Search

திருட்டுப்பயலே – 2 விமர்சனம்

Thiruttupayale 2 movie review

அவன் இவன் ரகசியத்தை, இவன் அவன் அந்தரங்கத்தை என ஒருவரை ஒருவர் தொழில்நுட்பத்தின் உதவிக் கொண்டு உளவு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவனா, இவனா, வல்லவன் எவனோ அவனே வெல்வான் என்பதுதான் படத்தின் கதை.

உளவுத்துறைப் பிரிவைச் சேர்ந்த ஒட்டு கேட்கும் காவல்துறை அதிகாரி செல்வமாக பாபி சிம்ஹா நன்றாக நடித்துள்ளார். அவரொரு காட்சியில், தன் அம்மாவின் கையைப் பிடித்தவாறு, “தொழில்நுட்பம் கொல்லுதும்மா” என்பார். அது தான் படத்தின் மையச் சரடு. நம்மைச் சுற்றிச் சுற்றி ஆயிரம் கண்களுடனும், ஆயிரம் செவிகளுடனும் இருக்கும் தொழில்நுட்பத்தில் இருந்து ஓடவோ ஒளியவோ முடியாது என்பதுதான் படம் அச்சுறுத்தும் உண்மை.

கூடவே வாழ்ந்தாலும், தன் மனைவி அகல் விளக்கின் ரசனைகள் பற்றி பாபி சிம்ஹாவிற்குப் பெரிதாய்த் தெரிவதில்லை. ஆனால், அகல்விளக்கிற்கு ஃபேஸ்புக்கில் நண்பராய் இருக்கும் பால்கி எனும் பாலகிருஷ்ணனுக்கு எல்லாம் தெரிகிறது. அகல்விளக்காய் அமலா பாலும், பால்கியாக பிரசன்னாவும் கலக்கியுள்ளனர். தம்பதியான அமலா பால், பாபி சிம்ஹா வீட்டுக்கு பிரசன்னா வருகை புரிவார். அது, படத்தின் மிக அற்புதமான காட்சிகளில் ஒன்று. பிரதான பாத்திரங்கள் மூவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். இயக்குநர் சுசி கணேசன் மனித மனங்களோடு அநாயாசமாய் விளையாடியுள்ளார்.

தன் நண்பனின் மானம் கப்பலேறியதும், ஐ.ஜி.யாக நடித்திருக்கும் ‘வழக்கு எண் 18/9’ முத்துராமன் காட்டும் இரட்டை முக பாவனை நல்ல நகைச்சுவை. எனினும், நம் ஒவ்வொருவருக்குள்ளுமே பல முகங்கள் உள்ளன என்ற குறியீட்டுக் காட்சியின் நீட்சியே அது. ஆனால், ஒற்றை முகத்துடனே உலாவும் பிரசன்னா மிரட்டியுள்ளார். அப்படியொரு மனிதன் நம் வாழ்வில் குறுக்கிட்டால், அவனை எப்படி எதிர்கொள்வது என்ற கிலேசத்தை விதைக்கிறார். ஃபேஸ்புக் மீதும் தொழில்நுட்பம் மீதும் ஓர் அசூயையைப் படம் உருவாக்குகிறது என்றால், சந்தேக கேஸ் ஆண்களின் வயிற்றில் கண்டிப்பாகப் புளியைக் கரைத்து விடும். பாவம் அந்த வீட்டுப் பெண்கள். அமலா பால், இருதலைக் கொள்ளி எறும்பாகத் துடிப்பதை அழகாகத் திரையில் கொண்டுள்ளார். தானேற்ற கதாபாத்திரத்தின் கோபத்தையும் இயலாமையையும் அழகாகக் காட்டியுள்ளார் பாபி சிம்ஹா. இருவரும் முதலில் சந்தித்துக் கொள்ளும் காட்சியும், கல்யாணத்திற்கு முன்னும் பின்னுமான காதல் போர்ஷனும் ரசிக்கும்படி உள்ளது. 

படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் உண்டெனினும், சுசி கணேசன் பதைபதைக்க வைக்குமளவு திரைக்கதையை அமைத்துள்ளார். அரசியல்வாதியிடம் இருந்து பணத்தைத் திருடுபவனை வெறுக்க முடியாததும், மாற்றான் மனைவியை அடைய நினைப்பவனை அடியோடு வெறுப்பதும், பொதுப்புத்தியின் இயல்பான மன வெளிப்பாடு. சுசி கணேசன், இந்தப் படத்தின் டோனாக இப்பொதுப்புத்தியை உபயோகித்து மிக மிக லாவகமாய்ப் படத்தை முடித்து வைக்கிறார். அதுவும் படம் முடிந்ததாக நினைத்த பின்னும் வரும் கடைசி நிமிட ட்விஸ்ட், தலைப்புக்கு மிகக் கச்சிதமாய்ப் பொருந்திப் போவது சிறப்பு.