
‘இளைஞர்களைத் தூண்டி விடுதல் என்ற பொருளில் திரி எனப் படத்திற்குத் தலைப்பு வச்சிருக்கேன்’ என இயக்குநரே தனது தலைப்பிற்கான பொருளை இசை வெளியீட்டு மேடையில் விளக்கியுள்ளார்.
படித்த மாணவனுக்கும், அரசியல் செல்வாக்குள்ள கல்வியறிவு இல்லாக் கல்லூரித் தாளாளருக்கும் நடக்கும் பிரச்சனையே ‘திரி’ படத்தின் கதை.
கதைக்குள் செல்வதற்கு முன், பாரம்பரியமான முறையில் மிக அதிக நேரத்தைக் கதாபாத்திர அறிமுகத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளார் இயக்குநர் அசோக் அமிர்தராஜ். ஹீரோவின் தந்தை, ஒழுக்கத்தின் மீது செலுத்தும் அதீத கவனத்தைத் தேவைக்கும் அதிகமான காட்சிகள் மூலம் பதிந்துள்ளனர். அதாவது, கதையோடு பொருத்திச் சொல்லாமல், தனிக் காட்சிகளாகச் சொருகியுள்ளார் இயக்குநர்.
அஷ்வினுக்கும் ஸ்வாதிக்கும் இடையேயான காதல் காட்சிகள் சொதப்பல் ரகம். சுவாரசியப்படுத்த வேண்டிய காட்சிகளை எல்லாம் தவறவிட்டது படத்தின் மிகப் பெரிய பலவீனம். படத்தின் முதல் பாதியில், வசைச்சொல் பொறுக்காமல் ஹீரோ அவசரப்பட்டு கை நீட்டி விடுவதால் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். படத்தின் இரண்டாம் பாதியிலோ, ‘படிக்காதவன்கிட்ட காலேஜ் இருக்கிறதால தான் கல்வி இப்படிச் சீரழியது’ என அறச்சீற்றம் கொள்கிறார் ஹீரோ.
வில்லனாக நடித்திருக்கும் ஏ.எல்.அழகப்பன் ரசிக்க வைக்கிறார். அவரது மகனாக நடித்திருக்கும் அர்ஜெய் தான் பிரதான வில்லன். எனினும் அவர் இரண்டு காட்சிகளில் மட்டுமே வில்லத்தனம் செய்கிறார். அதிகாரத்தை சாமானியன் ஒருவன் எதிர்க்கிறான் என்ற பழக்கப்பட்ட மையக் கதையை, புதுமையான சுவாரசியமான திரைக்கதை மூலமே கொண்டு செல்ல முடியும். அதற்கான மெனக்கெடல்கள் இல்லாதது அப்பட்டமாகக் காட்சிகளில் பிரதிபலிக்கிறது.
இரண்டரை மணி நேர படத்தை 20 நிமிடம் குறைத்திருந்தாலும், படத்தின் நீளம் சற்று சோர்வடைய வைக்கவே செய்கிறது. காரணம், காட்சிகளாக நன்றாக இருக்கும் படம், ஒன்றோடொன்று தனித்தும் கோர்வையற்றும், ஒட்டுமொத்த படமாகப் பார்க்கும் பொழுது அயற்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
படத்திலுள்ள ஒரே இயல்பான சங்கதி, தந்தையாக நடித்திருக்கும் ஜெயப்ரகாஷ் தான். அஷ்வினை மொட்டை மாடிக்கு அழைத்துப் பேசும் அந்தக் காட்சியில், பார்வையாளர்களில் சிலருக்கேனும் கண் கலங்கும் என்பது திண்ணம். தந்தைக்கு மகன் மேலுள்ள நம்பிக்கையும் பாசமும் வெளிப்படும் தருணங்கள் மிக அபூர்வம். அதை வெகு அழகாகச் சித்தரித்துள்ளார் இயக்குநர்.