32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பண்டிகை விமர்சனம்

Dinesh R சேலம் Published: 14/07/2017 2 நிமிட வாசிப்பு Updated: 12/01/2018 சினிமா
எழுத்து அளவு:

Pandigai movie review

சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் சண்டைப் போட்டிக்குப் பெயர் தான் பண்டிகை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பணத் தேவையின் பொருட்டு, நாயகன் கிருஷ்ணாவைப் பண்டிகையில் தோற்கும்படி பேசித் தயார் செய்கிறார் சித்தப்பு சரவணன். நாயகனோ சண்டையில் வென்று விட, சரவணனோ குடும்பம், வீடு, கடை என அனைத்தையும் இழந்துவிடுகிறார். அதிலிருந்து சரவணனை நாயகன் எப்படி மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

விறுவிறுப்பான முதற்பாதி ஒரு கதையாகவும்; இரண்டாம் பாதியைத் தனிக் கதையாகவும் கொண்டு திரைக்கதை நீள்கிறது. கிருஷ்ணாவின் கேரியரில் இது அவருக்கு மிக முக்கியமான படமாக அமையும். படபடப்பாகப் பேசி, சதா துள்ளலான உடல்மொழியுடன் தோன்றும் கதாபாத்திரங்களை விட, இந்த சீரியசான ரோல் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. அறிமுக இயக்குநர் ஃபெரோஸ், கிருஷ்ணாவிடமிருந்து மிகத் தேர்ந்த நடிப்பை வாங்கியுள்ளார்.

படத்தின் ஆச்சரியங்களில் ஒன்றாக நிதின் சத்யா உள்ளார். முந்திரி சேட்டு கதாபாத்திற்கு நிதின் சத்யா பொருந்துவார் எனக் கணித்ததிலேயே இயக்குநராக ஃபெரோஸ் வென்றிட்டார் எனலாம். மதுசூதனன் வழக்கம் போல் நட்வர் எனும் பெயரில் தாதாவாக நடித்துள்ளார். சிறிது நேரமே வந்தாலும், ராட்டினம் குமாராகக் கலக்கியுள்ளார் கருணாஸ். படத்தில் வரும் ட்வின்ஸ் எபிசோட் தனித்துத் தெரிந்தாலும் நன்றாக உள்ளது.

Pandigai Nithin Sathya

சூதாட்டத்தில் பணம் பார்த்து விட வேண்டுமென நினைக்கும் முனி சேகராகச் சரவணன் மிக இயல்பாய் நடித்துள்ளார். காவியாவாகக் கயல் ஆனந்தி நடித்துள்ளார். ஆனந்தி, கிருஷ்ணாவின் காதலை அங்கீகரிக்கும் இடம் ரசிக்க வைக்கிறது. ஆனந்தி பீர் குடித்து விட்டு, போதையில் கிருஷ்ணாவிற்கு ஃபோன் செய்யும் காட்சியைத் தவிர்த்து, மற்ற காட்சிகள் அனைத்துமே ரசிக்கும்படி உள்ளது.

பிளாக் பாண்டியால் படத்தின் கலகலப்பிற்கு உதவ முடியவில்லை. ஆனால், கிருஷ்ணாவின் நண்பராக ‘தி பார்க்’ ஹோட்டலில் வேலை செய்யும் பெளன்சராக வரும் நபர் கவனிக்க வைக்கிறார். ஸ்டன்ட் இயக்குநர்களான அன்பும் அறிவும், ஸ்ட்ரீட் ஃபைட்டை ரசிக்கும்படி வடிவமைத்துள்ளனர். ரெமியனின் கலை இயக்கமும், அர்வியின் ஒளிப்பதிவும் படத்தின் டோனை (tone) அழகுற அமைக்க உதவியுள்ளது.

ஃபெரோஸின் முதற்படமே ரசிகர்களுக்கான திரைக் கொண்டாட்டத்தை உறுதி செய்துள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.