
சீசர், தனது தலைமைக் குணத்தால் மனிதக் குரங்குகளை மட்டுமல்ல, மனிதர்களையும் கவர்ந்த ஒப்பற்ற தலைவர்.
மனிதர்களின் கொலை வெறித் தாக்குதல்களில் இருந்து தன் இனத்தைக் காக்க நினைக்கிறார் சீசர். அதற்கு முன்பே கலோனலால் அவரது மனைவியும் மகனும் கொல்லப்படுகிறார்கள். சினம் கொள்ளும் சீசர், தன் இனத்தைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி விட்டு, கலோனலைக் கொன்று பழி வாங்கப் புறப்படுகிறார். சீசர் கலோனலைக் கண்டுபிடிக்கும் முன், கலோனல் அவரது இனத்தைப் பிடித்துச் சிறையில் அடைத்து, அடிமைகள் போல் வேலை வாங்குகிறார். சீசரும் கலோனலிடம் சிக்கிக் கொள்ள, ஏப்ஸ்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே இந்த அற்புதமான படத்தின் கதை.
லோகன் படத்தை, சிறுமி டாஃப்னீ கீன் அழகாக்கியது போல், இப்படத்தை அமியா மில்லர் எனும் சிறுமி அற்புதமாக்கியுள்ளார். மனிதக் குரங்கு லூக்கா இறக்கும் பொழுது, அதன் காதில் பூவை வைத்து சிறுமி சிந்தும் கண்ணீர், பார்வையாளர்களைக் கனத்த மெளனத்திற்கு இட்டுச் செல்கிறது. படத்தின் தொழில்நுட்ப அபாரம், நம்மில் ஒருவர் இறப்பதாகவே நம்ப வைக்கிறது. மைக்கேல் ஜியாசினோவின் இசை படத்தின் மிகப் பெரிய பலம். புன்னகையுடன் தடுப்பை மீறி, சிறையில் வாடும் சீசருக்கு உணவும் தண்ணீரும் அச்சிறுமி அளிக்கும் காட்சி தரும் உணர்வெழுச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. தவற விடாமல் பார்த்து விடுங்கள்.
கோபாவின் (போன பாகத்து வில்லன் ஏப்) ஆளான ரெட் எனும் கொரில்லா, சீசருக்குப்பயந்து கலோனலிடம் கழுதையாக மாறி வேலை செய்கிறது. அதன் முதுகில் DONKEY என எழுதி, டான்க்கி என்றே அழைக்கவும் செய்கின்றனர். தனது இனத்திற்காகத் தன்னந்தனியராகப் போராடும் சீசரைக் காப்பாற்ற, ரெட் செய்யும் தியாகம் மகத்தான ஆச்சரியம். உண்மையான தலைவனுக்குரிய மரியாதையை, இதை விட வேறு எவராலும் தந்துவிட முடியாது. அதிலும், சீசரைக் கடைசி வரை எதிரியாகவே ரெட் பாவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘மேட் ஏப் (Mad Ape)’ எனும் கதாபாத்திரத்தின் மூலம் நகைச்சுவைக்கும் உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர். விஷூவலின் தத்ரூபமும் ஒரு பக்கம் கவர்ந்திழுக்கிறது என்றால், மறுபுறம், உணர்ச்சிகளில் நம்மைத் தத்தளிக்க விடுகிறார் இயக்குநர் மேட் ரீவ்ஸ். ‘பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே!’ என சீசர் கலோனலைச் சுடச் சென்று, கலோனலது பரிதாப நிலையைச் சட்டென உணர்ந்து அமைதியாகத் திரும்புகிறார். மனதில் கனன்று கொண்டிருக்கும் வெறுப்பைத் தீர்த்துக் கொள்ளாமல், கோபத்திலும் நிலைமையை உணரும் சீசரின் மாண்பை என்னவென்று சொல்ல!
இந்தப் பார்ட்டோடு, இந்த சீரிஸ் முடிவது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. சீசருக்கு அழகாய் விடை கொடுத்துள்ளார் இயக்குநர்.
‘தன் இனத்தை மிகவும் நேசித்த ஒரு தலைவன் இருந்தான். அவன் பெயர் சீசர்’ எனப் படம் பார்த்தவர்களின் நினைவுகளில் என்றென்றும் சீசர் நீர் வாழ்வீர்!