32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

தீயவர் குலை நடுங்க தர்மமே ஜெயிக்கும்

Dinesh R சேலம் Published: 14/11/2025 4 நிமிட வாசிப்பு Updated: 24/11/2025 சினிமா
எழுத்து அளவு:

ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் த்ரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’ ஆகும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், எழுத்தாளர் அஜயன் பாலா, “தமிழில் வரவர எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போது, தமிழ்த் தலைப்பு வைத்துள்ள இந்தக் குழுவிற்கு நன்றி. தயாரிப்பாளரைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது. இம்மாதிரி தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் வர வேண்டும். அர்ஜூன் சாரைத் திரையில் பார்க்கப் பொறாமையாக உள்ளது. உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்” என்றார்.

விசிக கட்சி துணை பொதுச் செயலாளர் திரு. வன்னியரசு, “கலைஞர் தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என அறிவித்தார். இப்போது அவரது மகன் ஆட்சியில் இருக்கிறார். இன்று அருமையான தமிழில் தலைப்பு வைத்துள்ள, நல்ல கருத்தைச் சொல்லும் இம்மாதிரி படங்களுக்கு வரிவிலக்கு தர வேண்டுமென முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் எப்படி எளிதாகத் தப்பிக்கிறார்கள், அரசும் அதிகார வர்க்கம் எப்படி துணை போகிறது என்பதை இப்படம் பேசுகிறது. இதில் உண்மையான நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். மிகச்சிறப்பான ஆக்சன் நாயகியாக நடித்துள்ளார். ஆக்சன் கிங் அர்ஜூனைப் பக்கத்தில் வைத்து அவர் ஆக்சனில் நடித்திருப்பது சிறப்பு. அடுத்தடுத்து இப்படக்குழு மிகப்பெரிய படங்கள் செய்து ஜெயிக்க வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “இப்படத்தின் கரு ஒரு உண்மையான சம்பவம், இயக்குநர் சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். அவர்களுக்குப் பெரிய விழிப்புணர்வை அது தரும். கமர்ஷியல் சினிமா உலகில் இப்படி உண்மைக் கதையைச் சொல்ல முயற்சித்த தினேஷுக்கு நன்றி. அர்ஜூன் சார் ரியல் லைஃபில் உண்மையாகவே ஜெண்டில்மேன். அவர் மேஜிக்கை நேரில் பார்த்தது நல்ல அனுபவம். நான் நன்றாக ஃபைட் செய்ய அவர் தான் காரணம்” என்றார்.

இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன், “என் 15 வருட ஏக்கம் தான் இந்தப்படம். என்னவாக வந்தோம், என்னவாக இருக்கிறோம் என்னவாகப் போகிறோம் என்பது முக்கியம் என என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா அம்மாவிற்கு நன்றி. என் அப்பா தான் சினிமா ஆசையை என்னுள் தூண்டியவர். தயாரிப்பாளர் அருள்குமார் அவருக்கு ஊரில் அவ்வளவு மரியாதை, அவர் ரெண்டு படம் சரியாகப் போகவில்லை. ஆனால் அவர் உனக்கு ஒரு படம் தருகிறேன் என்றார். எனக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கையை விட அவர் என் மேல் வைத்த நம்பிக்கை அதிகம். என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார். அவர் நம்பிக்கைக்கு நன்றி. டெக்னீஷியன்ஸ் எல்லோரும் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்கள். இப்படம் பார்க்கும் போது இசையமைப்பாளரின் திறமை உங்களுக்குப் புரியும். எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் முழு உழைப்பைத் தந்தார். எழுத்தாளர் நவனீத்திற்கு நன்றி. அர்ஜூன் சார் ஷூட்டிங்கில் நிறைய கரக்சன் சொல்வார், அப்போது நிறைய விவாதிப்போம். அதெல்லாம் படம் முடிந்து பார்க்கும் போது தான் அவரின் எக்ஸ்பீரியன்ஸ் எனக்குப் புரிந்தது. அவ்வளவு ஆதரவாக இருந்தார். ஐஸ்வர்யா மேடம் மிகக் கடுமையாக உழைத்துள்ளார். அர்ஜூன் சாருக்கு சமமான பாத்திரம். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் நிறைய நடிகர்கள் எல்லோரும் கதைக்கு முக்கியத்துவமாக இருப்பார்கள். இந்தப்படத்தில் அனிகா குழந்தை நட்சத்திரம் முக்கியமான கேரக்டர். அதை அவ்வளவு தத்ரூபமாக சூப்பராக நடித்துள்ளார். படம் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

நடிகர் அர்ஜூன், “எனக்கு இது மிக முக்கியமான படம், எனக்கு எல்லாப் படமுமே முதல் படம் போலத்தான். தயாரிப்பாளர் அருள்குமார் பூ வித்தாகச் சொன்னார்கள், ஆனால் அவர் சினிமா மீது வைத்திருக்கும் அன்பு தான் அவரைத் தயாரிப்பாளர் ஆக்கியுள்ளது. எல்லோரையும் மதிக்கும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனதிற்காகவே இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நான் நிறைய புதிய இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன். இயக்குநர் தினேஷ், என்னுடன் நிறைய விவாதித்தாக சொன்னார். ஆனால் எல்லாமே படத்திற்காகத் தான், படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோ அவர் தான், இவர் தான் என்றார்கள், ஆமாம் இப்படத்தில் மூன்று ஹீரோ, பிரவீன் ஒரு ஹீரோ, ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொரு ஹீரோ. ராஜேஷ் அவரது தந்தையின் பெயர், அவர் சின்ன வயதில் தவறிவிட்டார். அவரும் நடிகர் தான், அவருடன் நான் சில படங்களில் நடித்துள்ளேன் அவர் எனக்கு சிறந்த நண்பர். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை, அவர் இன்னும் வளர வாழ்த்துக்கள். தங்கதுரையுடன் ஷூட்டிங்கில் அதிகம் சுற்றிக் கொண்டிருப்பேன் நல்ல மனிதர். எல்லோருடைய ஆசீர்வாதமும் அன்பும் இப்படத்திற்குக் கிடைக்க வேண்டும்” என்றார்.

சட்டத்தைத் தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தைத் தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில், நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.