக்குநர் ராசு ரஞ்சித் தனது நேர்த்தியான மேக்கிங்கால், ரசிக்கும்படி ஒரு படத்தைத் தந்துள்ளார்.